india

img

தடுப்பூசிகள் தயாரிப்பு திட்டமிடுதலில் தோல்வியும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு சுதந்திரம் அளித்திருப்பதும் -ஆர். ராம்குமார்

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் உக்கிரமாகப் பரவிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், இந்நெருக்கடியைச் சமாளிப்பதற்காக, இது தொடர்பாகக் கொள்கை வகுத்திடும் அமைப்புகளின் கவனத்தையும் கூர்மையாக ஈர்த்திருக்கிறது. இதற்கு எதிராக தடுப்பூசிகளை விரிவானமுறையில் எடுத்துச்செல்வது தொற்றுப் பரவலைக் குறைத்திட உதவலாம் என்றும்,  தொற்றுக்கும் மரணத்திற்கும் இடையேயுள்ள கண்ணியை பலவீனப்படுத்தலாம் என்றும் உலக அனுபவம் காட்டுகிறது. எனவே, நாடுகள் பல எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகத் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளைப் போடுவதற்கு விரைந்துகொண்டிருக்கின்றன.

இதில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது. 2021 ஏப்ரல் 17 தேதிய கணக்கின்படி, கிரேட் பிரிட்டனில் உள்ள மக்கள்தொகையில் 48.2 சதவீதத்தினரும், அமெரிக்காவில் உள்ள மக்கள்தொகையில் 38.2 சதவீதத்தினரும், ஜெர்மனியில் உள்ள மக்கள் தொகையில் 18.9 சதவீதத்தினரும் தடுப்பூசிப் போட்டுக்கொண்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் வெறும் 7.7 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசிகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருப்பவர்களின் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, கடுமையாகத் தடுப்பூசிப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதேயாகும். 2021 ஏப்ரலுக்குப் பின்னர் நாள்தோறும் தடுப்பூசி போட்டுக் கொள்கிறவர்களின் எண்ணிக்கை உண்மையில் குறைந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு ‘தடுப்பூசி விழா’ என்று அறிவித்த பின்னரும்கூட இதுதான் நிலை. இதே விகிதத்தில் தடுப்பூசி போடுபவர்களின் நிலை தொடர்ந்தால் 2022 ஏப்ரலில் கூட அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படாது.

இந்தக் கட்டுரையில், இந்தியாவில் தடுப்பூசிகளுக்கான தேவை மற்றும் சப்ளை குறித்தும், கடந்த நான்கு மாதங்களாக ஆட்சியாளர்கள் இது தொடர்பாக மேற்கொண்ட கொள்கைகள் குறித்தும் புரிந்துகொள்ள முயற்சித்திருக்கிறோம்.    

தடுப்பூசிகளுக்கான தேவை

இந்தியாவின் மக்கள்தொகை, 2020இன் கணக்கெடுப்பின்படி சுமார் 138 கோடியாகும். இதில், சுமார் 30 சதவீதத்தினர் 18 வயதுக்குக் கீழானவர்களாக இருக்கலாம். அதாவது, இந்தியா வயது வந்தவர்கள் அனைவருக்கும்  தடுப்பூசி போட வேண்டுமென்றால் சுமார் 96 கோடியே 60 லட்சம் பேர்களுக்குப் போட வேண்டும். ஒவ்வொருவருக்கும் இரு தடவைகள் (two doses) எனில், 193 கோடியே 20 லட்சம் தடவைகள் போட வேண்டும். இதில் 60 சதவீதம் குறியீடு என்றால் அதன் பொருள் 58 கோடி பேர் என்பதாகும். ஒவ்வொருவருக்கும் இரு தடவைகள் (2 doses) என்றால் இது 116 கோடி தடவைகளாகும்.

2021 ஏப்ரல் 19 தேதிய கணக்கின்படி, 12 கோடியே 38 லட்சம் (123.8 மில்லியன்) பேர் குறைந்தபட்சம் ஒரு தடவை தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். (அதாவது, இது மொத்த எண்ணிக்கைகளாகும்.) சுமார் 10 கோடியே 72 லட்சம் (107.2 மில்லியன்) பேர் முதல் தடவை தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். 1 கோடியே 63 லட்சம் பேர் இரண்டாவது தடவை போட்டிருக்கிறார்கள்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்தியா 60 சதவீதக் குறியீட்டை எய்திட வேண்டுமானால் 103 கோடியே 60 லட்சம் (1036 மில்லியன்) தடுப்பூசிகள் தேவைப்படும். 100 சதவீதக் குறியீட்டை எய்திட வேண்டுமெனில் 180 கோடியே 80 லட்சம் (1808 மில்லியன்) தடுப்பூசிகள் தேவை.

