யுடியூப் தளத்தில் புதிய வசதி
கணினிகளில் பார்க்கும் யுடியூப் தளத்தில் தற்போது புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே மொபைல் ஃபோன் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டிருந்த அதேபோன்று Picture-in-Picture என்ற வசதி தற்போது கணினி பிரௌசரில் பார்க்கும் யுடியூப் தளத்திற்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஒரு வீடியோ காட்சி இயக்கத்தில் இருக்கும்போது, மற்ற வீடியோக்களைப் பற்றிய தகவல்களை மேலும் கீழும் பக்கத்தை நகர்த்திப் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பக்கத்துடன் வீடியோ நகராமல் சிறு விண்டோவில் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும்.
ஃபோனில் காணாமல் போன ஐகான்கள் திரும்ப கிடைக்க
மொபைல் ஃபோன்களில் உள்ள ஆப்களில் குறிப்பாக ஃபோன் ஐகான், மெசேஜ் ஐகான், கேமரா ஐகான் போன்ற முக்கியமான ஆப் ஐகான்கள் தவறான பயன்பாட்டால் காணாமல் போவதுண்டு. மெனு திரைகளில் வேறெங்கும் இதுபோல ஐகான்கள் காணாமல் போனால் ஃபோனை ரீசெட் செய்யாமல் அவற்றைத் திரும்பக் கொண்டு வர ஒரு வழி உண்டு.செட்டிங்ஸ் பகுதியில் இன்ஸ்டால்டு ஆப்ஸ் பகுதியில் சிஸ்டம் ‘லான்ச்சர்’ ஆப் என்பதைத் தேடிப் பார்த்து திறக்கவும். அதில் கீழே உள்ள கிளியர் டேட்டா என்ற பட்டனைக் கிளிக் செய்து தரவுகளை நீக்கவும். இப்போது முன் திரைக்கு வந்து பாருங்கள். விடுபட்ட ஐகான்கள் திரும்ப வந்திருக்கும்.
ஜிமெயில் குறுக்கு விசைகள்
டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கணினிகளில் ஜிமெயில் கணக்கில் விரைவாக செயல்பட குறுக்கு விசைகள் (Keyboard Shortcuts) வழங்கப்பட்டுள்ளன. இந்த வசதியைப் பெற விரும்பினால் உங்கள் ஜிமெயில் கணக்கைத் திறந்து அதில், மேல் வலது மூலையில் இருக்கும் ‘கியர்’ ஐகானைக் கிளிக் செய்து, “செட்டிங்ஸ்” பகுதிக்குள் நுழையவும். அதில் காட்டப்படும் விபரங்களில் ‘கீபோர்ட் ஷார்ட்கட்’ என்பதற்கு நேராக அதனை Enable செய்து கொள்ளவும். அந்தப் பக்கத்தின் கீழே உள்ள ‘Save Changes’ என்பதைக் கிளிக் செய்து இன்பாக்ஸ் பகுதிக்கு திரும்பவும்.
முக்கியமான ஜிமெயில் குறுக்கு விசைகள் சில:
மின்னஞ்சல் அனுப்பும் விண்டோ திறக்க (Compose): c
மின்னஞ்சல் அனுப்பும் விண்டோவை புதியடேப்-ல் திறக்க (Compose in a new tab): d
மின்னஞ்சலை அனுப்ப: Ctrl + Enter
மின்னஞ்சல் நகல் பெறுநரைச் சேர்க்க (Add cc recipients) : Ctrl + Shift + c
மறைக்கப்பட்ட நகல் பெறுநர் (Add bcc recipients): Ctrl + Shift + b
இணைய முகவரிகளை இணைக்க ( Insert a link): Ctrl + k
எழுத்துப் பிழை கண்டறிய உதவி (spelling suggestions): Ctrl + m
மின்னஞ்சல்களைத் தேட (Search mail): /
மூன்று புள்ளிகள் கொண்ட “more actions” என்ற மெனுவைத்திறக்க : . (முற்றுப்புள்ளி)
திறந்திருக்கும் மின்னஞ்சலை வேறு தலைப்பிற்கு மாற்ற “move to” மெனுவைத் திறக்க: v
ஏதேனும் கோப்புறையில்(Folder) சேர்க்க (label as): l
முந்தைய செய்தி அல்லது பக்கத்திற்குச் செல்ல : P
அடுத்த செய்தி அல்லது பக்கத்திற்குச் செல்ல : N
பிரதான விண்டோவில் கவனம் செலுத்த: Shift + Esc
இன்பாக்சில் பட்டியலில் அடுத்த பக்கத்திற்குச் செல்ல: G + N
இன்பாக்சில் பட்டியலில் முந்தைய பக்கத்திற்குச் செல்ல: G + P
கீபோர்ட் குறுக்கு விசைகள் தொடர்பான உதவிக்கு : ?
ஜிமெயில் உபயோகிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான குறுக்கு விசைகளைத் தாங்களே உருவாக்கிப் பயன்படுத்தவும் வசதி உள்ளது. அதனை செயல்படுத்த, செட்டிங்ஸ் பகுதியில் உள்ள ‘அட்வான்ஸ்’ என்பதைக் கிளிக் செய்து, ‘சேஞ் யுவர் கீபோர்ட் ஷார்ட்கட்’ என்பதை Enable செய்து, ‘சேவ் சேஞ்சஸ்’ என்பதைக் கிளிக் செய்தால் ஜிமெயில் மறுதுவக்கம் செய்யப்படும். இப்போது மீண்டும் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்றால் அங்கிருக்கும் மெனுவில் கடைசியாக கீபோர்ட் ஷார்ட்கட்ஸ் என்ற புதிய டேப் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அதில் நுழைந்தால் ஜிமெயில் அளித்துள்ள ஷார்ட்கட் விபரமும் அதற்கு நேராக காலியாக ஒரு கட்டமும்இருக்கும். அந்த காலிக் கட்டத்தில் நமக்கு விருப்பமான கீகளை அழுத்தி புதிய குறுக்கு விசையை பதிவு செய்யலாம். இறுதியாக கீழே, “சேவ் சேஞ்சஸ்” என்பதைக் கிளிக் செய்த பிறகு உங்கள் குறுக்கு விசைகள் செயல்பாட்டிற்கு வரும்.
===என்.ராஜேந்திரன்===