politics

img

ஜனநாயகம் காக்கும் காலாட்படை வீரர்கள்

2019 மே 9 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் கொல்கத்தா பதிப்பில் ஒரு செய்திக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. “சிவப்பு, காவி நிறமாக மாறும்போது” என்று தலைப்பிடப்பட்டு, “தீதிக்கு எதிரான (மம்தாவுக்கு எதிரான) போராட்டத்தில் சத்தமில்லாமல் பாஜகவுக்கு உதவி செய்யும் சிபிஎம் ஊழியர்கள்” என்று உப தலைப்புடன் அக்கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. மோகுவா சட்டர்ஜி என்பவர் அதை எழுதியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியும், அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்களைப் பற்றியும் மிக மிக இழி நோக்கத்துடன் அவதூறு செய்யும் அப்பட்டமான பொய்களுடன் அக்கட்டுரை திட்டமிட்டு எழுதப்பட்டிருக்கிறது.கட்டுரையாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி முற்றிலும் தவறான, முற்றிலும் அவதூறான தகவல்களை பதிவு செய்திருக்கிறார். மேற்குவங்கத்தில் விரைவில் சமூகநல்லிணக்கத்திற்கே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தீங்கு விளையக்கூடும் என்ற தொனியுடன் மிகவும் அதிர்ச்சியை பரப்பும் விதத்தில் அவர் அக்கட்டுரையை எழுதியிருக்கிறார். மோகுவா சட்டர்ஜி என்ற அந்தப் பெண்மணி, தற்போது நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், வாக்குச்சாவடிகளை தங்கள் வசப்படுத்திக் கொள்ள முனையும் பாரதிய ஜனதா கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் என்று, சற்றும் அடிப்படை இதழியல் விதிகள் எதையும் மதிக்காமல், முற்றிலும் பொய்களைக் கொண்டு கட்டுரையை கட்டமைத்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எந்தவொரு ஊழியரின் கருத்துக்களையோ அல்லது கட்சியின் வாக்குச்சாவடி முகவரின் கருத்துக்களையோ கூட அவர் மேற்கோள் காட்டவில்லை. யாரோ ஒருவர் சொன்னதாகக் கூட அவர் குறிப்பிடவில்லை. கட்சியின் கருத்தை கேட்பதற்கு ஒரு சிறு முயற்சி கூட அவர் மேற்கொள்ளவில்லை. அந்த ஒட்டுமொத்தக் கட்டுரையும், பெயர் தெரியாத - அடையாளம் தெரியாத பாஜக உறுப்பினர் ஒருவர் சொன்னதாக குறிப்பிட்டு எழுதப்பட்டிருக்கிறது. இது ஆதாயம் பெறுவதற்காக அவதூறை அள்ளிவீசி எழுதப்பட்டிருக்கிற கட்டுரை; முற்றிலும் கட்டுரையாளரின் கற்பனை வடிவம்.

உண்மையில் மேற்குவங்கத்தில் என்ன நடக்கிறது?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் இந்த மாபெரும் தேர்தல் போராட்டத்தில் தங்களின் உயிரை பணயம் வைத்திருக்கிறார்கள். அனைத்து குடிமக்களும் தங்களது சொந்த வாக்குகளை பதிவு செய்வதை உறுதிசெய்வதற்காக மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் காலாட்படை வீரர்களாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் களமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாபெரும் போராட்டத்தில், ஏராளமான இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் திரிணாமுல் குண்டர்களால் கொடூரமாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். பல தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தபின்னரும் கூட தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதுதொடர்பாக எண்ணற்ற செய்திகள், வீடியோ வடிவமாக, புகைப்படங்களாக, செய்தித் தொகுப்புகளாக சமூக ஊடகங்களில் நிறைந்து கிடைக்கிறது. அந்த விபரங்களை பார்த்தாலே போதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் தங்களது வாக்குச்சாவடிகளைப் பாதுகாப்பதற்காக உணர்ச்சிக் கொந்தளிப்புடன் கூடிய போராட்டத்தை எப்படியெல்லாம் நடத்தியிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். டைம்ஸ் ஆப் இந்தியா ஏட்டின் சகோதர ஏடான ‘எய் சமய்’ என்ற வங்கமொழி நாளேட்டில் வெளியான செய்திகளை ஆய்வு செய்தாலே இந்த உதாரணங்களை உறுதிசெய்து கொள்ள முடியும்.

