politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

வேலை இழப்பு 75 மில்லியன் மக்களை வறுமைக்குள் தள்ளிவிட்டது. மத்தியதர வர்க்கம் மூன்றில்ஒரு பகுதி சுருங்கிவிட்டது. அதன் எண்ணிக்கை 99 மில்லியனில் இருந்து 66 மில்லியன்ஆக குறைந்துவிட்டது. மக்களுக்கு நிவாரணம் தருவதற்காக மோடி அரசாங்கம் நிர்ப்பந்தப்படுத்தப்பட வேண்டும். மக்கள் மீது கொடும் துன்பங்களை சுமத்துவதை நிறுத்துங்கள். பொய் பிரச்சாரத்தையும் வாய்ப்பந்தலையும் நிறுத்துங்கள்.

                                             ****************

காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 74%  அளவிற்கு உயர்த்தி சட்டம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபத்தை உருவாக்கித்தரும் இந்த சட்டம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.மக்களின் வாழ்நாள் சேமிப்பை பகல் கொள்ளை அடிப்பதற்கும் சர்வதேச நிதி சந்தைகளில் மக்களின் சேமிப்பை நிதி சூதாட்டத்தில் முன்வைப்பதற்கும் இது வழிவகுக்கும். நமது எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு இல்லாமலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் உறுதியான எதிர்ப்பே இதனை பின்னுக்கு தள்ளும்.

                                             ****************

வேலையில்லாத் திண்டாட்டம் மிகத்தீவிரமாக உருவெடுத்துள்ளது. 71 லட்சத்திற்கும் அதிகமான வருங்கால வைப்பு நிதி கணக்குகள்  முடங்கியுள்ளன. முறைசாரா தொழில் பிரிவு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் பிரச்சாரமும் வாய்ப்பந்தலும் எவ்வளவு பொய்யானது என்பதை இது மீண்டுமொருமுறை நிரூபிக்கிறது.  இந்த சூழலிலும் மோடி அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்திட மறுக்கிறது. வேலை இழந்தவர்களுக்கு நிவாரணத்தை உடனடியாக தாருங்கள்.

                                             ****************

பணவீக்கம் உயர்வு பொருளாதார மீட்சியை பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பெட்ரோலிய பொருட்களின் விலையை தொடர்ந்து தொய்வில்லாமல் உயர்த்தியதன் காரணமாக தேசத்தின்பொருளாதாரம் சீரழிவதை மோடி அரசாங்கம் மேலும் மோசமாக்குகிறது. இதன் சங்கிலி தொடர் விளைவாக பண வீக்கம் மேலும் உயர்கிறது. மக்களின் வாழ்வாதார துன்பங்கள் மேலும் அதிகரிக்கின்றன.

                                             ****************

வேறுபட்ட மதநம்பிக்கை சார்ந்தவர்கள் செய்துகொள்ளும் திருமணங்களை தடுக்கும் உத்தரப் பிரதேச பாஜக அரசாங்கத்தின் அரசியல் சாசன விரோத சட்டத்தை, மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கமும் அப்படியே நகலெடுத்து அந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.“எங்களது உணர்வை புண்படுத்தும் எந்தக் காதலையும் நாங்கள் எதிர்ப்போம்” என மத்தியப் பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் கூறுகிறார். கடந்த மூன்று மாதங்களில் இந்த சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு 21 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பாதிக்கும் அதிகமான வழக்குகளில் மாற்று மதங்களை சேர்ந்தவர்கள் நன்றாகத் தெரிந்துதான் பழகி உள்ளனர். அரசியல் சட்டத்தின் உரிமையை மறுக்கும் இத்தகைய சட்டங்களை வலுவாக எதிர்ப்போம்.

                                             ****************

குடும்பங்களின் சேமிப்பு விகிதம் 21% லிருந்து 10.4% ஆக சரிந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் வேலையின்மை/வேலை இழப்புகள்/ஊதிய வெட்டுகள்/செங்குத்தாக உயரும் விலைவாசி இவற்றின் காரணமாக தாம் உயிர் வாழ மக்கள் தங்களதுவாழ்நாள் சேமிப்பை பயன்படுத்த நிர்ப்பந்தம் உண்டாகியுள்ளது. இதன் விளைவாக குடும்பங்களின் சேமிப்பு விகிதம் வீழ்ச்சி! மக்கள் துன்பக் கடலில் விழுந்து கொண்டிருக்கும் போது மோடி அரசாங்கம் தனதுகூட்டுக் களவாணி முதலாளிகளுக்கு உதவுவதில் மிகவும் சிரத்தையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

                                             ****************

நிதிஆயோக் கணக்குபடி இந்தியாவில் 60 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் துன்பப்படுகின்றனர். 16.3 கோடி பேர் “பூஜ்ய தினம்” எனப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்படும் அபாயநிலையில் உள்ளனர். (ஏற்கெனவே ஆப்பிரிக்காவின் கேப்டவுன் உலகின் முதல் “பூஜ்ய தினம்” நகரமாகபாதிக்கப்பட்டுள்ளது). ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் மாசுபாடு காzணமாக 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த உண்மை நிலையை தொடர்ந்து மறுத்துகொண்டுள்ளார் மோடி அவர்கள்!  “தண்ணீர் அனைவருக்கும்” என்பது முக்கிய உரிமைப் பிரச்சனை.

                                             ****************

கோவிட் பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. மத்திய அரசாங்கம் இதனை எதிர்கொள்ள என்ன செய்கிறது? கடந்தமுறை தொற்று அதிகரித்த பொழுது அதனை எதிர்கொள்வதில் மத்திய அரசாங்கம் சொதப்பியது. திட்டமிடப்படாத ஊரடங்கு/மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்க மறுப்பு/ பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து மாநிலங்களுக்கு உதவி செய்யாதது என மத்திய அரசாங்கம்தவறாக கையாண்டது. இப்பொழுதும் இந்த தொற்று அதிகரிப்பதன் சுமையையும் பொறுப்பையும் மாநிலஅரசாங்கங்கள் மீது சுமத்த முயல்கிறது. பிரதமர் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். அவர் இதற்கான பதிலை தர நிர்ப்பந்திக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கு உதவ வேண்டும்.

                                             ****************

சர்வதேச பாலின இடைவெளி குறியீட்டில் இந்தியா 28 இடங்கள் கீழிறங்கி 156 நாடுகள் பட்டியலில் 140 ஆவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு சர்வதேச குறியீடு பட்டியலிலும் இந்தியாவின் இடம் சரிந்துவருகிறது. பா.ஜ.க. அரசாங்கத்தின் கீழ் இந்தியா வல்லரசாக இருக்கும் லட்சணம் இதுதான் போலும்!

                                             ****************

எட்டு முக்கிய உள்கட்டமைப்பு பிரிவுகளில் உற்பத்தி மீண்டும் வீழ்ச்சி. மத்திய அரசாங்கம் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும் பொது முதலீடுகளை அதிகரிப்பதிலும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதிலும் அதிக செலவு செய்யாமல் பொருளாதார மீட்சி நிலைத்திருக்கப் போவது இல்லை. பொய் பிரச்சாரமும் வாய்ப்பந்தலும் உண்மையான பொருளாதார மீட்சிக்கு மாற்றாக இருக்க இயலாது.

;