india

img

பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள் பாகுபாடு, களங்கப்படுதல் உள்ளிட்ட தடைகளை எதிர்கொள்கிறார்களா? - பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி, டிச.8-பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்கள் பாகுபாடு, களங்கப்படுதல் உள்ளிட்ட தடைகள் எதையும் எதிர்கொள்ளவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுப்பியிருந்த கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய விளையாட்டு  வீரர்கள் வென்ற  பதக்கங்களின் எண்ணிக்கை மற்றும் அவை குறித்த விபரங்கள் யாவை என்றும், அவர்கள்மீது பாகுபாடு மற்றும் களங்கப்படுதல் உள்ளிட்ட அதிகமான தடைகளை இந்த வீரர்கள் சந்திக்கிறார்களா என்றும், ஆம் எனில், அவற்றைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார். மேலும் இந்திய பாரா விளையாட்டு அமைப்பு, வெளியிட்டுள்ள ஏதாவது விரிவான விதிமுறைகள் கண்டிப்பாக அமுல் படுத்தப்படுகின்றனவா என மேற்பார்வை செய்ய அரசிடம்  வழிமுறைகள் உள்ளனவா என்றும்,  ஆம் எனில், அவை பற்றிய விபரங்கள் என்ன என்றும்,  இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கு எதிராக ஏதாவது, ஊழல் சம்பந்தப்பட்ட, குற்றச்சாட்டுகள் வரப்பெற்றுள்ளனவா என்றும்,  ஆம் எனில், அவை பற்றிய விவரங்கள் என்ன என்றும் கேட்டிருந்தார்.

அதற்கு எழுத்துமூலம் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், எழுத்துமூலம் அளித்த பதில் வருமாறு:

சமீபத்தில் 2020இல் நடந்த, டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய பாரா விளையாட்டு வீரர்கள், மொத்தமாக 19 பதக்கங்கள் (5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம்) வென்றுள்ளனர்.

அவர்கள்மீது பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை. விளையாட்டு ஆணையம் மற்றும் அமைச்சகத்தால், இந்திய பாரா வீரர்கள், பல்வேறு திட்டங்களின் கீழ், ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பின், திட்டங்களின் கீழ், இந்திய பாரா விளையாட்டு வீரர்கள் உட்பட, நம்பிக்கையளிக்கும் விளையாட்டு வீரர்கள்/அணிகள், அடையாளம் காணப்பட்டு, முழுமையான தயாரிப்பிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளும் அளிக்கப்படுகின்றன.

இந்தியாவில் நடைபெறும் நாடுகளுக்கிடையேயான போட்டிகள் மற்றும் வெளி நாடுகளில் நடைபெறும் போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டில் பயிற்சிகள் பெறவும், நிதி உதவிகள் செய்யப்படுவதோடு, முழுமையான சத்தான உணவு, துணை உணவுகள், கருவிகள், கலைநயமிக்க கட்டமைப்பு வசதிகள், தங்கும் வசதிகள், போக்குவரத்து வசதிகள், பிரபலமான இந்திய மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள், உதவியாளர்களின் சேவைகள், அறிவியல் பூர்வ மருத்துவ வசதிகள், விளையாட்டு உபகரண தொகுப்புகள் ஆகிய வசதிகளும் அளிக்கப்படுகின்றன.

உதவிகளுக்கான நிபந்தனைகள் பாரா விளையாட்டு வீரர்களுக்கும் மற்ற வீரர்களுக்கும் ஒன்றுதான்.

2016 - 2021, டோக்கியோ பாராலிம்பிக் சுழற்சி போட்டிகளின் பயிற்சிக்காக, பாரா விளையாட்டு வீரர்களுக்கு ரூபாய் 26 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய பயிற்சி முகாம்கள், விளையாட்டு அறிவியல் சேவைகள், வெளிநாட்டு வெளிப்பாடு உதவிகள் மற்றும் கைப்பிடி செலவுகளும் அடங்கும்.

இந்திய பாராலிம்பிக் கமிட்டி உட்பட தேசிய விளையாட்டு கூட்டமைப்பிற்கு வழங்கப்படும் உதவிகளின், வரையறைகள் முறையாக அமல்படுத்தப் படுகின்றனவா என்பதை, அமைச்சகமும், இந்திய விளையாட்டு ஆணையமும், தங்களது பயிற்சி மற்றும் போட்டிகளுக்கான ஆண்டுக் கூட்டங்கள் மற்றும் மற்ற கூட்டங்களில் காலமுறையாக மீள்பார்வை செய்கின்றன. இதுதவிர, பாரா விளையாட்டு வீரர்களின் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் நாடுகளுக்கிடையேயான போட்டிகளில் பங்கெடுத்தலுக்காக, இந்திய விளையாட்டு ஆணையம், அனுமதி அளித்திருக்கும் நிதித் தொகைகளின், தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின் பட்டியல் மற்றும் உபயோகப்படுத்தியதற்கான சான்றிதழ்கள் இந்திய பாராலிம்பிக் கமிட்டியால் சமர்ப்பிக்கப்படுகின்றன.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் தொடர்பாக, அணி மேலாளர் தேர்ந்தெடுப்பு சம்பந்தமாக இந்திய பாராலிம்பிக் கமிட்டிக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு  வந்தது. ஆனால் அதனை மெய்ப்பிக்க ஆவணச்சான்று இல்லை எனத் தெரிவித்து அது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

;