இந்தக் குறியீட்டை 2022 ஜனவரியில் அடைந்துவிடுவோம் என்று நாம் வைத்துக்கொள்வோம். இதனை எய்துவதற்கு இந்தியா தன் கையில் இன்னமும் 9 மாதங்களை வைத்திருக்கிறது. இதன்படி ஒவ்வொரு மாதமும் 11 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் அல்லது நாளொன்றுக்கு 38 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். அதே போன்று, 100 சதவீதமும் குறியீட்டை எய்திட வேண்டுமென்றால், ஒரு மாதத்திற்கு 20 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் அல்லது நாளொன்றுக்கு 67 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும்.  

இதுதான் ஒட்டுமொத்தத்தில் தேவைப்படும் தோராயமான குறியீடாகும்.

தடுப்பூசி உற்பத்தி

தற்போது இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் (SII-Serum Institute of India), கோவிஷீல்ட் தடுப்பூசியை மாதத்திற்கு 6 – 7 கோடி  (60-70 மில்லியன்) உற்பத்தி செய்திடும் திறனைப் பெற்றிருக்கிறது. இதனை 2021 மே மாதத்திற்குள் 10 கோடி அளவிற்கு உயர்த்திடும் எனக் கூறப்படுகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தற்போது மாதத்திற்கு 60 லட்சம் என்கிற விதத்தில் உற்பத்தி செய்கிறது. இதனை 2021 மே மாத அளவில் மாதத்திற்கு 1 கோடியே 50 லட்சம் (15 மில்லியன்) அளவுக்கும், 2021 இறுதிக்குள் மாதத்திற்கு 5 கோடியே 80 லட்சம் (58 மில்லியன்) அளவிற்கும் உயர்த்திட இருக்கிறது.  

இவ்வாறு, 2021 ஏப்ரலில் நம் கொள்திறன் குறித்து அனைத்து மதிப்பீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டோமானால், இந்தியா, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளையும் சேர்த்தே,  மாதத்திற்கு 7 கோடியே 60 லட்சம் (76 மில்லியன்) தடுப்பூசிகளே (அல்லது நாளொன்றுக்கு 25 லட்சம் தடுப்பூசிகளே) உற்பத்தி செய்திட முடியும்.   

நாம் 2021 மே மாதத்தில் மதிப்பிட்டிருக்கக்கூடிய உயர்ந்தபட்ச குறியீட்டை எடுத்துக்கொண்டாலும்கூட, (மாதத்திற்கு 100 மில்லியன் கோவிஷீல்டு + 15 மில்லியன் கோவாக்சின்) மொத்தம் மாதத்திற்கு 115 மில்லியன் அல்லது நாளொன்றுக்கு 3.8 மில்லியன் அளவிற்கே உற்பத்தி செய்யப்படும்.

 இந்த எண்ணிக்கையில், இந்நிறுவனங்கள் ஏற்றுமதி தொடர்பாக அளித்துள்ள உறுதிமொழிகளையும் நிறைவேற்றியாக வேண்டும். ஏற்றுமதிக்கென்று சராசரியாக 15 சதவீதத்தைக் கழித்தோம் என்றால், இந்தியாவின் பயன்பாட்டிற்கு என்பது மாதத்திற்கு 98 மில்லியன் அல்லது நாளொன்றுக்கு 3.3 மில்லியன் என்றே வரும். இதில் நாட்டில் உள்ள பொது சுகாதார உள்கட்டமைப்பின்படி சுமார 5 முதல் 10 சதவீதம் வீணாகக் கூடியவற்றையும் (wastage) கணக்கில் எடுத்துக்கொண்டோமானால், நாளொன்றுக்கு 3.1 மில்லியன் தடுப்பூசிகள்தான் பயன்பாட்டிற்கு வரும்.

இவ்வாறு நாட்டிலுள்ள நம் உற்பத்தியின் திறனை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொண்டாமானாலும்கூட, இந்தியாவின் உற்பத்தித் திறன் மிகவும் குறைவாகும். இது 2021 ஜனவரியிலேயே மத்திய அரசுக்கு நிச்சயமாக நன்கு தெரியும். இந்தியாவிற்கு மாதத்திற்கு 1 கோடி தடுப்பூசிகளிலிருந்து 4 கோடி தடுப்பூசிகள் வரை பற்றாக்குறை ஏற்படும்.   

இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கை

தடுப்பூசிப் பற்றாக்குறையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்தியா தடுப்பூசிகளை அதிகமான அளவில் உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டிருக்க வேண்டும்., இதுதொடர்பாக அதிக தடுப்பூசிகள் உற்பத்தி செய்வதற்கு, பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் கட்டளை பிறப்பித்திருக்க வேண்டும். ஆயினும் இந்தியா, 2021 ஏப்ரல் வரையிலும், கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் தவிர வேறெந்த தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளித்திடவில்லை.  இவ்வாறு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த இரு தடுப்பூசிகளும் இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, இவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் போதும் என்று அரசு கருதியதாகத்தான் தெரிகிறது.

உதாரணமாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசிக்கும், ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் கொடுத்திருக்க வேண்டும். 2021 பிப்ரவரியில் இந்தியா ஸ்புட்னிக் 5-தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தது. அதற்கான காரணமாக அது நோய் எதிர்ப்புத்திறன் குறித்து தரவுகளை அளித்திட வில்லை எனக் கூறப்பட்டது. அதேபோன்று, ஃபைசர் நிறுவனமும் தான் அளித்திட்ட விண்ணப்பத்தைத் திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டது. கோவிஷீல்டு தொடர்பாக அதன் நோய் எதிர்ப்புத்திறன் குறித்த தரவு இதுவரை அளிக்கப்படவில்லை. எனினும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக கிரேட் பிரிட்டனிலும், பிரேசிலிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டதே போதும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதேபோன்றே, கோவாக்சின் தொடர்பாகவும் அதன் செயல்திறன் குறித்த தரவு இன்னமும் அளிக்கப்படவில்லை. எனினும் அதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இவ்விரு தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளநிலையில் இதே போன்று ஏன் ஸ்புட்னிக் 5 மற்றும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கக்கூடாது? இது குழப்பமாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், தடுப்பூசிகள் பெரிய அளவில் பற்றாக்குறையுடன் இருப்பதைக் கடைசியில் மத்திய அரசு உணர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.  இதன்காரணமாகவே அது 2021 ஏப்ரல் 13 அன்று வெளிநாடுகளில் உபயோகப்படுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசிகள் சிலவற்றிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஸ்புட்னிக் 5 போன்ற சில தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தாமதம் செய்ததன் காரணமாக, அவை இந்தியாவில் சப்ளை செய்யப்படுவதற்கு மேலும் சில வாரங்களாகக் கூடும். ‘ரஷ்யா டைரக்ட் முதலீட்டு நிதியம்’ (RDIF-Russia Direct Investment Fund), இந்தியாவில் உள்ள ஆறு நிறுவனங்களுடன் 650 மில்லியன் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. இது இந்தியாவின் தேவையைக் கணிசமான அளவிற்குப் பூர்த்தி செய்ய உதவிடும். ஆனாலும், இதற்கு ஒப்புதல் அளித்திடத் தாமதமானதன் காரணமாக, இதன் வருகை இந்தியாவில் 2021 ஜூன் மாதத்தில்தான் இருந்திடும்.

வெளிச்சந்தையில் தடுப்பூசிகள்

2021 ஏப்ரல் 20 அன்று மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவினை எடுத்தது. அதன்படி, 2021 மே 1 இலிருந்து 18 வயதுக்கு மேல் உள்ள ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதாகும். எனினும், தடுப்பூசி விற்பனையும் அவற்றின் விலைகளும் கட்டுப்படுத்தப்படாது, வெளிச்சந்தைக்கு விடப்பட்டுவிட்டன.

இதுநாள்வரையிலும், மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு இலவசமாகவே தடுப்பூசிகளை அளித்து வந்தது. அதன்படி கோவிஷீல்டும், கோவாக்சின்னும் மத்திய அரசாங்கத்திற்கு விற்கப்பட்டு வந்தது. வரிகள் இன்றி, கோவிஷீல்டு ஒரு தடுப்பூசி 150 ரூபாய்க்கும், கோவாக்சின் ஒரு தடுப்பூசி 206 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வந்தது. எனினும் இவ்விரு கம்பெனிகளுமே மகிழ்ச்சியின்றிதான் இருந்து வந்தன. தங்களுக்கு இவற்றை விற்பதற்கு இருந்துவரும் விலைக் கட்டுப்பாட்டை நீக்கிவிட வேண்டும் என்றும், வெளிச்சந்தையில் விற்பதற்கு அனுமதித்திட வேண்டும் என்றும் கோரி வந்தன.

இவ்வாறு இவ்விரு நிறுவனங்களும் மான்ய விலையில் அரசுக்கு விற்று வந்தபோதிலும், அவற்றுக்கு இயல்பான லாபத்துடன் (normal profit)தான் அவற்றை அவை விற்று வந்தன.  என்டிடிவி-க்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த அடர் பூனாவாலா இதனை ஒப்புக்கொண்டிருக்கிறார். எனினும் சிறிது காலத்திற்குத்தான் எங்களுக்கு சாதாரணமான லாபம் தேவை. பின்னர் எங்களுக்கு சூப்பர் லாபம் தேவை என்று அவர் அந்த நேர்காணலில் வலியுறுத்தினார்.

