india

img

கொரானா வைரஸ் தொற்று குறித்து நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம்

கொரானா வைரஸ் தொற்று குறித்து உரியநடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், சீத்தாராம் யெச்சூரி, குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் குடியரசுத் தலைவருக்கு திங்கள் அன்று, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையிலும், உங்களுடைய அனுமதி மற்றும் அதிகாரத்தின் கீழ்தான் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது என்பதாலும் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதி இருக்கிறேன்.

நாடும், நாட்டு மக்களும் இதுவரையில்வ இரு அடையாளபூர்வமான நிகழ்வுகளின் ஊடே சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக, நாடு, குரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், நேற்றைய தினம் (5ஆம் தேதி) இரவு அடையாளபூர்வமாக நடைபெற்ற நிகழ்வு, பலரால் பட்டாசு கொளுத்தி, கொண்டாடப்பட்டிருப்பதை சங்கடத்தை அளித்திருக்கிறது. உண்மையில் அரசாங்கமானது துல்லியமானமுறையில் அவசரகதியில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதன் அவசியத்திற்கு, இத்தகைய அடையாளபூர்வ நிகழ்வுகள் மாற்றாக இருக்காது என்று  நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இதற்கு முன் நான் பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் அனுப்பிய கடிதங்களுக்கு அவர்கள் பதில் அளிக்காததால், இது தொடர்பாக உங்கள் தலையீட்டைக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன். இது ‘உங்கள் அரசாங்கமாக’ இருப்பதால், நான், மக்களின் சார்பாக, கீழ்க்கண்ட பிரச்சனைகள் மீது நீங்கள் பரிசீலனை மேற்கொண்டு, கோவிட்-19 கொரானா வைரஸ் தொற்றுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் அதனை முறியடித்திடும் விதத்தில் அரசாங்கத்திற்குக் கட்டளையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பிரதமர், வெறும் நான்கு மணி நேர அறிவிப்பினைக் கொடுத்து, 21 நாட்களுக்கான நாடு தழுவிய சமூக முடக்கத்தை அறிவித்தார். எனினும், மார்ச் 22 அன்று நடைபெற்ற ஒரு நாள் “மக்கள் ஊரடங்”கிற்கு அவர் இரண்டு நாட்களுக்கு முன் அறிவிப்பு கொடுத்ததால்,  மக்கள் அதற்குத் தயாராக இருக்க முடிந்தது.

அரசாங்கத்தாலோ அல்லது மக்களாலோ, எவ்விதமான முன்தயாரிப்புகளும் இல்லாமல், சமூக முடக்கம் மக்கள் மீது திணிக்கப்பட்டது. விளைவு,  நாடு முழுதும் குழப்பம் மற்றும் அராஜகம் தலைவிரித்தாடியது. கொரானா வைரஸ்தொற்று பரவாது தடுக்க வேண்டும் என்கிற அடிப்படைக் குறிக்கோளையே இது முறியடித்திருக்கிறது.

எனவே, கீழ்க்கண்ட பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதற்கு, இந்த அரசாங்கத்திற்குத் தாங்கள் கட்டளையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

1.   புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள்

சமூக முடக்கத்தின் காரணமாக, பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள், தங்கள் வாழ்வாதாரங்களையும், தினசரி வருமானங்களையும் இழந்து, நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.   மேலும், இது அறுவடைக் காலம். இந்தக் காலத்தில் அவர்களில் பலர் தங்கள் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக திரும்ப வேண்டிய நிலையில் இருந்தார்கள்.

இந்த அரசாங்கம், வெளிநாடுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியர்களை தனி விமானங்கள் மூலம் இந்தியா கொண்டுவந்திருக்கிறது. அதேபோன்று, நம் நாட்டிலேயே உழைத்துக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர் சகோதரர்களுக்கு, விமானங்கள் இல்லாவிட்டாலும், ரயில்களிலோ அல்லது பேருந்துகளிலோ அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். அவ்வாறு செய்யவில்லை என்றால், குறைந்தபட்சம் சமூக முடக்கக் காலத்தில் தங்கிக் கொள்வதற்கு தங்குமிடங்களும், உணவு உட்கொள்வதற்கு ரேஷன் பொருட்களும் அளித்திருக்க வேண்டும்.

