வாட்ஸ்அப்பில் தீங்கிழைக்கும் எம்.பி-4 வீடியோ ஒன்றை அனுப்பி, அதன் மூலம் பயனர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருடும் அபாயம் உள்ளதாக வாட்ஸ்அப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில், பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயனர்கள் உளவு பார்க்கப்பட்டதாக வாட்ஸ்அப் தகவல் வெளியிட்டது. இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாகவும், இது தொடர்பாக, இஸ்ரேல் நிறுவனம் மீது பேஸ்புக் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் மற்றொரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் தீங்கிழைக்கும் எம்.பி-4 வீடியோ ஒன்றை அனுப்பி, அதன் மூலம் பயனர்களில் தகவல்களை ஹேக்கர்கள் திருடும் அபாயம் உள்ளதாக வாட்ஸ்அப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீங்கிழைக்கும் எம்.பி-4 வீடியோ, ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களை பயன்படுத்தும் செல்போன்களை பாதிக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த சைபர் தாக்குதலில் இருந்து தற்காலிகமாக காத்துக் கொள்ள கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயனர்களின் தகவல் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.