india

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஜம்மு-காஷ்மீரில் குடிமை உரிமைகள் கடுமையான முறையில் தடை செய்யப்பட்டிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிடத்தக்க விமர்சனக் கருத்துக்களை முன் வைத்துள்ளது. அங்கு இயல்புநிலைமை திரும்பிவிட்டதாக மத்திய அரசு பொய்களைக் கூறி நாட்டையும் உலகினையும் திசைதிருப்ப முயற்சித்து வரும் வேளையில், உச்சநீதிமன்றத்தின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீரில் இணைய தள சேவைகள் காலவரையற்ற முறையில் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து விமர்சித்திருக்கிறது. இணையதளத்தைப் பயன்படுத்துவது என்பது அரசியல் சட்டப்பூர்வமான உரிமை என்றும் அது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், மீண்டும் மீண்டும் 144 தடை உத்தரவு பிரயோகிக்கப்பட்டிருப்பது சரியல்ல என்றும், அது கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தி இருக்கிறது. ஒருவார காலத்திற்குள் இந்த உத்தரவுகளையெல்லாம் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்குமாறும் கூறியிருக்கிறது. ஆனால், உச்சநீதிமன்றம் இப்படி கூறியுள்ளபோதிலும், அங்கு இயல்புநிலைமை நிலவிக் கொண்டிருப்பதாக தான் கூறுகிற பொய்களை நிரூபிக்கும் முயற்சியாக ஜம்மு-காஷ்மீருக்கு வெளிநாட்டு தூதர் குழு ஒன்றை, குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்லும் விதத்தில் ஒரு சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்ய முனைந்திருக்கிறது மத்திய அரசு. அவர்கள் அரசு விரும்பிய இடங்களை பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள்.

சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று முன்னாள் முதலமைச்சர்களை சந்திக்கவோ, பேசவோ; ஐந்து மாத காலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவும் கூட அனுமதிக்கப்படவில்லை. எனவே இப்படி ஒரு சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்தது என்பது இந்திய நாடாளுமன்றத்திற்கு இழைக்கப்பட்ட அவமானமாகும். உடனடியாக மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரில் அமலில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும்; இணையதள சேவைகள் மீண்டும் அளிக்கப்பட வேண்டும்; 144 தடை உத்தரவு விலக்கப்பட வேண்டும்; காஷ்மீர் மக்களின் கருத்து சுதந்திர உரிமைகள் அமலாக்கப்பட வேண்டும் என கட்சியின் அரசியல் தலைமைக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.

;