india

img

தேர்தல் பத்திரம் எனும் மோசடி – 1

மோடி அரசு கொண்டு வந்த மோசமான திட்டங்களிலேயேதேர்தலுக்கான பங்கு பத்திரங்கள் என்பது ஒன்று.  பெரு நிறுவங்கள்தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல்எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடை தரலாம் என்ற அந்த திட்டம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் திட்டமே.   பின்னாளில்அந்த மோசடித் திட்டத்தால் பெருமளவில் பயனடைந்தது பிஜேபியே என்பது வெளியானது.   இந்த மோசடித் திட்டம் குறித்த விரிவானதொரு புலனாய்வுக் கட்டுரையைஹப்பிங்டன் போஸ்ட் இணைய இதழின் செய்தியாளர் நிதின் சேத்தி வெளியிட்டுள்ளார்.

இந்த கட்டுரையை தமிழில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

அருண் ஜெட்லியின் பட்ஜெட் உரைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக தேர்தல் நன்கொடை குறித்து ஆர்பிஐ அரசாங்கத்தை எச்சரித்திருந்தது.

தேர்தல் நன்கொடைகள் குறித்து ஆர்பிஐ கொண்டிருந்த தொடக்ககால எதிர்ப்புகளை மோடி அரசு நிராகரித்தது. மட்டுமல்ல இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய பண மோசடி மற்றும் ஏமாற்றுத்தனங்களை  குறைப்பதற்கான வங்கியின் தொடர்  ஆலோசனைகளையும் மோடி அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது.  இவற்றை ஹஃபிங்க்டன் போஸ்ட் இந்தியா அணுகிய ஆவணங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.  

2017ஆம் ஆண்டு. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு சனிக்கிழமை.

பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யவிருந்தார். அந்த பட்ஜெட்டில் ஒரு சிக்கல் இருந்ததை வருமானவரித் துறையின் மூத்த அதிகாரி கண்டுபிடித்தார்.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நாள் தான் இந்தியாவின் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி “தேர்தல் நன்கொடை பத்திரங்கள்” குறித்த ‘திரையை விலக்க’ திட்டமிட்டிருந்தார். சட்டப்படி பார்த்தால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது தான். ஆனாலும் கூட சர்ச்சைக்குரியதாகவும் இருந்தது. ஏனெனில் வெளித்தெரியாத வகையில் நிறுவனங்கள் மற்றும் மற்ற விதிமுறைகளுக்குட்பட்ட குழுமங்களின் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கணக்கிலடங்கா பணம் வந்து சேரும் என்பதே இதை சர்சைக்குரியதாக்கியிருந்தது.

அதனால் தான் இதற்கு ஒரு தடங்கல் உருவாகியிருந்தது.

ஜனவரி 28, 2017 அன்று அந்த வருமான வரித்துறை அதிகாரி நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பு அனுப்புகிறார். அதில் இந்த வெளித்தெரியாத நன்கொடைகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சில  திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனுப்பியிருந்தார்.

அதே நாள் மதியம் 1.45க்கு நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் ஐந்தே வரிகள் கொண்ட ஒரு மின்னஞ்சலை எந்தவித அக்கறையுமின்றி பதிலாக அனுப்பி வைக்கிறார். அதில் அவர் இந்தக் குறிப்பிட்ட சட்டத்திருத்தம் தொடர்பாக “முன்னதான கருத்துகளை வேண்டுவதாக” ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவின் (ஆபிஐ) இணை கவர்னர் ராம சுப்ரமணியம் காந்திக்கும், அப்போதைய வங்கியின் கவர்னரான உர்ஜித் பட்டேலுக்கும் அனுப்பியிருப்பதாக தெரிவித்திருந்தார்..

