சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் ஏட்டு வீரவேல் தூக்குமாட்டி தற்கொலை. சென்னை கீழ்ப்பாக்கம் ஐஜி அலுவலகத்தில் மணிகண்டன் என்பவர் தனது பிறந்த நாளில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை. திருச்சி பெண்கள் சிறையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 தற்கொலைகள் இப்படி தமிழகத்திலுள்ள பல்வேறு காவல்நிலையங்களில் காவல்துறையினரின் தற்கொலை பட்டியல் சொல்ல முடியாத அளவிற்கு நீண்டு கொண்டே போகிறது.
மதுரை மாவட்டம் நக்கலப்பட்டியைச் சேர்ந்த காவலர் சதீஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் உமையொருபாகம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சாப்டுரைச் சேர்ந்த ராமர் என்பவர் மதுரை ஆயுதப்படை காவல்துறை ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தம். இவர்களுக்கு 6,4, வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மதுரை ஆயுதப்படை வளாக குடியிருப்பில் ராமர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பணிச்சுமை, மேலதிகாரிகளின் அழுத்தத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு மின் விசிறியில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (50). 1998ம் ஆண்டு முதல்நிலை சிறைத்துறை பணியில் சேர்ந்தார். 2014-ம் ஆண்டு முதல்நிலை சிறைக் காவலராக பதவி உயர்வு பெற்று, பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு தன்னை பணிமாற்றம் செய்யும்படி உயர் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளார். அவருடன் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பழைய இடத்துக்கு பணி செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சிவக்குமாருக்கு பணிநியமனம் வழங்காமல் இழுத்தடித்துள்ளனர். இதற்கிடையே தன் மகள் திருமணத்துக்காக 15 நாட்கள் விடுமுறை அளிக்கும்படி மத்திய சிறை தண்டனை கைதிகள் பிரிவு கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். விடுமுறை தர செந்தில்குமார் மறுத்துவிட்டார். இதனால் 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் ஊருக்குச் சென்றார். மகள் திருமணம் முடிந்து மீண்டும் வேலையில் சேர வந்தார். அப்போது உன்னை மீண்டும் பணியில் சேர அனுமதிக்க மாட்டேன் வெளியே போய்விடு; உன்னை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கப் போகிறேன் என்று கண்காணிப்பாளர் திட்டி வெளியே அனுப்பியுள்ளார். மீண்டும் பணியில் சேர்க்கும்படி சிவக்குமார் வெகுநேரமாக கெஞ்சியதுடன் ஒரு கட்டத்தில் செந்தில்குமார் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுள்ளார். இதன்பிறகும் அவர் மசியவில்லை. இதனால் மனமுடைந்த சிவக்குமார் சிறைத்துறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர் குடியிருப்பில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக மக்கள் தொகைக்கு ஏற்றவாறு காவல்துறையின் எண்ணிக்கை இல்லை. இதனால் தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை.
இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள், “தமிழகத்தில் காவல்துறை கூடுதல் பணி சுமையுடன் பணிபுரிகின்றனர். இதனால் காவல்துறையினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தொடர் பணிச்சுமையால் தமிழகத்தில் ஆண்டுக்கு ஆயிரம் பேர் காவல்துறை பணியில் இருந்து விலகுகிறார்கள், 200 காவல்துறையினர் தற்கொலை செய்கிறார்கள்” என்று வேதனையை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்தெல்லாம் விரிவாக அலசினால் காவல்துறையில் தற்கொலைகள் மட்டுமல்லாமல், உயரதிகாரிகளின் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண் காவல்துறையினரின் பிரச்சனைகளும் நீண்ட பட்டியலாக உள்ளது.
எனவே இந்தத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 8 லட்சம் காவல்துறையினரின் குடும்பங்களும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு நிச்சயமாக வாக்களிக்கப்போவதில்லை.
ஐ.வி.நாகராஜன்