india

img

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு சுதந்திர தினத்தை ஒட்டி வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது.

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பின் பயிற்சி முகாம் மீது பிப்ரவரி 26-ஆம் தேதி இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை அடுத்து, பாகிஸ்தான் விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளங்களை தகர்க்க முயன்றது. காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானங்களை, இந்திய போர் விமானங்கள் விரட்டின. இதனால் பாகிஸ்தான் போர் விமானங்கள் தங்கள் வான் பகுதிக்குள் திரும்பின.

அப்போது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் 2 பாகிஸ்தான் விமானங்களை விரட்டிச் சென்ற போது இந்தியாவின் மிக்-21 விமானம் தாக்கப்பட்டு பழுதடைந்தது. அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதியாக சிறை பிடித்தது. இதை தொடர்ந்து, சர்வதேச அளவில் எழுந்த கடுமையான நிர்ப்பந்தங்களால் கடந்த மார்ச் 1-ஆம் தேதியன்று அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது. 

இந்நிலையில், அபிநந்தனின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு சுதந்திர தினம் அன்று வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;