புதுதில்லி, ஆக. 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோருக்கு "ரமேஷ் சந்திரா நினைவு அமைதிப் பரிசு" வழங்கப்பட்டது.
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக சமாதான கவுன்சிலின் 75வது ஆண்டு நிறைவு விழாவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டது
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் ஆகியவை ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் புதுதில்லியில் சுர்ஜித் பவன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உலக சமாதான கவுன்சிலின் தலைவர் பல்லவ சென் குப்தா, அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் ஜாதவ் ரெட்டி, தித்தி சுதாகர், பொதுச் செயலாளர்கள் அருண்குமார், ஹர்ச்சந்த் சிங் பட் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இன்றைய தேச சர்வதேச அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால திட்டம் பற்றி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு சுமார் 30 பேர் கலந்து கொண்ட விவாதங்களும் நடைபெற்றன. நிறைவாக பாலஸ்தீனத்துக்கும் கியூபாவுக்கும் ஒருமைப்பாட்டை தெரிவிக்கிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர் 2 அன்று "சுதந்திர பாலஸ்தீனம்" என்ற மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்ற, மதச்சார்பற்ற இந்தியாவை பாதுகாக்க இந்தியா முழுவதும் தீவிர இயக்கங்களை நடத்தவும், நவம்பர் மாதத்தில் ஹைதராபாத் நகரில் "பாலஸ்தீன ஒருமைப்பாடு - உலக சமாதானம்" உட்பட கருத்துக்களை வலியுறுத்தி சிறப்பு கருத்தரங்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான ரமேஷ் சந்திரா அவர்கள் நினைவாக ஒரு அமைதி பரிசை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் து.ராஜா, முன்னாள் பொதுச் செயலாளரும் புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன், பவன் குமார் பன்சால், ஜாதவ் ரெட்டி ஆகிய ஐந்து பேருக்கு ரமேஷ் சந்திர நினைவு அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் தமிழகத்தில் இருந்து சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் ஐ. ஆறுமுகநயினார், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், கே.சி.கோபிகுமார், டாக்டர் சாந்தி மற்றும் புதுச்சேரியில் இருந்து அதன் பொதுச்செயலாளர்கள் சுதா சுந்தரராமன் ஜீவானந்தம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா. கலைநாதன் முற்போக்கு எழுத்தாளர்கள் , கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.