india

img

டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்தது  மோடி அரசு

கொரோனா தடுப்புக்காக அமெரிக்கா ஆர்டர் செய்த மருந்துகளை அனுப்பாவிட்டால் இந்தியாவிற்கு தங்க பதிலடிகொடுக்கப்படும் என்ற டிரம்பின் மிரட்டலைத்தொடர்ந்து தற்போது மோடி அரசு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்துள்ளது. 
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. இதில் அமெரிக்காவில் அதிகபட்சமாக மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் பிரதமர் மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கொரோனாவிற்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவிற்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். பிரதமர் மோடியும் இரு நாடுகளும் இணைந்து கொரோனாவை ஒழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் பெற அனுமதி வழங்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் கேட்டிருப்பதாக தெரிவித்தார். மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி அளிக்காத பட்சத்தில், அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியாவுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
உள்நாட்டில் தேவை அதிகரித்து வருவதால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு அண்மையில் தடைவிதித்தது. இதையடுத்து டிரம்ப் கேட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில் டிரம்பின் மிரட்டலையடுத்து இன்று மோடி அரசு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கி உள்ளது.

;