india

img

அனைத்து பொருட்களின் விலை உயர்வால் மொத்த பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு!  

அனைத்து பொருட்களின் விலை உயர்வால் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்த பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

நாட்டில் உணவுப் பொருட்கள் முதல் வர்த்தக பொருட்கள் வரையில் அனைத்து பிரிவுகளிலும் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பணவீக்கத்தின் விகிதமானது 10.74 சதவீதமாக இருந்த நிலையில், 4.34 சதவீதம் இந்தாண்டு அதிகரித்துள்ளது.  

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தொடர்ந்து 13ஆவது மாதமாக Wholesale Price Index (WPI) பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்ந்தது சாமானிய மக்கள் முதல் உற்பத்தி நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது.  

மேலும், உணவு பொருள்கள், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்கள் உள்ளிட்டவையின் விலை உயர்வே பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.  

மொத்த விலை பணவீக்கமானது மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாகவும், பிப்ரவரியில் 13.43 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.    

கடந்த வாரம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவின் சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 7.79 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4ஆவது மாதமாக ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்கை விட அதிகமாக உள்ளது.  

இந்த மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 0.40 சதவீதமும், ரொக்க கையிருப்பு விகிதத்தை 0.50 சதவீதமும் அதிரடியாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. 

;