india

img

அக். 30, 31 வேலை நிறுத்தம் அரசு மருத்துவர்கள் முடிவு

தஞ்சாவூர்:
கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் அக். 30, 31 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை அன்று நடைபெற்றது.சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ. அன்பழகன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் கே. செந்தில், செயலர் என். ரவிசங்கர், நிதிச் செயலர் கே. ராமு, முன்னாள் தலைவர் எஸ். கனகசபாபதி, மாவட்டச் செயலர் ஏ. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், “தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு முறையே 4 ஆம் ஆண்டு, 9ஆம் ஆண்டு, 13ஆம் ஆண்டில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஏறக்குறைய ஒன்றரை ஆண்டாக பல்வேறு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டும், எந்தவிதமான முடிவும் எடுக்காமல் அரசு கால தாமதம் செய்து வருகிறது.எனவே, தஞ்சாவூரில் அக்.9, திருநெல்வேலியில் அக். 14, சேலத்தில் அக். 17, கோவையில் 18, மதுரையில் 22 ஆகிய தேதிகளில் தர்ணா போராட்டம் 
நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், அக்.24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நோயாளிகளுக்குச் சிகிச்சை மட்டும் அளிப்பது என்றும், மற்ற ஆய்வுக் கூட்டம், வகுப்புகள் உள்ளிட்ட இதர பணிகளை மாநிலம் முழுவதும் புறக்கணிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.இதன் பின்னர், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் அக். 30, 31 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், போராட்டத்தின்போது அனைத்து அவசர சிகிச்சைகளும் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டம்
முன்னதாக, கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிவளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

;