india

img

தடுப்பூசிகளுக்கு கண்டுபிடிப்பு உரிமை கூடாது! - உலகில் உள்ள 34 கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டறிக்கை

புதுதில்லி:
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக, தடுப்பூசி கண்டுபிடிப்பவர்களுக்கு, தனியே கண்டுபிடிப்பு உரிமை (patents rights) அளிக்கக்கூடாது என்று இந்தியாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட உலகில்உள்ள 34 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக ஏப்ரல் 19 அன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:கோவிட் 19 பெருந்தொற்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் காலத்தில், பல நாடுகளில், பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இந்நோய்க்கு ஆளாகி, தங்கள் உடல் நலத்தை இழந்தும்,தங்கள் வேலைகளை இழந்தும் தங்கள் உயிரையே இழந்தும் இருக்கிறார்கள். மற்றொரு பக்கத்தில், சில நிறுவனங்கள் அத்தியாவசியப் பண்டங்களான உணவு, சுகாதாரத்திற்கான உபகரணங்கள், முகக் கவசங்கள் மற்றும் இறுதியாகதடுப்பூசிகளை நல்ல விலைக்கு விற்று உலகில் பணக்காரர்களிலேயே பணக்காரர்களாக மாறிஇருக்கிறார்கள். முதலாளித்துவ வர்க்கம், தாங்கள் மேலும் கொள்ளை லாபம் ஈட்டக்கூடியவிதத்தில் தொழிலாளர்களைப் பெரிய அளவில் சுரண்டுவதற்கான வாய்ப்பாக, கொரோனாவைரஸ் பெருந்தொற்றை பயன்படுத்திக் கொண்டது.

இதுவரை வெறும் 2.16 சதவீதம் மட்டுமே!
2020இன் இறுதி வாக்கில் இது தொடர்பாக பல தடுப்பூசிகள் ஏகபோக மருந்துக் கம்பெனிகளால் கண்டறியப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகளின் திறன் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டுள்ளபோதிலும், இவற்றில் சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், பொதுவாக அவை கொரோனா வைரஸ் தொற்றை சமாளிப்பதில்வலுவான பங்களிப்பைச் செய்துகொண்டிருக் கின்றன. எனினும், கோவிட் தடுப்பூசி போடப்படுவது தொடங்கப்பட்டு, உலகில் இதுவரை சுமார்2.16 சதவீத மக்களே இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சக்தியற்ற முதலாளித்துவம்
தொற்று வியாதிகள் பரவாமல் தடுத்துநிறுத்துவதற்கு பிரதான முறை, அவற்றுக்கு எதிராக விரிவான அளவிலும் வலுவான விதத்திலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதேயாகும். ஆயினும், முதலாளித்துவம், 21ஆவது நூற்றாண்டில் இந்த அடிப்படை விதியை உலக அளவில் கொண்டுசெல்ல சக்தியற்றதாக இருந்துவருகிறது. இதனை கோவிட்-19வைரஸ் பெருந்தொற்றில் பார்க்க முடிகிறது. இதற்கான காரணங்கள் தெளிவானவை. ஆயிரக்கணக்கான அறிவியலறிஞர்கள் தங்களுடைய பொது சுகாதார நிதியம் மற்றும் கூட்டு முயற்சிகளின் விளைவாக பல்வேறுவிதமான தடுப்பூசிகளைக் கண்டுபிடித்திருந்தா லும், கடைசியில் அவை மருந்து ஏகபோக நிறுவனங்களால் அறிவுச் சொத்துரிமை (intellectual property) அல்லது கண்டுபிடிப்பு உரிமை (patent rights) என்ற பெயர்களில் பறித்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.இன்றைய தினம் தடுப்பூசிகளை ஒரு சில நாடுகள் மட்டும்தான் உற்பத்தி செய்ய முடியும். மிகவும் அதிகாரம் படைத்த ஏகாதிபத்திய நாடுகள் தங்கள் தேவைக்கும் மேலாகவே அவற்றை இறக்குமதி செய்யக்கூடிய அதே சமயத்தில், உலகில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள நாடுகள் தங்கள் மக்கள்தொகை முழுவதற்கும் தேவைப்படும் அளவிற்கு இறக்குமதி செய்வதற்கு இயலாத நிலையில் இருக்கின்றன. இவ்வாறு ஒரு நிச்சயமற்ற எதிர்காலம் அவர்களை எதிர்நோக்கி இருக்கிறது. குடிமக்களின் சாவைத் தடுக்க முடியும் என்று தெரிந்தும்கூட அதற்கான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் அவை திண்டாடுகின்றன.

