india

img

கவிஞர் வரவர ராவுக்கு 6 மாதங்கள் நிபந்தனை ஜாமீன்!

மும்பை ,பிப்.22-
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிஞர் வரவர ராவுக்கு மும்பை நீதிமன்றம் 6 மாதங்கள் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
பீமா கோரேகானில் நடைபெற்ற போரில், மராத்திய பேஷ்வா படைகளை வெற்றிகொண்டதன் நூற்றாண்டை, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தலித் மக்கள் கடந்த 2018 ஜனவரி 1 அன்று விழாவாக கொண்டாடினர். ஆனால், இந்த விழாவிற்குள் புகுந்த சாதி ஆதிக்க வெறியர்கள், தலித் மக்கள் மீது கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர்.
அன்றைய ஆளும் பாஜக அரசோ, சாதி வெறியர்களை கைது செய்யாமல், இவ்விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட 9 மனித உரிமைச் செயற்பாட்டாளர் மீது தேசத்துரோக வழக்கு உட்பட பலபொய் வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைந்தது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வரவர ராவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அவர் சுயநினைவை இழந்ததாகவும்கூறி மருத்துவமனை சிகிச்சை அளிக்க அவரது மனைவி ஹேமலதா தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தார். 
இதனிடையே, கடந்த வருடம் ஜூலை மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரவர ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரை விடுதலை செய்யக்கோரி இந்தியா முழுக்க உள்ள சமூக செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்திருந்தனர். ஆனாலும் மத்திய பாஜக அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
தொடர்ச்சியாக அவரது ஜாமீன் மறுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) வரவர ராவின் மருத்துவக் காரணங்களுக்காக 6 மாதம் நிபந்தனை ஜாமீன் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல செயற்பாட்டாளர்களின் கணினிகள் நீண்ட நாட்களாக ஹேக் செய்யப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
பொய்யான சாட்சியங்கள் அவர்களின் கணினிகளில் ஏற்றப்பட்டன. அதன் அடிப்படையில்தான் அவர்கள் தேசத்துரோக வழக்கு உட்பட பலவற்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து நம்பகத்தன்மையுள்ள ஒரு உயர்மட்ட சுயேச்சையான விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் எச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;