ஜனவரி 30, 2017 திங்கட்கிழமை அன்று ஆர்பிஐ இதற்கு பதிலளித்திருந்தது. அதில் தங்களின்  எதிர்ப்பினை தெளிவாக பதிவு செய்திருந்தது. ஆர்பிஐ எதிர்ப்பு தெரிவித்திருந்ததின் சாராம்சம்  இப்படியாக இருந்தது : தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மற்றும் ஆர்பிஐயின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுதல் என்பது “தவறான முன்னுதாரணமாக “ அமையும் என்றும் இதன் மூலம் பண மோசடியை ஊக்குவிப்பது, இந்திய ரூபாய்த்தாள்களின் மேல் உள்ள நன்மதிப்பு குறைவது போன்றவை நிகழ்வதற்கு ஊக்குவிப்பது போலாகும் என்றும், இதோடு இது மத்திய வங்கிகளின் சட்டத்திட்டத்தினை வலுவிழக்க செய்யும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

நிதி நன்கொடை பத்திரங்களை எதிர்ப்பதற்கு ஆர்பிஐக்கு சரியான காரணங்கள் இருந்தன. இதனை ஆர்பிஐ பின்வரும் விளக்கங்கள் மூலமாக 30 ஜனவரி 2017 அன்று அரசாங்கத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தது.

இந்திய வங்கி அமைப்பின் தாக்கம்

இந்த நடவடிக்கை, உத்தரவாத பத்திரங்களை (bearer instruments) அரசு அல்லாத அமைப்புகள் வெளியிட வழிவகுக்கும்.  ரூபாய் நோட்டுக்களை வெளியிட ஒரே அமைப்பாக இன்று உள்ள ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை இந்நடவடிக்கை குறைக்கும்.  உத்திரவாத பத்திரங்கள் அதிகமாக வெளியிடப்பட்டால்,  அதுவே ரூபாய் நோட்டுக்களுக்கு மாற்றாக உருவாகும் சூழல் ஏற்படும்.  ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுக்களின் மதிப்பையும் சீர்குலைக்கும்.   ரிசர்வ் வங்கி சட்டப் பிரிவு 31ஐ திருத்துவதால் மத்திய வங்கி அமைப்பின் அடிநாதத்தையே சேதப்படுத்தும்.   மேலும் இது மோசமான முன்னுதாரணமாகவும் ஆகும்.

தேர்தல் வெளிப்படைத்தன்மை மீதான தாக்கம்

தேர்தல் வெளிப்படைத்தன்மைக்கு எதிரானதே இந்த தேர்தல் பத்திரங்கள் நடைமுறை.  ஏனெனில், இந்த பத்திரங்களை வாங்குபவர்க் எந்த கட்சிக்கு நிதியளிக்கிறார் என்ற விபரங்களை வெளியிட வேண்டியதில்லை.   மாற்றத்தக்க பங்கு பத்திரம் என்பதால், அதை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்க இயலும்.  இந்த ரகசிய தன்மை காரணமாக, எந்த கட்சிக்கு நிதி வழங்கப்பட்டது என்ற தகவல் கடைசி வரை தெரியாமல் போகும்.

அரசியல் கட்சிக்கு நிதி வழங்குவதுதான் நோக்கம் என்றால், அதை காசோலையாகவோ, வரைவோலையாகவோ, எலெக்ட்ரானிக் பரிவர்த்தனையின் மூலமாகவே செய்ய முடியும்.    தேர்தல் பத்திரம் என்று தனியாக வெளியிடப்படுவது, ஊழலை வளர்க்கவே உதவும்.

பொதுவாக ஆர்பிஐ இது போன்று கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது என்றால் எந்த அரசு நிர்வாகமாக இருந்தாலும் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளும். வழக்கமாக அரசாங்கம் எந்தவொரு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுவதாக இருந்தாலும் அது தொடர்பான அமைச்சகத்திடமும் மற்ற அரசாங்க நிர்வாகக் குழுவுடனும் ஆலோசித்து அவர்களின் கருத்தையும் உள்வாங்கியே திருத்தத்தை மேற்கொள்ளும்.

ஆனால் தேர்தல் நன்கொடை பத்திரங்களைப் பொறுத்தவரையில் அரசின் முக்கிய தலைமைகள் தங்களது முடிவினை ஏற்கனவே எடுத்திருந்தனர்.

அதன் வெளிப்பாடாக ஆர்பிஐயின் அக்கறையை சுருக்கமாகவும், பதட்டத்துடனும் மறுத்துவிட்டார் அப்போதைய வருவாய்த்துறை செயலரான ஹஸ்முக் ஆதியா. மத்திய வங்கியின் கடிதத்தை நிதியமைச்சகம் பெற்ற அதே நாளில் ஒரே ஒரு பத்திகொண்ட சுருக்கமான கருத்தை பதிலாக அனுப்பியிருந்தார்.

