politics

img

மோடி அரசு வெளியேறிக் கொண்டிருக்கிறது

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நாடாளுமன்றத்தில் வலுவான எண்ணிக்கையில் இடதுசாரிகள் இடம்பெற்றால்தான் மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியில் செல்வாக்கைச் செலுத்த முடியும் என்று கூறியுள்ளார். அவரது நேர்காணல்:


கேள்வி: பொதுத் தேர்தல்களின் இரு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில் நடப்பு அரசியல் காட்சி குறித்து நீங்கள் எப்படி மதிப்பிட்டிருக்கிறீர்கள்?


சீத்தாராம் யெச்சூரி: தேர்தல் பிரச்சாரத்திற்காக எட்டு மாநிலங்களில் பயணம் செய்தவன் என்ற முறையிலும் அங்கே நடந்துள்ள வாக்குப்பதிவுகளின் அடிப்படையிலும் பார்க்கும்போது, இந்தத் தேர்தலில் மக்களின் வாழ்வாதாரங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள கொடூரமான பாதிப்புகள் வாக்குப்பதிவில் பிரதிபலித்திடும் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். பாஜக - ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் உணர்ச்சியைக் கிளப்பும் பிரச்சாரங்களின் பாதிப்பு என்பது அநேகமாக மிகவும் அரிதாகத்தான் இருந்திடும். அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களது மதவெறி பிரச்சாரம் மக்களிடம் எடுபடவில்லை.


 கேள்வி: காங்கிரஸ் அறிவித்துள்ள ‘நியாய்’ (வறுமை ஒழிப்பு) திட்டம் குறித்து உங்கள் கட்சியின் கருத்து என்ன?


சீத்தாராம் யெச்சூரி: எங்கள் தேர்தல் அறிக்கையில், நாங்கள் கரத்தால் உழைக்கும் உழைப்பாளியின் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம். இது, காங்கிரஸ் ‘நியாய்’ திட்டத்தில் சொல்லியிருக்கிற 6000 ரூபாயையைவிட வெகு அதிகமானதாகும். மூத்த குடிமக்களைப் பொறுத்தவரையில், மாதந்தோறும் அவர்களுக்கு 6,000 ரூபாய் அளிக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருக்கிறோம். இதேபோன்று வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையின்மை நிவாரணத்தொகை அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம். இவற்றுக்கான தொகைகள் என்பவை நிச்சயமாக காங்கிரசின் ‘நியாய்’ திட்டத்தின் கீழ் ஓராண்டுக்குச் செலவு செய்ய உத்தேசித்திருக்கும் 72,000 ரூபாயைவிட மிகமிக அதிகமாகும்.


இவற்றுக்கான பணத்தை எப்படி திரட்டுவது என்பதைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் கைவிட்ட செல்வ வரி (wealth tax), மூலதன ஆதாய வரி (capital gains tax) முதலானவற்றை மீளவும் கொண்டுவர வேண்டும். மேலும், மக்களிடையே சமத்துவமின்னையை அதிகப்படுத்துவதற்குக் காரணமாக இருக்கின்ற முதலாளிகளின் கொள்ளை லாபத்தின் மீதும் அதீத லாப வரி (super profit tax) கொண்டுவருவோம். எனவே, பெரும் பணக்காரர்கள் மீது 2 சதவீதம் அல்லது 1 சதவீதம் தண்டவரி (surcharge) விதித்தாலே, நாங்கள் முன்மொழிந்துள்ள அனைத்துத் திட்டங்களுக்கும் போதுமான அளவிற்குப் பணம் சேர்ந்துவிடும். நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீத மக்கள் சொத்துக்கள் ஒரு பெரும் பணக்காரரின் சொத்துக்களுக்கு சமமாக இருக்கிறது என்கிற இன்றைய நிலை நிச்சயமாக ஏற்கத்தக்கதல்ல. நாங்கள் நடுத்தர வர்க்கத்தினர் மீது வரி விதிப்போம் என்று மோடி கூறிக்கொண்டிருக்கிறார். மாறாக பெரும் பணக்காரர்கள் மீது வரி விதித்து, மத்தியதர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளித்திடுவோம்.


கேள்வி: உங்களுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி மற்றும் பாஜகவைக் கடுமையாகத் தாக்கிய அதே சமயத்தில், நீங்கள் காங்கிரஸ் கட்சியைப் பற்றி எதுவும் கூறவில்லையே!


சீத்தாராம் யெச்சூரி: ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியைத் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்துவதற்காக நாட்டில் இடதுசாரிகள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு, 2004ஆம் ஆண்டை எடுத்துக்கொள்வோம். இடதுசாரிகளின் நிர்ப்பந்தத்தின் காரணமாகவே தகவல் அறியும் உரிமைச் சட்டமும், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமும் நிறைவேற்றப்பட்டன. இதனை, இடதுசாரிகள் மத்திய அரசில் செல்வாக்கு செலுத்தாத 2009 உடன் ஒப்பிட்டுப்பாருங்கள். காங்கிரஸ் என்ன செய்தது?