2.   மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்கவில்லை

இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சம் கூட்டாட்சித் தத்துவமாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 1ஆவது பிரிவு, மிகவும் தெளிவாக, “இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியம் ஆகும்,” என்று தெளிவாக வரையறுத்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, பிரதமர் நாடு தழுவிய அளவில் சமூக முடக்கத்தை அறிவிப்பதற்குமுன், மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்கவில்லை. அதன் விளைவாக இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு பல மாநிலங்கள் முழுமையாகத் தயாரில்லாத நிலையில் இருக்கின்றன.  

இப்போது புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்று கூறுவது மிகவும் நேர்மையற்ற செயலாகும். மத்திய அரசாங்கம், இவர்கள் தொடர்பாக மாநிலங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, தாராளமாக நிதி உதவியினை அளித்திட வேண்டும். சமீபத்தில் இதுதொடர்பாக வந்துள்ள அறிவிப்புகள், அதாவது பணத்தை மாநில பேரிடர் இடர் மேலாண்மை நிதியத்திலிருந்து மாற்றிக்கொள்ளலாம் என்று வந்திருக்கும் அறிவிப்புகள், மிகவும் அற்பமானதும், போதுமானதற்றதுமாகும்.

3.   பாதகமான பொருளாதார விளைவுகளைத் தணித்திட வேண்டும்

அ) கோடானு கோடி மக்கள் தாங்கள் பொருளீட்டும் வாய்ப்பினை இழந்திருக்கிறார்கள். இதன் விளைவாக, நாட்டில் மாபெரும் பஞ்சம்-பசி-பட்டினி ஏற்படவும், உணவுப் பற்றாக்குறை ஏற்படவும் அனுமதித்திட முடியாது. இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன். எனவே இதனை எப்பாடுபட்டாகிலும் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.  

நாட்டிலுள்ள இந்திய உணவு கழகத்தின் கிடங்குகளில் சுமார் 7.5 கோடி டன்கள் உணவு தான்யங்கள் இருப்பில் இருக்கின்றன. இவை இப்போத வீணாகிக் கொண்டிருக்கின்றன மற்றும் அவற்றை எலிகள் தின்றுகொண்டிருக்கின்றன. அவற்றை, தங்கள் பொருளீட்டும் வாய்ப்பினை இழந்தஏழை மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக மாநிலங்களுக்கு உடனடியாக அனுப்பி வைத்திட வேண்டும்.

ஆ) சமூக முடக்கத்தின் விளைவாக பொருளாதார விளைவுகள் மேலும் மோசமாகும். ஏற்கனவே பொருளாதார மந்தத்துடன் நாடு இருக்கக்கூடிய சூழ்நிலையில், இப்போது அது மேலும் அதிகமாகும். பல தொழிற்சாலைகள் பணியிடைநிறுத்தம் (lay off) அறிவித்திருக்கின்றன. பல மாநிலங்களில் கணிசமான அளவிற்கு ஊதிய வெட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஊழியர்களின் சம்பளத்தை வெட்டக்கூடாது என்று அரசாங்கம் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. வேலையளிப்பவர்கள், தங்கள் வர்த்தகம் ஸ்தம்பித்திருப்பதால் தங்களால் ஊதியங்கள் வழங்க முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

பல நாடுகளில் உள்ள அரசாங்கங்கள், தங்கள் நாடுகளில் உள்ள வேலையளிப்பவர்களுக்கு அவர்களின் ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பதற்காக 80 சதவீதத் தொகை இழப்பீடாக வழங்கியிருக்கிறது. இதேபோன்ற நடவடிக்கையை “உங்கள் அரசாங்கமும்” செய்திட வேண்டும்.

