politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

கொரோனா தடுப்பூசி தற்போது நாளொன்றுக்கு 51லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வேகத்தில் மட்டுமே சென்றால் 2021 டிசம்பர் இறுதியில் வெறும் 34சதவீதம் மக்களுக்கு மட்டுமே இந்தியா தடுப்பூசி செலுத்தியிருக்கும் என்ற நிலை உள்ளது. மூன்றாவது அலை அக்டோபரில் தீவிரமாகக்கூடும் என்ற எச்சரிக்கைகள் வந்துள்ள நிலையில், அதைத் தடுத்து நிறுத்தவேண்டுமானால் நாளொன்றுக்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் 2021 டிசம்பருக்குள் 60சதவீதம் மக்களுக்காவது செலுத்திவிட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வயது வந்த ஒட்டுமொத்த மக்களுக்கும் டிசம்பர் இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திவிடுவோம் என்று முதலில் கூறியதற்கு மாறாக 60 சதவீதம் என்று தடாலடியாக இலக்கினைகுறைத்து நிர்ணயித்திருக்கிறது அரசு. இதை எட்டுவதற்கும் கூட இவர்களிடம் திட்டம் இல்லை என்பதுதான் உண்மை. எனவே போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி விநியோகத்தை மோடி அரசு உறுதி செய்ய வேண்டும்.

                                           *****************

பொருளாதார வளர்ச்சி என்பதுஇயல்பாகவே கிராமப்புறங்களி லிருந்து நகர்ப்புறங்களுக்கும் தொழில் மையங்களுக்கும் மக்கள் இடம்பெயர்தலோடு நேரடித் தொடர்பு கொண்டது. மாறாக, மக்கள் நகரங்களிலிருந்து மீண்டும் கிராமங்களை நோக்கி இடம்பெயர்வது என்பதன் பொருள் பொருளாதார மந்தம், வேலைவாய்ப்பு வீழ்ச்சி, வறுமை அதிகரிப்பு, பசித் துயரம், இதர வாழ்வியல் துன்பங்கள் என்பதுதான். 2017-18ல் இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சந்தையில் வேலைவாய்ப்பு தரக்கூடிய தொழிலாக விவசாயத்தின் பங்களிப்பு 35சதவீதமாக இருந்தது. உற்பத்தித் துறையின் பங்களிப்பு 10சதவீதமாக இருந்தது. படிப்படியாக இந்த நிலை மாறி 2020-21ஆம் ஆண்டில் விவசாயத்தின் பங்களிப்பு கிட்டத்தட்ட 40 சதவீதத்தை தொட்டிருக்கிறது. உற்பத்தித் துறையின் பங்களிப்பு அதே அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் நிலை என்ன என்பதை இந்த விபரமே உணர்த்தும். மோடி ஆட்சியின் மெகா பேரழிவு இது.  மோடி ஆட்சியில் மக்களின் வாழ்வு சிதைக்கப்பட்டி ருக்கிறது. இப்போதாவது உடனடியாக மக்களின் கைகளில் பணம் கொடுங்கள்; இலவச உணவுப் பொருட்களை வழங்குங்கள்.

                                           *****************

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கிறார். தேசிய பணமாக்கல் திட்டம் என்று அதற்கு பெயர்(National Monetisation Pipeline).இதன் பொருள்என்னவென்றால், அடுத்த நான்காண்டு காலத்தில் பெருமளவிலான மத்திய பொதுத்துறைசொத்துக்களையெல்லாம் விற்றுத் தீர்ப்பது என்பதுதான். நிதி அமைச்சரின் திட்டம் மக்களின் வளங்களையெல்லாம் சுரண்டி தேசத்தின் சொத்துக்களையெல்லாம் சூறையாடி, மக்களை ஏதிலிகளாக மாற்றுவதற்கான ஒரு செயல்திட்டமேதவிர வேறல்ல. நாட்டின் வளங்களையெல்லாம் வலிந்து பறிப்பதற்கான திட்டம் இது. இந்த சொத்துக்களுக்கெல்லாம் நாட்டின் மக்கள்தான் உரிமையாளர்கள். அரசாங்கங்கள் வரலாம், போகலாம். மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற் கான வெறும் மேலாளர்கள்தான் அரசாங்கங்கள். ஆனால் இப்போது உரிமையாளர்களின் அனுமதியே இல்லாமல் மேலாளரே சொத்துக்களை விற்பது என்பது மிகவும் அநீதியானது. மோடி அரசு தனது கொள்கையை திரும்பப்பெறும் வகையில் மக்கள் கடுமையான எதிர்ப்பினை உருவாக்கிட வேண்டிய தருணம் இது. 

;