india

img

சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளும் குண்டர் கும்பல்களுக்கு ஆயுள் தண்டனை அளித்திடுக!

புதுதில்லி, ஜூலை 12- சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, முஸ்லீம்கள், தலித்துகள் மீது  கொலை மற்றும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் குண்டர் கும்பல்களுக்கு ஆயுள் தண்டனை வரையிலும் அளித்திடவேண்டும் என்று  உத்தரப்பிரதேச சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசின்கீழ் பசுப்பாதுகாப்புக் குழு உட்பட பல குண்டர் கும்பல்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிராக கொலை மற்றும் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.என்.மிட்டல் தலைமையிலான உத்தரப்பிரதேச சட்ட ஆணையம் தாமாகவே முன்வந்து, இப்பரிந்துரைகளை உள்ளடக்கிய ஒரு வரைவு சட்டமுன்வடிவை மாநில அரசுக்கு புதன்கிழமை அன்று அனுப்பியுள்ளது.. சட்ட ஆணையம் அனுப்பியுள்ள 128 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில், மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு குண்டர் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்களையும் பட்டியலிட்டுவிட்டு, இவற்றுக்கு எதிராக 2018 உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் உடனடியாகச் சட்டமியற்ற வேண்டும் என்று மாநில அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

ஏழாண்டு முதல் ஆயுள் வரை
புதிதாக இயற்றப்படும் சட்டத்திற்கு உத்தரப்பிரதேச குண்டர் கும்பல்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதனைத் தடுத்துமுறியடித்திடும் சட்டம் (Uttar Pradesh Combating of Mob Lynching Act) என அழைத்திடலாம் எனவும் சட்ட ஆணையம் பரிந்துரைத்திருப்பதுடன், இக்குற்றங்களைப் புரிபவர்களுக்கு ஏழாண்டுகள் முதல் ஆயுள் காலம் வரையிலும் தண்டனை அளித்திட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குண்டர் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்காது தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்திடும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் இப்புதிய சட்டப்பிரிவுகளில் தண்டனை விதித்திட வகை செய்யப்பட்டிருக்கின்றன. குண்டர் கும்பல்களினால் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருக்கும், கொடுங் காயங்கள் மற்றும் எளிய காயங்ளுக்கு ஆளானவர்களுக்கும், உடைமைகளை இழந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிடவும் இப்புதிய சட்டப்பிரிவில் வகை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இவ்வாறு குண்டர் கும்பல்களினால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு மறு வாழ்வு அளித்திடவும் இப்புதிய சட்டப்பிரிவில் ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

11 பேர் படுகொலை
உத்தரப்பிரதே மாநிலத்தில் 2012 முதல் 2019 வரையில் கிடைத்துள்ள தரவுகளின்படி, பசுப் பாதுகாப்புக் குழு உட்பட பல்வேறு குண்டர் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்கள் 50 நடந்திருக்கின்றன. இவற்றில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 25 பேர் கொடுங் காயங்கள் (grievous injuries) அடைந்துள்ளனர். “இத்தகைய பின்னணியில்தான் சட்ட ஆணையம் தாமாகவே முன்வந்து (suo motu) இவ்வாறு ஓர் ஆய்வினை மேற்கொண்டு. மாநிலத்தில் குண்டர் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்து முறியடித்திட இதுபோன்றதொரு சட்டம் அவசியம் தேவை என்று மாநில அரசுக்குப் பரிந்துரைத்திருக்கிறது.” என்று சட்ட ஆணையத்தின் செயலாளர் சப்னா திரிபாதி கூறினார்.

சிறப்புச் சட்டம்
இதுபோன்று ஒரு சிறப்புச் சட்டம் நாட்டில், மணிப்பூர் மாநிலத்தில் மட்டும்தான் தற்சமயம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றும் சட்ட ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சட்ட ஆணையத்தின் அறிக்கையில் 2015இல் தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்ற சந்தேகத்தின்கீழ் கொல்லப்பட்ட முகமது அக்லக் கொலை உட்பட பல்வேறு சம்பவங்கள் கோடிட்டுக்காட்டப்பட்டிருக்கின்றன. மேலும் அறிக்கையில், குண்டர் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்களுக்கு எதிராக உறுதியுடன் நடவடிக்கை எடுத்தமைக்காக, இந்துத்துவா மதவெறியர்களால், 2018 டிசம்பர் 3 அன்று காவல் ஆய்வாளர் சுபோத் சிங் கொல்லப்பட்ட சம்பவமும் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. “குண்டர் கும்பல்களின் வன்முறை வெறியாட்டங்கள் ஃபரூக்காபாத், உன்னாவ், கான்பூர், ஹாபூர் மற்றும் முசாபர்நகர் மாவட்டங்களில் நடந்திருக்கின்றன. இவற்றில் காவல்துறையினரும்கூட பலியாகி இருக்கிறார்கள். ஏனெனில் மக்கள் அவர்களையும் தங்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது,” என்று, நீதியரசர் மிட்டல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சட்ட ஆணையக் குழுவினர் உலகில் பல நாடுகளில் உள்ள சட்டங்களையும், பல மாநிலங்களில் உள்ள சட்டங்களையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து, இந்த வரைவு சட்டமுன்வடிவைத் தயார் செய்திருக்கிறது. இச்சட்டமுன்வடிவில் இவ்வாறு குண்டர் கும்பல்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதற்கு சதி செய்பவர்கள், உதவுகிறவர்கள் மற்றும் உடந்தையாக இருப்பவர்களுக்கும் மற்றும்  இக்குற்றங்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தடுப்ப வர்களுக்கும் தண்டனைகள் பரிந்துரைக் கப்பட்டிருக்கின்றன.       (ந.நி)

;