india

img

மகாராஷ்டிராவின் புதிய எம்.எல்.ஏக்கள் 176 பேர் மீது குற்ற வழக்குகள்

மகாராஷ்டிராவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 176 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பாஜக 105 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி ஒரு தொகுதியிலும், மற்ற கட்சிகள் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், வெற்றி பெற்ற 288 எம்எல்ஏக்களில் 285 பேரின் வேட்பு மனுக்களுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் ஆய்வு செய்து அந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் 285 எம்எல்ஏக்களின் விவரங்களை ஆய்வு செய்ததில், 176 பேருக்கு எதிராக (62 சதவீதம்) குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 113 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தல் நிலவரப்படி, 165 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகளும், 115 எம்எல்ஏக்கள் மீது தீவிர குற்ற வழக்குகளும் பதிவாகியிருந்தன. கடந்த தேர்தலில் 88 சதவீதமாக இருந்த கோடீஸ்வர எம்எல்ஏக்களின் எண்ணிக்கை இந்த தேர்தலில் 93 சதவீதமாக உள்ளது. புதிய சட்டசபையில் இடம்பெற உள்ள எம்எல்ஏக்களின் சராசரி சொத்து ரூ.22.42 கோடியாக உள்ளது. கடந்த தேர்தலின்போது இது ரூ.10.87 கோடியாக இருந்ததாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
 

;