நிதியமைச்சர் ஜெட்லி மற்றும் பொருளாதர விவாகரத்து துறை செயலர் தபன் ராய்க்கு அனுப்பிய குறிப்பில் இப்படி தொடங்கியிருந்தார் ஆதியா – “நன்கொடையாளர்களின் அடையாளத்தை ரகசியமாக வைத்திருப்பதற்காகவே ‘பிரி-பெய்ட் வசதிகள் மூலமாக பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது என்பதையும் இதனால் வரியை முழுமையாக செலுத்துபவரிடமிருந்தே நன்கொடைகள் பெறப்படுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது என்பதையும்  ஆர்பிஐ புரிந்து கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது” என்றிருந்தார்.

ஆர்பிஐயின் அக்கறையான கருத்துகளுக்கு முறையான விவாதங்களை வருவாய்த்துறை செயலர் முன்வைத்திருக்க வேண்டும், அவரோ ஆர்பிஐ யின் எதிர்வினைகளை எந்த விதத்திலும் தாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிற பாணியிலேயே பதில் தந்திருந்தார்.

‘நிதி மசோதா ஏற்கனவே அச்சிடப்பட்ட நிலையில் இந்த அறிவுரை தாமதமாக வந்திருக்கிறது. அதனால் நாங்கள் எங்களுடைய திட்டத்தின்படியே செயல்படுகிறோம்” என்றும் ஆதியா குறிப்பிட்டிருந்தார்.

அன்றைய தினமே அவருடைய சக ஊழியரான பொருளாதார விவாகரத்துறை செயலரான ரே, ஆதியாவின் கருத்தோடு உடன்பட்டுவிடார். இந்த கோப்பு மின்னல் வேகத்தில் நகர்த்தப்பட்டு உடனடியாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் கையெழுத்தும் இடப்பட்டது.

 இதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு பிப்ரவரி 1, 2017 அன்று தேர்தல் நன்கொடை பத்திரத்தை கொண்டு வரும் திட்டத்தினையும் ஆர்பிஐ சட்டத் திருத்த மசோதாவையும் நிதியமைச்சர் முன்வைக்கிறார். இதன் மூலம் வெளிப்படைத்தன்மையும் “இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் அமைப்பு சீர்த்திருத்தப்படும்” என்றும் அறிமுகப்படுத்தினார். அடுத்த மாதமே இந்த 2017 நிதி மசோதா சட்டமாக இயற்றப்பட்டது.

வெளித்தோற்றத்திற்கு இந்தச் சட்டம் எந்த வித கெடுதலையும் ஆர்பிஐ மற்றும் மற்ற திருத்தங்களுக்கு ஏற்படுத்தவில்லை என்று தோன்றினாலும் முறையான ஆலோசனைகள் அற்று மிக அவசரமாகக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம் இந்திய கட்சிகளுக்குள் பெரிய வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தின் துணையோடு கணக்கின்றி பணத்தினைக் கொட்டுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.  இதற்கு முன்பு இந்திய நிறுவனங்கள் அரசியல் கட்சிக்கு நிதி அளித்ததற்கான கணக்கினைத் தங்களது வருடாந்திர நிதி அறிக்கையில் குறிப்பிட்டபடி இருந்தது. தங்களது வருடாந்திர இலாபத்தில் இருந்து 7.5 சதவீதத்துக்கு மேல் நன்கொடையாக அளிக்க முடியாது, அதிலும் சராசரியாக மூன்று வருடங்களுக்கு மட்டுமே. வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தர முடியாத நிலை இருந்தது.

பாரதிய ஜனதா தலைமையிலான அரசு இவை அனைத்தையும் மாற்றியது. இந்திய நிறுவனங்கள், எந்தவொரு வர்த்தகமும் அற்ற நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் நிதி அளிக்கத் தொடங்கியது. தனி நபர்கள், ட்ரஸ்ட் போன்ற அங்கிகரிக்கப்பட்ட குழுமங்கள் போன்றவை இப்போது தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் கணக்கிலடங்காத வகையில் தேர்தல் நன்கொடை பத்திரங்களை வாங்கிக் குவிக்கின்றன. கட்சிகளுக்கு நிதியளிப்பதன் மூலமாக இதனை ரொக்கப்பணமாக மாற்றிக் கொள்கின்றன.

