india

img

புதிய கல்விக்கொள்கையை அமலாக்குமாறு நிர்ப்பந்தம் செய்யாதீர்!

புதுதில்லி, ஆக.2- கல்வித்துறையில் மாநில அரசுகளை அதிகாரம் செய்யும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது என கல்வி மானியக் கோரிக்கையின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மக்களவை உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம் மக்களவையில் விமர்சித்தார்.

இது, சச்சிதானந்தம் எம்.பி.யின் முதல் பேச்சு ஆகும்.

என்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்த திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கும் எனது வெற்றிக்காக உழைத்த திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்விக்கான நிதியை ஒதுக்கீட்டை கூட்டுக!

கல்வி மானியக் கோரிக்கை மீதான எனது முதல் நாடாளுமன்ற உரையைப் பதிவு செய்கிறேன். மனித வள மேம்பாட்டுத்துறை என்று இருந்த இந்த துறை  கல்வித்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டி ருப்பதைத் தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எழுத்தறிவு மற்றும் பள்ளிக்கல்விக்குத் தனியாகவும், உயர்கல்விக்குத் தனியாகவும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எதிர்கால இந்தியாவிற்கான தேவையை உணர்ந்து கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டுகிறோம்.

சமக்கிர சிக்சா நிதியை அதிகப்படுத்துக!

 நாடு முழுவதும் பொதுப்பள்ளிகள் முழுவதையும் மாநில அரசுகளே நடத்துகின்றன. கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் போன்ற சிறப்புப் பள்ளிகளை ஒன்றிய அரசு நடத்துகிறது.  இந்த பொதுப்பள்ளிகளில் நிலையான வளர்ச்சிக்கான திட்டமாக இருக்கிற சமக்கிர சிக்சா நிதியை அதிகப் படுத்தி எவ்வித நிபந்தனையுமின்றி மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். 

பி.எம்.ஸ்ரீ என்பது நாடு முழுவதும் மாதிரிப்பள்ளிகளை உருவாக்கி செயல்படுத்துவதற்கான திட்டம். இந்த  இரண்டு திட்டங்களுமே வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டது. இரண்டுகளுக்குமே தனித் தனி தலைப்பு களில் நிதி ஒப்புதலை இந்த மக்களவை தந்துள்ளது. ஆனால் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமலாக்கினால் தான் சமக்கிர சிக்சா நிதியைக் கொடுப்பேன் என ஒன்றிய அரசு  கூறுவது தவறானது. உடனடியாக இந்த நிதியை தமிழக  அரசிற்கு வழங்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். 

அதிகாரம் செய்யும் ஒன்றிய அரசு 

நமது நாட்டில் 1968, 1986, 1991 ஆகிய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் கல்விக்கொள்கைகள் உருவாக்கப் பட்டன. இதன் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், மாநி லங்கள் மீது அவற்றை திணிக்கவில்லை. ஆனால் தற்போதைய ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கை 2020ஐ மாநிலங்கள் கட்டாய மாக அமலாக்க வேண்டும் என நிர்பந்தம் செய்யப்படு கிறது. பொதுப்பள்ளிகளையும், கல்லூரி மற்றும் பல் கலைக்கழகங்களையும் நடத்தும் மாநில அரசுகளை அதி காரம் செய்யும் அரசாகவே ஒன்றிய அரசு இருக்கிறது.

நுழைவுத்தேர்வுகளே தகுதியானவையா? 

மருத்துவக்கல்விக்கு நீட், பொறியியற் கல்விக்கு ஜெ.இ.இ., கலை அறிவியல் கல்விக்கு கியூட் என மேல்நிலைக் கல்வியில் உயர்ந்த மதிப்பெண் பெற்று  தேர்வு பெற்றாலும் நுழைவுத் தேர்வுகளை தகுதியாக தீர்மானிக்கும் நடைமுறை தவறானதாகும். இளநிலை நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிவு, போனஸ் மதிப்பெண்கள் போன்ற முறைகேடுகள் நடந்துள்ளன.  பி.ஜி. நீட் தேர்வு முதலில் 2024ம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அட்டவணையிடப்பட்டது. பின்பு ஜுன் 7க்கும், அதன் பிறகு ஜுன்  23க்கும் மாற்றப்பட்டது. ஜுன் 22ம் தேதி இரவு 10.30 மணிக்குத் தான் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது என்ற அறிவிப்பு தேர்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 11 என்று மறு தேதியிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை தேர்வு செய்வதிலும் குழப்பம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ- மாணவியர்க்கு ஒடிசாவிலே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த குளறுபடிகளை முறைப்படுத்த வேண்டும்.

தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக!

நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மாநில அரசு களுக்கு வழங்கியிருக்கிற உரிமைகள் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியுள்ள, ‘தமிழ்நாடு லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி பில் 43ஐ’ தமிழ்நாடு ஆளு நர் கையெழுத்திட்டு அனுப்பாமல் திருப்பி அனுப்பு கிறார்; மீண்டும் சட்டமன்றத்தால் விவாதிக்கப்பட்டு அனுப்பிய மசோதாவும் கடந்த 3 ஆண்டுகளாக உள்துறை அமைச்சகத்தில் கிடப்பில் போடப்பட்டுள் ளது. இம்மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தர வேண்டும். மாநில அரசோடு ஒத்துழைக்காத தமிழ்நாடு ஆளுநரை கால நீட்டிப்பு செய்யாமல் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

உண்மையான வரலாறுகள் நீக்கம் 

என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் திருத்தம் என்ற பெயரில் 11,12 வகுப்பு பாடங்களுக்கு திருத்தம் செய்துள்ளதோடு, 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களிலும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப் படாத கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. அசோகர் காலம் முதல், அம்பேத்கர் காலம் வரையிலான உண்மை யான வரலாறுகள் மாணவ, மாணவியர்க்கு தெரியக் கூடாது என்பதற்காக அவை திட்டமிட்டு நீக்கப்படுகின்றன. 

பழனியில் ஆயுஷ் பல்கலைக்கழகம் அமைத்திடுக!

திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழ கம் கிராமப்புற மாணவ, மாணவியர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மாகும். இங்கு கியூட் தேர்வு மூலம் மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இங்கு ஆராய்ச்சி கல்வி உள்ளிட்ட பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். திருவாரூர் மத்தியப் பல் கலைக்கழகம், கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழ கம் போன்ற மத்தியப் பல்கலைக்கழகங்கள் விரிவு படுத்தப்பட வேண்டும். விழுப்புரம், இராமநாதபுரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் புதிய மத்தியப் பல்கலைக்கழகங்கள் துவக்கப்பட வேண்டும். பழனியில் ஆயுஷ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒட்டன்சத்திரத்தில் தோட்டக்கலை மத்திய பல்கலைக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். கொடைக்கானலில் மத்திய அரசின் வேளாண்மைத்துறையுடன் செயல்படு கிற ஆடு மற்றும் ரோமம் ஆராய்ச்சி மையத்தை மாணவ, மாணவியர் பயன்படுத்தக்கூடிய வகையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

காலை உணவுத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துக!

தமிழ்நாடு அரசு துவங்கியிருக்கிற காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிற்கே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, பி.எம்.போஷன் திட்டத்தை நாடு  முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்; பி.எம்.போஷன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை கல்வித்துறை மூலமாக செய்ய வேண்டும்; பிராந்திய மொழிகள் அனைத்தி லும் போட்டித்தேர்வுகள் நடத்திட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

விஞ்ஞானிகளை உருவாக்கும் கல்விக்கொள்கை தேவை 

ஒன்றிய அரசின் இந்த கல்விக்கொள்கை ‘ரிஷிகளை’ உருவாக்கக்கூடிய கல்விக்கொள்கை என்று சொன்னார்கள். இங்கே ரிஷிகளை உருவாக்கும் கல்விக்கொள்கை தேவையில்லை. விஞ்ஞானிகளை உருவாக்கும் கல்விக்கொள்கை தான் இந்தியாவிற்கு தேவை என்று நான் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ஆர்.சச்சிதானந்தம் பேசினார்.