india

img

2024 இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
2024 இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமூக நீதியை அரசின் கொள்கையாக கொண்டு செயல்படுகிறதாகவும், 2027-ஆம் ஆண்டும் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாகும்; 2047இல் புதிய இந்தியாவை படைப்போம் என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடிக்கள், 3,000 புதிய ஐடிஐ, 319 பல்கலைக்கழகங்கள், நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

  • 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்.
  • நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.
  • ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் அனைத்து ஆஷா பணியாளர்களுக்கும், அங்கன்வாடி பணியாளர்களுக்கும் சுகாதார வசதிகள் விரிவுபடுத்தப்படும்.
  •  வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, நேரடி மற்றும் மறைமுக வரி, இறக்குமதி வரி விதிப்பிலும் எந்த மாற்றங்களும் இல்லை. வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும். கூடுதலாக செலுத்திய வருமான வரி 10 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது.
  • ரூ.25,000 வரையிலான வருமான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 1 கோடி பேர் பயனடைவர்.
  • கூடுதலாக செலுத்திய வருமான வரி திருப்பி அளிக்கப்படும் நாட்கள் 93 நாட்களில் இருந்து 10  நாட்களாக குறைக்கப்படும்.2023-24இல் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அரசின் செலவு ரூ.44.90 லட்சம் கோடி. திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடு ரூ. 27.56 லட்சம் கோடி. நிதி பற்றாக்குறை 5.8%.
  • 2024-25இல் நிதி பற்றாக்குறை 5.1% ஆக இருக்கும்.
  • ரூ11.75 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு திட்டம்.
  • உணவு மானியம் ரூ.2.12 லட்சம் கோடியாக குறைப்பு.
  • 40,000 சாதாரண ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் தரத்தில் மாற்றியமைக்கப்படும். 
  • ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
  • மாநிலங்களுக்கு வட்டியில்லாக் கடனாக ரூ.1.2 லட்சம் கோடி வழங்கப்படும்

இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

பாதுகாப்பு அமைச்சகம்: ரூ.6.1 லட்சம் கோடி
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்: ரூ.2.78 லட்சம் கோடி
ரயில்வே அமைச்சகம்: ரூ.2.55 லட்சம் கோடி
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்: ரூ.2.13 லட்சம் கோடி
உள்துறை அமைச்சகம்: ரூ.2.03 லட்சம் கோடி
ஊரக வளர்ச்சி அமைச்சகம்: ரூ.1.77 லட்சம் கோடி
ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்: ரூ.1.68 லட்சம் கோடி
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்: ரூ.1.27 லட்சம் கோடி