தற்போது உச்சநீதிமன்றம் இந்தத் திட்டத்தின் காலக்கெடுவை கணக்கில் எடுத்துள்ள நிலையில் வெளிப்படைத் தன்மைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும்  ஒய்வு பெற்ற கப்பல் கேப்டன் லோகேஷ் பத்ரா இது தொடர்பான சில ஆவணங்களைக் கொண்டிருக்கிறார். இந்திய வங்கித்துறை மற்றும் நிதித்துறையில் பாதுகாவலனான ஆர்பிஐ இந்த மோடி அரசால் எப்படி கண்டுகொள்ளப்படாமலும், ஆதிக்கம் செலுத்தும் வகையிலும் தவறாகவும் வழிநடத்தப்படுகிறது என்பதை இந்த ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார். இதற்கான சட்டப்பூர்வமான ஒப்புதலை எவ்வாறு விரைவாகப் பெற்றனர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். இதனால் இந்தியா மடும்மலாது வெளிநாட்டு நிறுவனங்களின் இருந்தும் பணமானது கண்டுபிடிக்க முடியாத வகையில் அரசியல் கட்சிகளுக்கு கொட்டித்தறப்படும் என்று கவலை தெரிவிக்கிறார்.

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்த ஆர்பிஐயின் கண்டனங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என்பதோடு இந்தத் திட்டமானது இந்திய ரூபாய் நோட்டுகளின் மீதான நிலைத்தான்மையைக் குலைப்பதோடு, பண மோசடிக்கு வழிவகுக்கும் என்றும் மத்திய வங்கி எச்சரித்ததை இந்த அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஹஃப்பிங்டன் போஸ்ட்டால்  கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு நிதிமைச்சகம் இவ்வாறு பதில் அனுப்பியிருந்தது.

“நீங்கள் மின்னஞ்சலில் சில் விவகாரங்களை எழுப்பியிருந்தீர்கள். அவை யாவும் அப்போதைய துறைசார் அதிகாரிகள் மேற்கொண்ட கொள்கை முடிவே ஆகும். இதனடிப்பையில் பார்க்கிறபோது அரசு அமைப்புகளைப் பொறுத்தவரை அனைத்து முடிவுகளுமே நன்னம்பிக்கை மற்றும் மக்களின் நலனுக்காகவுமே எடுக்கப்படுகின்றன. இந்த முடிவுகளை எடுத்துக்கொள்ளும் விதங்களில் ஒவ்வொருவரின் கோணங்கள் மாறுபடக்கூடும். அதனால் கொள்கை முடிவுகளில் உள்ள அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டே பொருத்தமான விளக்கத்தை அளிக்க முடியும்.

மத்திய பட்ஜெட் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பட்ஜெட் துறையினருக்கு பிரிவுக்கு இது முக்கியமான சமயம். அதனால் இந்த விவகாரம் குறித்து அவர்களால் உடனடியான பதிலைத் தர இயலாது. இதற்கான தகுந்த சமயத்தில் நாங்கள் எங்களது தரப்பு பதிலைத் தருவோம்”. என்று பதில் அளித்திருந்தது.

ஆர்பிஐயைக் கடந்த குறுக்கு வழி

லோக்சபாவில் தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மையைக் கொண்டு எந்தவித கேள்வியுமின்றி ராஜ்யசபாவையும் கடந்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மற்றும் மூடிமந்திரமான நன்கொடைகளை சட்டமாக்கிய பிறகு தான் அரசு இந்த பத்திரங்கள் எப்படி செயல்படப்போகின்றன என்பதைப் பற்றியே ஆலோசனை செய்ய இருந்தது என்பது தெரிகிறது.

நிதி அமைச்சக அதிகாரிகள் இது சார்ந்த விவரங்களை பூர்த்தி செய்யத் தொடங்கினார்கள். இந்நிலையில் இந்த உள் விவகாரங்கள் குறித்த ஆர்பிஐயின் கவலைக்கு அரசாங்கம் ஒரு மறுப்பினை தயார் செய்யத் தொடங்கியது.

அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்து அரசு குறிப்பிட்டிருந்ததை ஆர்பிஐ சுட்டிக்காட்டியதற்கு தாங்கள் ஏற்கனவே சொன்னதற்கு மாறானதான ஒரு பதிலை நிதி அமைச்சகம் அளித்திருந்தது. “தேர்தல் நன்கொட பத்திரங்களைப் பொறுத்தவரை நன்கொடையாளர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாப்பதே தலையாய குறிக்கோள்” என்றிருந்தது நிதியமைச்சகம்.

மத்திய வங்கியின் கொள்கை அமைப்பினை இந்த பத்திரங்கள் குலைக்கும் என்றும் இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறும் என்றும் ஆர்பிஐ விடுத்திருந்த எச்சரிக்கைக்கு நிதியமைச்சகம் பொருளாதர அடிபப்டையில் ஒரு விவாதத்தைக் கூட எழுப்பவில்லை.

இதற்கு அவர்கள் அளித்திருந்த பதிலானது மிக மேலோட்டமானதாக இருந்தது “ஆர்பிஐ சட்டம் உட்பட அரசு நிர்வாகம் குறித்து சட்டமியற்றுதலுக்கு பாராளுமன்றதுக்கே முதல் உரிமை உள்ளது” என்றிருந்தது.

பாராளுமன்றத்தில் ஜெட்லி தேர்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகே அதாவது ஜூன் 2017ல் பொருளாதர விவாகாரத் துறை செயலர் தபன் ராய் பத்திரங்கள் எவ்வாறு செயல்படும் என்று விவரிக்கிறார்.

“வாங்குபவர், செலுத்துபவர் இருவரைக் குறித்த அடையாளங்களும் குறிப்பிட்ட வங்கிகளினால் ரகசியம் காக்கப்படும். இந்த விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் மூலமாகவும் பெற இயலாது” என்கிறார் ராய் தனது குறிப்பில்.

தேர்தல் பத்திரங்களில் பங்களிப்பு செய்பவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களை ஆவணப்படுத்துவதில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பில் தெரிவித்திருந்தார்.

அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் பேசியதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மையை இது கொண்டிருக்கிறது. தேர்தல் நன்கொடை பத்திரங்கள் குறித்து அவர் “தேர்தல் நிதியளிப்பில் வெளிப்படைத்தன்மை” என்று தான் பேசத்தொடங்கினார். தனது உரையை முடிக்கையில் “இந்த சீர்திருத்தம் தேர்தல் நிதியளிப்புக்கு முறையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் அதோடு கறுப்புப் பணத்திலிருந்து வருங்காலத் தலைமுறைனரைக் பாதுகாக்கும்” என்றிருந்தார்.

ராய் அனுப்பியிருந்த குறிப்பிலோ நன்கொடையாளர்களைப் பற்றிய அடையாளங்கள் தெரிவிக்கப்படமாட்டாது என்பது வெளிப்படையாக சொல்லப்பட்டிருந்தது. “பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் வங்கிகளினால் பாதுகாக்கப்படும். .அமலாக்கப்பிரிவுக்கு எப்போது தேவையோ அப்போது அவை அளிக்கப்படும் “ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது அரசாங்கத்துக்கு மட்டுமே இந்த பத்திரங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் பற்றிய விவரம் தெரியும் என்பது தான் இதன் அர்த்தம்.

தேர்தல் நன்கொடை பத்திரங்கள் எவ்வாறு செயல்படப்போகின்றன என்பதை நிதி அமைச்சகம் முடிவு செய்தபிறகு ஜெட்லியின் வழிகாட்டுதலின்படி ஜூலை 19, 2017 அன்று ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சந்திப்பில் நிதி அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், இந்திய தேர்தல் அதிகாரி, ஆர்பிஐ அதிகாரிகள் கலந்து கொண்டனர். இது “தேர்தல் நன்கொடை பத்திரத்திற்கு இறுதி வடிவம்” தருவதற்கான சந்திப்பு என்று சொல்லப்பட்டது. இதில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆர்பிஐ பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை.