சிலர் மட்டும் போட்டுக் கொண்டால்...
இது ஓர் ஆபத்தான போக்காகும். தொற்று நோய்களுக்கான தடுப்பூசிகள் மிகவும் குறைவாக இருந்து ஒருசிலர் மட்டும் அதனைப் போட்டுக்கொண்டால், கொரோனா வைரஸ் மற்றவர்களிடம் மிகவும் வேகமாகப் பாயும் தன்மை கொண்டதாக மாறும். இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று திடீரென்று உலகிலிருந்து மறையாது. மேலும், முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்டுள்ள சமூக மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் நமக்குக் காட்டுவது என்னவென்றால், மனிதகுலம் இதுபோன்ற பெருந்தொற்றுகளை வேறு வழிகளிலும் எதிர்கொள்ளும் என்பதேயாகும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக வலுவான சிகிச்சை மேற்கொள்ளப்படும் வரை மற்றும் அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்படும் வரை கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல்தொடரும். அதுவரையிலும் மனிதகுலம் கொரோனா வைரசால் நோயுற்ற தன்மையுடனும் மற்றும் மரணங்களுடனும் இணைந்தே வாழ்வது தொடரும். எனவே, தொழிலாளர் வர்க்கம் மற்றும் அனைத்து மக்களின் பொதுவான நலனின் அடிப்படையிலும், தொற்றுநோய் களுக்கு எதிராக தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்படுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்..கண்டுபிடிப்பு உரிமை அல்லது அறிவுச் சொத்துரிமை என்பவை தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்திடாது. மாறாக அவை மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதை மந்தப்படுத்திடும்.ஆனால், நாம் பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சனையையும், ஏகபோக முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் மற்றும் அவற்றுக்குள் போட்டாபோட்டிஏற்படும் விதத்தில் விட்டுவிடக் கூடாது.

கம்யூனிஸ்ட்டுகள் என்ன சொல்கிறோம்?

சில நாடுகள் இது தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒருமைப்பாடும், ஒத்துழைப்பும் அளிப்பதுடன், உலகில் பல நாடுகளில்இயங்கும் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளாகிய நாங்கள் கீழ்க்கண்டவாறு கூட்டாகக் கோருகிறோம்:

* கோவிட்-19 சம்பந்தப்பட்ட அனைத்து தடுப்பூசிகள் மீதும் அறிவுச் சொத்துரிமைகள் மற்றும்கண்டுபிடிப்பு உரிமைகள் என்ற பெயர்களில்  உற்பத்தியை முடக்குவதைத் தடை செய்திட வேண்டும். இது தொடர்பாக அனைத்து நாடுகளும் சட்டப்பூர்வமாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

* பொதுத்துறைகளின் கீழ் தடுப்பூசிகளுக்கான உற்பத்தி, விநியோகம் மற்றும் அமலாக்கம்  தொடர வேண்டும். பொது சுகாதார அமைப்புமுறை உடனடியாக விரிவாக்கப்பட வேண்டும்,வலுப்படுத்தப்பட வேண்டும்.

* தடுப்பூசிகளில் ஊக வணிகத்தை கண்டிக்கிறோம். தடுப்பூசிகள் தொடர்பான அனைத்துப் பரிவர்த்தனைகளும் வெளிப்படைத் தன்மையுடன் சர்வதேச அறிவியல் அமைப்புகளுக்கு அறிவிக்கப்பட வேண்டும். சர்வதேச ஒருமைப்பாட்டுடனும் ஒத்துழைப்புடனும் இதுதொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் போட்டி மனப்பான்மைகூடாது.  

*  தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் அறிவியலற்ற பொய்த்தகவல்கள் தீர்மானகரமான முறையில் தடைசெய்யப்பட வேண்டும்.

*  மக்கள், சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை வலுப்படுத்திட வேண்டும். இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஏகபோகங்கள்கொள்ளை லாபம் ஈட்டுவதை நாங்கள் எதிர்க்கவேண்டிய நிலையில் இருக்கிறோம்.இவ்வாறு 34 கட்சிகளும் அறிவித்துள்ளன.

இதில் கையொப்பமிட்டுள்ள கட்சிகள் வருமாறு:

(ஆங்கில அகரவரிசைப்படி)

1.  ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி,

2.  ஆஸ்திரியா தொழிலாளர் கட்சி,

3.  பஃஹ்ரைன் முற்போக்கு டிரிப்யூன்,

4.  வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சி,

5.  பிரேசிலியன் கம்யூனிஸ்ட் கட்சி,

6.  பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி,

7.  பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி,

8.  பிரிட்டன் புதிய கம்யூனிஸ்ட் கட்சி,  

9. பொஹிமயா மற்றும் மொராவியா கம்யூனிஸ்ட் கட்சி

10. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி,

11. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி,

12. கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி,

13. ஹங்கேரியன் தொழிலாளர் கட்சி,

14. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்),

15. டூடே-ஈரான்,

16. லக்சம்பர்க் கம்யூனிஸ்ட் கட்சி,

17. மெக்சிகோ கம்யூனிஸ்ட் கட்சி,

18. நார்வே கம்யூனிஸ்ட் கட்சி,

19. பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சி,

20. பாலஸ்தீனக் கம்யூனிஸ்ட் கட்சி,

21. பாலஸ்தீன மக்கள் கட்சி,

22. பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி,

23. போர்த்துக்கீஸ் கம்யூனிஸ்ட் கட்சி

24. ரொமோனியன் சோசலிஸ்ட் கட்சி,

25. செர்பியா கம்யூனிஸ்ட் கட்சி,

26. ஸ்பெயின் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி,

27. ஸ்பெயின் தொழிலாளர் கம்யூனிஸ்ட் கட்சி,

28. கடலோனியா கம்யூனிஸ்ட் கட்சி,

29. சூடானிய கம்யூனிஸ்ட் கட்சி,

30. ஸ்வாஜிலாந்த் கம்யூனிஸ்ட் கட்சி,

31. துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி,

32. உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சி,

33. வெனிசுலா கம்யூனிஸ்ட் கட்சி,

34. கலிசான் மக்கள் யூனியன்.                  

 (ந.நி.)

;