internet

img

இணைய சேவையில் வரப்போகும் அதிரடி திருப்பம்  தாக்குபிடிக்குமா ரிலையன்ஸ் ஜியோ

இணைய சேவையில் வரப்போகும் அதிரடி திருப்பம் 
தாக்குபிடிக்குமா ரிலையன்ஸ் ஜியோ.. 
புதுதில்லி, ஜன, 23-
இணைய சேவையில் ஒட்டு மொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் எலான் மஸ்க் அவருடைய ஸ்டார் லிங்க் நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அப்படி ஸ்டார் லிங்க் திட்டம் வந்தால் இந்தியாவில் மோடி அரசின் ஆதரவோடு பிஎஸ்என்எல் நிறுவனத்தை காலி செய்து; இணைய சேவையில் மொனோபுள்ளியாக உருவெடுக்கும்   ரிலையன்ஸ் ஜியோ கடுமையான பின்னடைவை சந்திக்கும்.
அப்படி என்ன புதிய நுட்பம்...
உலக மக்கள் அனைவருக்கும் மிகவும் குறைவான கட்டணத்தில் அதிவேக இண்டர்நெட் சேவையை எவ்விதமான தடையும் இல்லாமல் அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து  எலான் மஸ்க்-ன் கூறிவருகிறார். அதன் படி  ஸ்டார்லிங்க் திட்டத்தை அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளில் செயல்படுத்தி வருகிறார். 
ஸ்டார் லிங்ஸ் இணைய இணைப்பு என்பது நாம் பயன்படுத்தி வரும் பிராண்ட் பேண்ட் சேவையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.  நாம் பயன்படுத்தும் இண்டர்நெட் சேவை அனைத்தும் டெலிகாம் நிறுவனங்கள் வாயிலாகவும், கடல்வழியான இணைப்பின் மூலமும்  இணைப்பைப் பெறுகிறோம். இதன் மூலம் டெலிகாம் சிக்னல் டவர்களைப் பொருத்து தான் நம் இண்டர்நெட் இணைப்பின் வேகம் இருக்கும். இந்த நெட் ஒர்க்கிற்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்ய செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. குறிப்பாகப் பிராண்ட்பேண்ட் சேவை பெற வேண்டும் என்றால் கேபிள் வாயிலாகத் தான் பெற வேண்டும், அதிலும் அதிக வேகம் கொண்ட இணைப்பும் வேண்டும் என்றால் பைபர் ஆப்டிக் கேபிள் இருந்தால்தான் முடியும்.
எலான் மஸ்க் -ன்  ஸ்டார்லிங்க் திட்டம்  முற்றிலும் மாறுபட்டது,  இந்த திட்டத்தில் இண்டர்நெட் இணைப்பை செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக நம் வீட்டிற்கே பெற முடியும். இதனால் எந்த டெலிகாம் நிறுவனத்தையும் நம்பியிருக்கத் தேவையில்லை, இதுமட்டும் அல்லாமல் இந்தச் சேவையைப் பெறுவதும் மிகவும் எளிது. ஒரே ஒரு ஆண்டனா வாங்கினால் போது, 24 மணி நேரமும் எவ்வித தங்குதடையுமின்றி செயற்கைக்கோள்-ல் இருந்து நேரடியாக இண்டர்நெட் சேவையைப் பெறலாம். இந்த திட்டம் தற்போது அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க்..
இந்தச் சேவையை இந்தியாவிற்கு விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த திட்டம் இந்தியாவில் வந்தால் தற்போது இந்தியாவில்  மோடியின் ஆதரவோடு, நாடு முழுவதும் டெலிகாம் சேவையில் கோலோச்சி வரும்  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
இந்தியா மிகப்பெரிய மார்க்கெட் .
இந்தியாவில் 70 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது மொபைல் போன் மூலம் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளங்களை பயன்படுத்தும் ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் 40 நிமிடம் செலவழிக்கின்றனர் என ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் 24 மணி நேரமும் அதிகவேக இணைய இணைப்பு கிடைக்கும் பட்சத்தில், டிவிக்கு கேபிள் தேவை இருக்காது. அனைத்து சேனல்களும் இணைய இணைப்பின் மூலம் துல்லியமாக பார்க்க முடியும். ஆக ஒரு வேளை ஸ்டார் லிங் திட்டம் இந்தியாவில் அமலாக்கத்திற்கு வரும் போது அனைவரும் அதற்கு மாறுவதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. 
காரணம் இன்று வரை செயற்கை கோளில் இருந்து நேரடியாக இணைய இணைப்பை வழங்கும் நிறுவனத்தில் ஸ்டார் லிங்க் மட்டுமே கோலோச்சி வருகிறது. செயற்கைக்கோள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதுவரை ஸ்டார்லிங்க் சேவைக்காகச் சுமார் 1000 மேற்பட்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. தனது பால்கன் 9 ராக்கெட்-ல் ஒரு முறை 60 செயற்கைக்கோள் எனக் கணக்கீட்டில் 17 முறை விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இதுபோன்ற சேவையை அளிக்கச் சுமார் 4400 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த வேண்டும்.
யார் இந்த எலான் மஸ்க்..
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓவான  எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு 195 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய். பிரபல ஊடக நிறுவனமான ப்ளூம்பெர்க்கின் 2021ல் வெளியிட்ட உலக  கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தவர். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, சோலார் சிட்டி என மூன்று மிகப்பெரும் நிறுவனங்களையும் கையில் வைத்திருப்பவர். மின்சார கார் நிறுவனமான டெஸ்லா வெறும் 70 மில்லியன் டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம். அதன் இன்றைய மதிப்பு என்பது சுமார் 650 பில்லியன் டாலர். அதில் பெருவாரியான பங்குகள் வைத்திருப்பர் இந்த எலான் மஸ்க். இதே போன்று நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தனது திட்டங்களை புதுப்பித்துக் கொள்வதில் எப்போதும் முன்னிலையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.