ஜூலை 28, 2017 அன்று ஆர்பிஐ துணை கவர்னர் B.P கனுங்கோ பொருளாதார விவாகாரத்துறை செயலரான S.C கார்கினை தனியாக சந்தித்தார். இவர் அப்போது தபன் ராயிடமிருந்து பொறுப்பினை எடுத்துக் கொண்டிருந்தார். அதே நாள் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேலும் நிதியமைச்சரான ஜெட்லியை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பு தேர்தல் நன்கொடை பத்திரத்தை வடிவமைப்பது தொடர்பாக அமைந்திருந்தது என நிதியமைச்சகத்தின் குறிப்பு தெரிவிக்கிறது.

ஜெட்லிக்கும், உர்ஜித் பட்டேலுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் ஆர்பிஐ மீண்டும் இந்தத் திட்டத்தில் இருக்கிற குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி நிதியமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்தது.

அந்தக் கடிதத்தில் ஆர்பிஐ துணை கவர்னர் கனுங்கோ இப்படிக் குறிப்பிட்டிருந்தார், “விரும்பத்தகாத செயல்பாடுகளுக்கு இந்த பத்திரங்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடியதாய் அமையும். இது போன்ற கொணர்வுப் பத்திரங்களை (bearer bonds) விநியோகிப்பதற்கு உலகளவில் சமீபகாலமாக எந்த முன்னுதாரங்களும் இல்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றிருந்தார்.

ஆனாலும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு தோல்வியே கிடைக்கக்கூடும் என்று ஆர்பிஐ புரிந்துகொண்டது. அதனால் குறைந்தபட்சமாக பண மோசடியையாவது குறைக்கலாம் என்கிற முடிவுக்கு வந்திருந்தது. அதற்காக கடைசிகட்ட முயற்சியினை எடுக்கத் தொடங்கியது.

அதனால் ஆர்பிஐ சார்பாக அனுப்பப்பட்டிருந்த கடிதம் இப்படி முடிந்தது “இது போன்ற பத்திரங்களை இந்தியா இடைநிலை மாற்றாக (transtitional basis )கருதும்” என்றிருந்தது. இதோடு பத்திரங்களை தவறாகப் பயன்படுத்தும் விதத்தினைக் குறைக்கும் சில ஆலோசனைகளையும் வழங்கியிருந்தது : இந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டவுடன் அடுத்த  பதினைந்து நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும், அதோடு அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் மட்டுமே பத்திரங்களை வாங்க இயலும். அவரைப் பற்றி வாடிக்கையாளரை அறிதல் விதிகளைப் பயன்படுத்தி (KYC) சரிபார்த்த பிறகே பத்திரங்களை அளிப்பதற்கு அனுமதியளிக்க முடியும். இந்தப் பத்திரங்கள் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே விநியோகிக்கப்படும். அதிலும் மும்பை ஆர்பிஐ கிளையில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்கிற ஆலோசனைகளை வழங்கியது.

இறுதியாக ஆர்பிஐ ஒரு வருடத்தில் வெளியிடப்படுகிற பத்திரங்களுக்கான  உச்சபட்ச மதிப்புத் தொகையை நிர்ணயித்தாக வேண்டும் என்றது.

“தேர்தல் கொணர்வுப் பத்திரங்களின் நன்மைகளை ஆர்பிஐ தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. அதோடு நியமிக்கப்பட்ட தேர்வு ஆணையத்தின் பரிந்துரையோடு பெரிதளவு ஆர்பிஐயின் கருத்தும் இணைந்துள்ளது. நாம் தேர்தல் கொணர்வுப் பத்திரங்களுக்கான காலக்கெடு பதினைந்து நாட்களுக்கு மட்டுமே என்கிற ஆர்பிஐயின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று பொருளாதார விவாகாரத் துறை செயலர் கார்க் நிதியமைச்சருக்கு ஒரு குறிப்பு அனுப்பியிருந்தார்.

