india

img

பிப்ரவரி 16 நாடு தழுவிய அளவில் பந்த்:சம்யுக்த கிசான் மோர்ச்சா – மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல்

ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, நாசகர தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 16 அன்று நாடு தழுவிய  அளவில் பந்த் நடத்திட சம்யுக்த கிசான் மோர்ச்சா – மத்தியத் தொழிற்சங்கங்கள் இணைந்து  அறைகூவல் விடுத்துள்ளன.

இது தொடர்பாக இவ்விரு அமைப்புகளும் புதுதில்லியில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சம்யுக்த கிசான் மோர்ச்சாவும், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையும் 2023 ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற கூட்டு இயக்கத்தை ஆய்வு செய்தது. தற்போது ஆட்சியில் உள்ள ஒன்றிய மதவெறி அரசாங்கம், கார்ப்பரேட்டுகளுடன் கூட்டுக் களவாணித்தனம் செய்து, நாட்டின் சொத்துக்களை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில தனியார் கார்ப்பரேட்டுகளிடம் வெட்கக்கேடான முறையில் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்திய ஜனநாயகத்தில் இயங்கிடும் நிறுவனங்கள் அனைத்தையும் செயலற்றதாக்கி, மேற்படி கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒன்றிய மதவெறி அரசாங்கம் தொடர்ந்து தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கங்களின் உரிமைகளை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக மறுத்து வருகிறது. அனைத்துப் பிரிவு மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளையும், தங்கள் கட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பிடும் அனைத்துத் தரப்பினரையும் நசுக்கிக் கொண்டிருக்கிறது.  அரசியலிலும், அரசமைப்புச்சட்ட நிறுவனங்களிலும் ஒன்றிய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு அமைப்புகளை துஷ்பிரயோகம் செய்து, மதவெறி நஞ்சை மிகவும் ஆபத்தான முறையில் செலுத்திக்கொண்டிருப்பது தொடர்கிறது.

ஒன்றிய அரசாங்கம் ஊடகங்களின் சுதந்திரத்தைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறது.ஒன்றிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துத்தரப்பு மக்களில் பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே எண்ணற்ற போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தப்பின்னணியில்தான் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றுபட்டு நின்று மதவெறி அரசு-கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளின் கூட்டணியை முறியடித்திட வேண்டிய வரலாற்றுக் கடமையை ஆற்றிட மேற்கொண்ட உறுதியை மீளவும் வலியுறுத்துகின்றனர்.

2020 நவம்பரிலிருந்து இவ்விருது இயக்கங்களும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் 2024 ஜனவரி 26 அன்று மாவட்டத் தலைநகர்களில் டிராக்டர்/வாகனங்கள் பேரணி நடத்திட அறைகூவல் விடுக்கிறது.

இது தொடர்பாக ஜனவரி 10 முதல் 20 வரையிலும் தொழிலாளர்களும் விவசாயிகளும் வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்வதென்றும் அந்தசமயத்தில் துண்டுப் பிரசுரங்கள், கோரிக்கை சாசனங்களை விநியோகிப்பது என்றும் திட்டமிட்டிருக்கிறது.

 கோரிக்கைகள்:

அனைத்து விவசாயி விளைபொருள்களுக்கும் கட்டுப்படியாகும் விலை + உற்பத்திச் செலவினத்துடன் 50 விழுக்காடு உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திட வேண்டும்.

சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் கடன்களை ரத்து செய்திட வேண்டும்.

தொழிலாளர்களின் குறைந்தபட்ச  ஊதியம் 26 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

தொழிலாளர்களுக்குக் கேடு பயக்கும் நான்கு லேபர் கோடு(Labour Codes)களையும் ரத்து செய்திட வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டத்திலும், குற்றவிசாரணை முறைச் சட்டத்திலும் அரக்கத்தனமான முறையில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை ரத்து செய்திட வேண்டும்.

உத்தரவாதமான வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும்.

ரயில்வே, ராணுவத்துறை, மின்சாரம், நிலக்கரி, எண்ணெய், உருக்கு, டெலிகாம், அஞ்சல், போக்குவரத்து, விமானநிலையங்கள், துறைமுகங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் உட்பட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கக்கூடாது.

கல்வி, சுகாதாரத்துறையை தனியார்மயமாக்காதே.

வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் வழங்காதே.

நிரந்தர கால வேலை வாய்ப்பை ரத்துசெய்.

200 நாட்களுடன் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை வலுப்படுத்திடு. இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 600 ரூபாய் ஊதியம் வழங்கிடு.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவா.

முறைசாராத் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் கொண்டுவா. அனைத்து முறைசாராத் தொழிலாளர்கள் அமைப்புகளுக்கும் நல வாரியங்களை ஏற்படுத்திடு.

மக்களைக் கூறுபோடும் மதவெறி நிகழ்ச்சிநிரலை எதிர்த்திடுவோம்.

அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஜனநாயகம், கூட்டாட்சித்தத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்திடுவோம்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் தொழிலாளரிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சமூகத்தின் அனைத்துப்பிரிவு மக்களும் பெரும் திரளாகப் பங்கேற்று, எதேச்சாதிகார ஆட்சியின் மக்கள் விரோத, தேச விரோத கொள்கைகளை முறியடித்திடுவோம்.

மக்களைப் பாதுகாத்திட, ஜனநாயகத்தைப் பாதுகாத்திட, நாட்டைப் பாதுகாத்திட நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் ஆதரவினை அளித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு சம்யுக்த கிசான் மோர்ச்சாவும், மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடையும் தங்கள் அறிக்கையில் கோரியுள்ளார்கள்.

;