பாரதிய ஜனதா கட்சியிடமிருந்தும் திரிணாமுல் காங்கிரசிடமிருந்தும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு மற்ற பல்வேறு நாளிதழ்கள் மற்றும் ஏடுகளைப் போலவே எப்படி லட்சக்கணக்கான ரூபாய் பெறுமான விளம்பரங்களை இடைவிடாமல் பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை, அரசியல் விழிப்புணர்வு மிக்க மேற்குவங்க வாக்காளர்கள் நன்கு அறிவார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் வரிசெலுத்தும் எளிய மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும், ஊடகங்களில் எண்ணற்ற விளம்பரங்களை வெளியிட்டுக் கொண்டிருப்பது தொடர்பாக வங்க மக்களிடையே கடுமையான கோபம் இருக்கிறது. விளம்பரங்கள் வாயிலாக மேற்படி ஊடகங்களுக்கு இந்தக் கட்சிகள் பணம் கொடுப்பது என்பது, பணத்தால் ஊடகத் தர்மத்தை விலைபேசுவது என்கிற ஏற்பாடே ஆகும். இதை மேற்குவங்கத்தின் ஒவ்வொரு வாசகரும், தொலைக்காட்சி நேயரும், வாக்காளரும் தெளிவாக அறிவார்கள்.கடந்த சில மாதங்களாக மேற்குவங்கத்தில் பல்வேறு கடுமையான மக்கள் பிரச்சனைகள் எழுந்திருக்கின்றன. அனைத்துமே இளைய தலைமுறையினரின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சனைகளாகும். இந்தப் பிரச்சனைகள் எதையும் மேற்படி ஊடகங்கள் வெளியிடக்கூட இல்லை. முற்றாக அலட்சியப்படுத்தின. அது, மாதக்கணக்கில் பட்டினி போராட்டம் நடத்திய எஸ்எஸ்சி தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களாக இருந்தாலும் சரி; தங்களது ஊதியத்தில் ஊழல் நடந்துவிட்டது என்று ஆதாரப்பூர்வமாக விபரங்களை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்திய இளம் கணினி ஆசிரியராக இருந்தாலும் சரி, யாரையுமே ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் மிகக்கடுமையான முறையில் திரிணாமுல் அரசின் காவல்துறையால் தாக்கப்பட்ட போதிலும் அந்தப் போராட்டங்களை பெரிதாக வெளியிடாமல் அலட்சியப்படுத்தின.மம்தா பானர்ஜியை விமர்சிக்கும் திரைப்படமான ‘போபிசியோட்டர் பூத்’ எனும் படத்தை வெளியிடவிடாமல் திரிணாமுல் குண்டர்கள் அராஜக வன்முறை நடத்தியதை கூட கொல்கத்தாவில் இருக்கும் ஊடக நிறுவனங்கள் கண்டுகொள்ளாமல் விட்டன. அந்தச் செய்தியை வெளியிட்டால் முதலமைச்சரான மம்தாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி நடுங்கின மேற்படி ஊடகங்கள்.

இத்தகைய சூழலில் மாநிலத்தில் நிலவுகிற மோசமான அரசியல் நிலைமை குறித்து மேற்குவங்க மக்கள் கடுமையான அதிர்ச்சியும் எச்சரிக்கையும் அடைந்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கூட மிகக் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டிருக்கிற, அவர்களுக்கு இந்த அரசிடமிருந்து எந்த நீதியும் கிடைக்காது என்று நம்பிக்கை இழந்துபோயிருக்கிற அளவிற்கு ஊழலும் வன்முறையும் நிறைந்த திரிணாமுல் காங்கிரசின் ஆட்சியில் வங்கத்தின் ஒட்டுமொத்த மக்களும் நிம்மதி இழந்து தவிப்பின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலைமையை தனக்குச் சாதகமாக்கி அதில் குளிர்காய்ந்து கொள்ளலாம் என்று எண்ணும் பாஜக, சமூக பதற்றத்தை உருவாக்கிட தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது; மேலும் வன்முறை வெறியாட்டங்களை தூண்டிவிட முயற்சித்துக் கொண்டிருக்கிறது.இது மேற்குவங்கத்தில் முன்னெப்போதும் இல்லாத மிகக்கடுமையான அரசியல் நெருக்கடி காலமாக மாறியிருக்கிறது. இத்தகைய தருணத்தில் ஊடகங்கள் ஒரு பொறுப்புமிக்க நேர்மையான பங்களிப்பினை செய்திட வேண்டும்; ஊழல், வன்முறை, மதவாதம் ஆகியவற்றை தூண்டிவிடுகிற கயவர்களை அம்பலப்படுத்துவதன் மூலமாக அதைச் செய்திட வேண்டும். 

ஆனால் அதற்கு மாறாக, ஊடகங்கள், தற்போதைய தேர்தலில் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையில்தான் போட்டி என்று திட்டமிட்டு ஒரு போலியான ஒரு சித்திரத்தை முற்றிலும் தவறான விபரங்களோடு தொடர்ச்சியாக உருவாக்கி வருகின்றன. குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சியைப் பற்றி முற்றிலும் வடிகட்டியப் பொய்களை - அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. இது ஊடகப் போலித்தனமே அன்றி வேறல்ல.மேற்குவங்க மக்களின் நலன்காக்க, தொழில்முறை ரீதியான நேர்மையையும், ஒருங்கிணைப்பையும் பின்பற்றுமாறு மேற்குவங்க ஊடகச் சமூகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. தவறான, உண்மை விபரங்கள் அற்ற செய்திகளை வெளியிடுவதிலிருந்து விலகி நிற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது. மாநிலத்தில் ஒரு பாதகமான சூழ்நிலைமையை உருவாக்க வேண்டாம் என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையையும் எதிர்காலம் சூனியமாகிவிடுமோ என்ற மனநிலையையும் விதைக்க வேண்டாம் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. மாநிலத்தில் மக்களுக்குச் சாதகமான மாற்று உண்டு என்பதை மக்களிடையே எடுத்துச் செல்லுமாறும், மக்கள் நலன் காக்கும் அரசியலுக்கு போதுமான இடம் ஒதுக்குமாறும், கொடூரத்தின் பிடியில் சிக்கியுள்ள மேற்குவங்க மக்களின் மனதில் நம்பிக்கையை விதைக்குமாறும் ஊடகங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழில் : எஸ்.பி.ராஜேந்திரன்

;