politics

img

அதிமுகவை விழுங்கக் காத்திருக்கும் பாஜக....

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்.  மத்திய பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிற வழிநடத்தப்படுகிற அரசாகும். மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற மாண்பை  ஒழித்துவிட்டு இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும்  முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 

நாடு முழுவதும் மக்களை மத ரீதியாக, இன ரீதியாக  துண்டாடுவது மட்டுமல்ல; சிறுபான்மை மக்கள் மீது  தாக்குதல் நடத்தி அவர்களை ஒடுக்குகிற சூழல் இந்தியாவில் உள்ளது. ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால், விமர்சனம் செய்தால் அவர்களை அரசியல், சமூக ரீதீயாக ஒடுக்குகிறது. ஊடகங்களையும் ஒடுக்குகிறது. எதிர்க்கருத்துக்கள் சொல்பவர்கள் மீது தேசத் துரோகச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டங்களின்  கீழ் வழக்குப் பதிவு செய்கிறது. 

இந்தச் சூழ்நிலையில்தான் ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் வழக்கமாக நடைபெறும் தேர்தல் அல்ல.  மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதற்கு, பாஜக, ஆர்.எஸ்.எஸ்  ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு, அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான தேர்தல்.  

 பாஜக அரசு எதைச் செய்தாலும் இந்துக்களுக்காகச் செய்வதாக கூறுகிறது. அப்படிப்பட்ட ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறதா? பெரும்பான்மை  இந்து மக்களும் மோடியின் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள் என பெருவாரியான இந்து மக்களுக்கு எதிரான ஆட்சிதான் நடைபெறுகிறது. பன்னாட்டு முதலாளிகளுக்கு, இந்தியப் பெருமுதலாளிகளுக்கு, அந்நிய மூலதனத்திற்கு உதவி செய்யக்கூடிய திட்டங்கள் தான் அமல்படுத்தப்படுகின்றன.

புதிய தனியார்மயக் கொள்கையை மத்திய பட்ஜெட்டில் பாஜக அரசு அறிவித்துள்ளது. மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட தொலைத்தொடர்பு, இரும்பு மற்றும் எண்ணெய் வளத்துறை, பாதுகாப்பு ஆகிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் உள்ள பெருவாரியான நிறுவனங்களையும், கேந்திர முக்கியத்துவம் அல்லாதவை என வகைபடுத்தப்பட்டுள்ளதில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்க்கப் போவதாக அறிவித்துள்ளது. அதன் பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் சேலம் உருக்காலை, என்எல்சி, திருச்சி பெல் போன்ற நிறுவனங்களை பாதுகாக்க அதிமுக அரசு தயாராக இல்லை. மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துச் சட்டங்களையும் ஆதரிக்கும் கட்சியாக அதிமுக உள்ளது. பாஜக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.  மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எளமரம் கரீம், ராகேஷ் ஆகியோர் எதிர்த்து உரத்து குரல் எழுப்பினர். இதனால் அவர்கள்  சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். களத்தில் நிற்கும் கட்சி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி.
நாடு முழுவதும் உள்ள கட்சிகளை பாஜக தன்வயப்படுத்தி வருகிறது.  அசாமில் உள்ள அசாம் கணபரிஷத் கட்சியுடன் கூட்டணி வைத்த பாஜக அந்தக் கட்சியை ஆக்கிரமித்தது. அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் இப்போது பாஜகவின் தலைவராக உள்ளார்.  அசாம் கணபரிஷத் கட்சியை பாஜக விழுங்கிவிட்டது. 

அதிமுக பாஜகவின் கருவியாக உள்ளது. அதிமுக பாஜகவால் இயக்கப்படுகிறது. அதிமுகவின் அடிமை அரசு இங்கு தேவையில்லை. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஒரு புதிய அரசு அமையவேண்டும். அதிமுக- பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும். 

திண்டுக்கல், மதுரை பொதுக்கூட்டங்களில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் ஆற்றிய உரைகளிலிருந்து...