மத்திய வங்கி வழங்கியிருந்த மற்ற ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டன. இந்த பத்திரத் திட்டம் என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது. எந்த இந்தியக்குடிமகனும் , நிறுவனமும், குழுமங்களும், என்ஜிஒக்களும் எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் பத்திரங்களைப் பெற்று அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நன்கொடையாகத் தரலாம் என்று அனுமதியளிக்கப்பட்டது. இன்றைய தேதி வரை ஆறாயிரம் கோடிக்கும் அதிகமான  மதிப்பிலான பத்திரங்கள் அரசியல் கட்சிகளால் வாங்கப்பட்டும், வழங்கப்பட்டும் வருகின்றன.

பெயரிடப்படாத குறிப்பு

 ரிசர்வ் வங்கியின் ஆட்சேபணைகளை அரசு உதாசீனப்படுத்தியதோடு அல்லாமல்தவறான இடங்களில் இருந்து ஆலோசனை பெற்றுள்ளது.   ஹப்பிங்டன் போஸ்ட் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பெற்ற ஆவணங்களில்ஒரு கையெழுத்திடப்படாத அறிக்கை உள்ளது.

இந்திய ஆட்சியதிகாரத்தின் மற்ற மெமோக்கள் போல் அல்லாமல் இந்த மெமோக்கள் தேதியிடப்படாமலும், கையொப்பமில்லாமலும் ‘லெட்டர் ஹெட்’ அற்ற வெற்றுத் தாளில் அச்சடிக்கப்பட்டு அனுப்பப்பட்டது.

இந்தக் மெமோ குறிப்பை ஹஃப்போஸ்ட்  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியிடமும் தற்போது பணியில் இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடமும் காண்பித்தது. ஒருவர் மத்திய அரசின் செயலராக பணி செய்கிறார், மற்றொருவர் இதே பொறுப்பில் இருந்து ஒய்வு பெற்றவர். இருவருமே சொன்ன தகவலானது, இந்த பெயரிடப்பதாத குறிப்பைப் பார்க்கையில் அதிகாரிகள் வழக்கமாக பயன்படுத்தும் மொழியில் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை என்றனர்.

“தேர்தல் நன்கொடை பத்திரங்களை எப்படிக் கையாள்வது” என்ற கேள்வியோடு அந்தக் குறிப்புத் தொடர்கிறது. மேலும் அதில் “கொணர்வுப் பத்திரமானது எந்த ஒரு குறிப்பிட்ட பயனாளரின் பெயரையும் கொண்டிருக்காது என்றும் அந்த பத்திரத்தின் உரிமை அதைப் பெறுபவருக்கானது. யார் யாரிடமிருந்து பெறப்படுகிறது, எங்கு செல்கிறது என்பதற்கான எந்த தடயமும் இருக்காது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

2000 ரூபாய் வரையில், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வெளியிட பரிந்துரை செய்த இந்த குறிப்பு, இது கருப்புப் பண நடமாட்டத்தை அதிகரிக்கும் என்றும் எச்சரித்திருந்தது.   2000 ரூபாய்க்கு அதிக மதிப்பிலான பத்திரங்களை டிஜிட்டல் பாண்டுகளாக வெளியிடவும், அதை தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் மூலமாக வெளியிடவும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.   இந்த முறையிலும்,  கருப்புப் பணம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்த குறிப்பை ஆராய்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி, இது அரசுத் துறையை சாராத ஒருவரால் தயாரிக்கப்பட்டிருக்கும் என்று கருத்து தெரிவித்தார். இந்த குறிப்பின் அசல் தன்மையை, ஹப்பிங்டன் போஸ்ட்டால் உறுதி செய்ய முடியவில்லை.

இறுதியாக, அரசு இந்த மர்மமான குறிப்பை நிராகரித்து, தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள தேர்தல் பத்திர முறையை அறிமுகப்படுத்தியது.

 தொடரும். 

தொடர்புடைய ஆவணங்கள்.

தேர்தல் பத்திர திட்டத்துக்கு, ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பு

ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பை நிராகரித்த வருவாய் செயலர்.

கையெழுத்தில்லாத தேர்தல் பத்திரங்கள் தொடர்பான குறிப்பு

கட்டுரையின் ஆங்கில இணைப்பு

https://www.huffingtonpost.in/entry/rbi-warned-electoral-bonds-arun-jaitley-black-money-modi-government_in_5dcbde68e4b0d43931ccd200

-நன்றி: சவுக்கு

 

;