அவர்கள், நரேந்திர மோடி ஆட்சியைப் பிடிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார்கள். இவை அனைத்தையும் என் உரைகளின்போது குறிப்பிட்டிருக்கிறேன். மக்கள் ஆதரவுக் கொள்கைகளை ஆட்சியாளர்களிடம் உருவாக்கிட, வலுவான இடதுசாரி அமைப்பும் தலையீடும் அவசியமாகும்.


கேள்வி: இடதுசாரிகள், தேர்தலுக்கு முன் கூட்டணி அமைப்பதில் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை. தேர்தலுக்குப்பின் உங்கள் நிலை எப்படி இருக்கும்? தேர்தலுக்குப்பின், பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில் வலுவான பங்கு அளிக்கக்கூடிய விதத்தில் இடதுசாரிகளின் பலம் அமைந்திடுமானால், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் அமைந்திடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


சீத்தாராம் யெச்சூரி: தேர்தலுக்கு முன்பும்கூட மாநில அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் உடன்பாடு காண்பதற்கே இடதுசாரிகள் எப்போதும் முயற்சிகள் மேற்கொண்டுவந்தோம். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு தன்மையுடன் இருக்கிற ஒரு சிக்கலான நிலைமையில் அகில இந்திய அளவிலான உடன்பாடு என்பது தேர்தலுக்கு முன் சாத்தியமில்லை. எங்கள் தேர்தல் வரலாற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டு, ஜனதா கட்சித் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அது தேர்தலுக்குப்பின்னர்தான் உருவானதேயொழிய, தேர்தலுக்கு முன்பு அல்ல. 1989இல் வி.பி.சிங் பிரதமராக வந்தபோது, தேசிய முன்னணி-இடது முன்னணி உடன்பாடும் கூட தேர்தலுக்குப் பின்புதான் அமைக்கப்பட்டது.


கேள்வி: ஆனால் இக்கூட்டணிகளில் எதுவும் தன் முழு ஆயுள்காலத்தையும் நிறைவு செய்ய முடியவில்லையே?


சீத்தாராம் யெச்சூரி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 10 ஆண்டு காலத்திற்கு பிரதமராக இருங்கள் என்று எங்களைக் கேட்டுக்கொண்டது. விஷயம் என்னவெனில், ஆட்சி உருவாக்கம் என்பது, அது எவர் தலைமையில் வேண்டுமானாலும் இருக்கலாம், தேர்தலுக்குப் பின்னர்தான் தீர்மானிக்கப்பட முடியும். தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்தான் அது தீர்மானிக்கப்பட முடியும்.


கேள்வி: தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை, எந்தக் கட்சிக்காவது ஒரு மிகச்சிறிய அளவிலான பெரும்பான்மை கிடைக்கும், அல்லது மாநிலக் கட்சிகளின் தயவில் ஆட்சி அமைக்க வேண்டியிருக்கும் என்று நீங்கள் ஊகிக்கிறீர்களா?


சீத்தாராம் யெச்சூரி: இவ்வாறான ஊகங்களுக்கெல்லாம் துணிந்து என்னால் இறங்க முடியாது. இந்தியத் தேர்தல் முடிவுகள் குறித்த அனுமானங்கள் ஓர் அவலமான முயற்சியேயாகும். இதுவரை வெளியாகியுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பாக இருந்தாலும் சரி, அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பாக இருந்தாலும் சரி, இதுவரை எதுவும் உண்மையாக இருந்ததில்லை.  


ஆரம்பகாலங்களில் நாம் வாக்குகளை வாக்கு சீட்டுகளின் மூலமாகத்தான் மேற்கொண்டு வந்தோம். மின்னணு வாக்கு எந்திரங்கள் அப்போது கிடையாது. அப்போது தேர்தலுக்குப்பிந்தைய வாக்கெடுப்பு ஒன்று நடந்தது. அந்த சமயத்தில் ஆர்.கே.லட்சுமண் கார்ட்டூன் ஒன்று. எந்த செய்தியேட்டுக்கு அவர் அதனைச் செய்திருந்தார் என்று இப்போது என்னால் நிச்சயப்படுத்திட முடியவில்லை. அந்தக் கார்ட்டூனில் வரும் கணவர் வாக்களித்துவிட்டு வீட்டிற்குவந்தபின், தன் மனைவியிடம் கூறுவார்: “நான் தவறு செய்துவிட்டேன். என் வாக்குத்தாளைத் தவறான பெட்டியில் போட்டுவிட்டேன்,” என்பார். அவரது மனைவி அவரைத் திட்ட ஆரம்பித்துவிடுவார். உடனே அந்தக் கணவர், மனைவியிடம், “கவலைப்படாதே, வாக்களிப்புக்குப்பின் ஒரு கருத்துக்கணிப்பு நடத்துவார்கள் அல்லவா! அதில் அந்தத்தவறைச் சரிசெய்து விடுகிறேன்,” என்பார். எனவே, இதுதான் இந்தியா. ஆனால், ஒன்றை மட்டும் நிச்சயமாக என்னால் சொல்லமுடியும். அதாவது இந்த மோடி அரசாங்கம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அது நிச்சயம்.



கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருகிறேன். இன்றைய சூழ்நிலையில், மேற்கு வங்கத்தில் எது தவறாகிப் போனது என்று நீங்கள் எங்களுக்குச் சொல்ல முடியுமா? அம்மாநிலத்தில் உங்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


சீத்தாராம் யெச்சூரி: அங்கே என்ன தவறாகிப் போனது என்று ஓர் ஆழமான ஆய்வினை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். எங்களிடம் அது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. ஆனாலும் இந்தத் தேர்தலில், நாங்கள் பாஜகவுக்கு எதிரான, திரிணாமுல் காங்கிரசுக்கு எதிரான வாக்குகளில் அதிகமானவற்றைப் பெறுவோம். இந்தியாவைப் பாதுகாக்க பாஜகவைத் தோற்கடியுங்கள்; மேற்கு வங்கத்தைப் பாதுகாக்க திரிணாமுல் காங்கிரசைத் தோற்கடியுங்கள் என்பதே எங்கள் முழக்கமாகும். இதற்காக, திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக நிற்பவர்கள் அல்லது பாஜகவிற்கு எதிராக நிற்பவர்கள் ஒவ்வொருவரின் ஆதரவையும் கோரிட நாங்கள் விரும்பினோம்.


கேள்வி: வயநாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள நீங்கள் தயங்கியதாக முத்திரை குத்தப்பட்டிருக்கிறதே?


சீத்தாராம் யெச்சூரி: இது ஊடகங்களின் கயிறு திரிக்கும் வேலை. விஷயங்களை திரித்திட அவை முயல்கின்றன. அது உண்மையல்ல.


கேள்வி: வயநாட்டில் ராகுல் போட்டியிடுவது தவறான செய்தியை அனுப்பிக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி முயற்சிகளில் இது குந்தகம் விளைவிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


சீத்தாராம் யெச்சூரி: நாங்கள் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை அமைப்பதில் உறுதி பூண்டிருக்கிறோம். இது எங்கள் கட்சியின் அகில இந்திய மாநாடு மற்றும் மத்தியக் குழுவின் முடிவு. இந்தக் குறிக்கோளை எவரும் மாற்ற முடியாது. அத்தகைய அரசாங்கத்தின் வடிவம் எவ்விதம் அமைந்திடும் என்பது தேர்தலுக்குப்பின்புதான் தெரிய வரும். அங்கே போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் உண்மையில் என்ன செய்தியை சொல்ல முன்வந்திருக்கிறது என்று காங்கிரசை நாங்கள் கேட்க விரும்புகிறோம். அவர்களது விளக்கத்திற்காகக் காத்திருப்போம். அதுவரையிலும் எவ்விதமான ஊகத்திற்கும் நான் போக மாட்டேன்.


கேள்வி: கேரளாவில் சபரிமலை பிரச்சனை பல்வேறு விதமான அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. பாஜக எப்படியும் ஏதேனும் ஒரு தொகுதியிலாவது வெற்றிபெற்றுவிடுவோம் என்று நம்பிக்கையுடன் இருக்கிறதே!


சீத்தாராம் யெச்சூரி: கேரளாவில் காட்சி மிகத் தெளிவாகவே இருக்கிறது. மத்தியில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் அமைப்பதை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்திருக்கிறது. கேரளாவில் உள்ள வாக்காளர்கள் மிகவும் முதிர்ச்சி அடைந்தவர்கள். மத்திய அரசுக்கான தேர்தல் மற்றும் மாநில அரசுக்கான தேர்தல் ஆகிய இரண்டுக்கும் இடையேயான வித்தியாசத்தை நன்கு அறிந்தவர்கள்.



தேசிய அளவில் நடைபெறும் தேர்தலில் இந்தப்பிரச்சனைகள் முற்றிலும் வித்தியாசமானவை. இதுபோன்ற பிரச்சனைகளின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்கச் செல்ல மாட்டார்கள். மத்தியில் மாற்று அரசாங்கம் அமையும் விதத்தில் அவர்கள் வாக்களிப்பார்கள்.



தமிழில்: ச.வீரமணி