இப்போது மத்திய அரசின் புதிய முடிவின்படி, 2021 ஏப்ரல் 19இலிருந்து மத்திய அரசு வடுப்படத்தக்கநிலையில் உள்ள 30 கோடி பேர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகளை இலவசமாக அளித்திடும். அதன்பின்னர், தடுப்பூசிகள் இப்போதிருப்பதைப்போல மான்ய விலையில் கிடைக்காது. தடுப்பூசி உற்பத்தி செய்பவர்களிடமிருந்து 50 சதவீத அளவிற்கு மட்டுமே மத்திய அரசு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளும். மாநில அரசாங்கங்கள் அந்நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மீதம் உள்ள 50 சதவீதத்திலிருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு அந்நிறுவனங்கள் நிர்ணயம் செய்திடும் விலையை மாநில அரசுகள் அளித்திட வேண்டும்.

தடுப்பூசியின் விலைகள் உயரும்

இதன்மூலம் இரு பிரச்சனைகள் உடனடியாக எழுந்துள்ளன. ஒன்று, இவை நிர்ணயம் செய்திடும் தடுப்பூசிகளின் விலையில் ஏதேனும் உச்ச வரம்பு இருக்குமா? இருக்காது என்றே தோன்றுகிறது. பூனாவாலாவின் எதிர்பார்ப்பின்படி, கோவிஷீல்டு விலை 150 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்கும் செல்லக்கூடும். மாநில அரசாங்கங்கள் இவ்வாறு அதிக விலை கொடுத்துத்தான் தடுப்பூசிகளை வாங்க வேண்டியிருக்கும். இரண்டாவது, மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் தங்கள் 50 சதவீத கோட்டாவிலிருந்து கொஞ்சம் தடுப்பூசிகளை வழங்கிடும். இது இலவசமாக இருக்குமா என்று தெரியவில்லை.   

எப்படிப்பார்த்தாலும், மாநில அரசாங்கங்கள் தடுப்பூசிக்கு மான்யம் கொடுக்கவில்லை என்றால், தடுப்பூசி விலைகள் கூர்மையாக உயரும். மிகவும் குறைவான நிதிநிலையுடன் இருக்கின்ற மாநில அரசாங்கங்களால் இவற்றை ஏற்க முடியாத நிலை ஏற்படலாம். ஒரு தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாய் என வைத்துக்கொண்டால், ஒருவருக்கு இரு தடுப்பூசிகள் தேவை என்கிறபோது, 100 கோடி பேர்களுக்கு தடுப்பூசி போட, மாநில அரசாங்கங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படும். இதனால் மக்களில் பெரும்பான்மையினர் தடுப்பூசி போடப்படாத சூழ்நிலையே ஏற்படும்.

மத்திய அரசு ஏன் இப்படிச் செய்தது?

மத்திய அரசு தன் தடுப்பூசிக் கொள்கையை மாற்றியதற்கான காரணம் என்ன? 2021 மே மாதத்திற்குள் அனைத்துக் குடிமக்களுக்கும் தடுப்பூசிகள் போட முடியாது என்பதையும் அதற்குள் தடுப்பூசிகள் போதுமான அளவிற்கு உற்பத்தி செய்ய முடியாது என்பதையும் மத்திய அரசு உணர்ந்துகொண்டது. அதன்பின்னர் மாநில அரசாங்கங்களும் மக்களும் தன்னைக் கேலியான முறையில் பார்க்கக்கூடும் என்று கருதியது. இத்தகைய தர்மசங்கடமான நிலையைத் தவிர்க்க அது விரும்பியது. இதன் காரணமாகத்தான் மாநில அரசாங்கங்களே நேரடியாக தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளட்டும் என்று முடிவெடுத்துள்ளது.

மேலும் மத்திய அரசு தடுப்பூசி விலை குறித்து இருந்த கட்டுப்பாட்டை நீக்கியிருப்பது, தனியார் நிறுவனங்களுக்கு தாராளமான  கொடையாகும். இந்தியாவில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட்டிற்கு மூவாயிரம் கோடி ரூபாயும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு 1,500 கோடி ரூபாயும் மத்திய அரசு அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக அளிக்க இருப்பதுடன், இந்தக் கொடையும் சேர்ந்துகொண்டிருக்கிறது. மேலும் இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட்டும், பாரத் பயோடெக் நிறுவனமும் மத்தியி அரசின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மான்யத்தொகை (R&D Grants) 900 கோடி ரூபாயையும், அநேகமாக பெறக்கூடும். இவ்வாறு மத்திய அரசு தாராளமாக நடந்து கொண்டுள்ளபோதிலும், இவ்விரு தனியார் நிறுவனங்களும் இத்தடுப்பூசிகள் மூலம் சூப்பர் லாபம் ஈட்டுவதற்குத் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரியதால், மத்திய அரசு அவர்களின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்திருக்கிறது.

(நன்றி:People’s Democracy,25.04.2021)

(தமிழில்: ச.வீரமணி

;