இ) கோடானு கோடி மத்தியதர ஊழியர்கள் வங்கிகளில் கடன்கள் பெற்று தவணை முறையில் திருப்பிச் செலுத்திக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய தவணைமுறையில் திருப்பிச் செலுத்துவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு கால நீட்டிப்பு அளித்திட வேணடும். இதேபோன்று சமப்படுத்தப்பட்ட மாதாந்திர தவணை முறைக்கும் (EMI) கால நீட்டிப்பு அளித்திட வேண்டும்.   இவ்வாறு ஒத்தி வைப்பு செய்வதற்கு வட்டி வசூலித்திடக் கூடாது.

ஈ) வேளாண் நெருக்கடி மேலும் தீவிரமாகும். இத்தகைய சூழ்நிலையில் “உங்கள் அரசாங்கம்” அனைத்து விவசாயிகளுக்கும் ஒரு தடவை அனைத்துக் கடன்களையும் ரத்து செய்திட அறிவிப்பினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  பெரும் பணம் படைத்த கார்ப்பரேட்டுகளுக்கு சுமார் 7.78 லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்துள்ள இந்த அரசாங்கத்தால், இதனையும் செய்வது சாத்தியமே. நிச்சயமாக, கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட பச்சாத்தாபத்தை, நமக்கு உணவு அளித்துவரும் “அன்னமிடும் தாதாக்களுக்கும்“ விரிவாக்கிட முடியும்.

4. மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை

மிகவும் அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்கள் கடும் பற்றாக்குறை இருப்பதாக எண்ணற்ற செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மிகவும் ஆபத்தான சூழ்நிலையிலும், நம் சுகாதார ஊழியர்கள், நோய்த்தடுப்பு உபகரணங்கள் எதுவுமின்றி, துணிச்சலுடன் பணி செய்து வருகிறார்கள். இவ்வாறு இவர்கள் பணிசெய்வதன் காரணமாக இவர்களில் பலருக்கு இந்தத் தொத்துநோய் தொற்றி இருப்பதாகப் பரவலாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வென்டிலேடர்களும் போதிய அளவுக்கு இல்லை. எனவே இவற்றைக் களைந்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதேபோன்று போதுமான அளவிற்கு தனிமை வார்டுகள் (isolation wards) ஏற்படுத்தவும் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

கொரானா வைரஸ் தொற்று குறித்து சோதனை செய்வது என்பது இந்தியாவில் குறைந்த விகிதத்தில் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அனைவரால் கூறப்பட்டு வருகிறது. தென் கொரியாவில் பத்து லட்சம் பேர்களில் 7,569 பேருக்கு சோதனைசெய்திருக்கும் நிலையில், இந்தியாவில் இது வெறும் 32 பேர்களேயாகும்.   இது மிகவும் படுபாதாளமான நிலையாகும். சோதனைகள் மிகவும் விரிவான அளவில் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு செய்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப்படுத்திட வேண்டும். அந்த இடங்களுக்கு சமூக முடக்கத்தை வலியுறுத்த வேண்டும். நாடு முழுவதற்கும் தேவையில்லை.

இந்நடவடிக்கைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீங்கள் “உங்கள் அரசாங்கத்திற்கு” உத்தரவிட வேண்டும்.

4.   கோவித்-19 நிதியம்

மிகவும் விசித்திரமான விதத்தில் “உங்கள் அரசாங்கம்” இந்தத் தொற்றை முறியடிப்பதற்காக புதிய நிதியம் ஒன்றை “பிஎம் கேர்ஸ்” (“PM cares”) என்ற பெயரில் நிறுவியிருக்கிறது. இத்தகைய பாதிப்புகளுக்காகவே, நமது நாட்டில் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, பிரதமர் தேசிய நிவாரண நிதியம் (Prime Minister’s National Relief Fund) என்று சட்டபூர்வமாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியம் வெளிப்படைத்தன்மையுடனானது. இதன் கணக்கு வழக்குகள் மத்திய தணிக்கைத்துறை தலைவரால் (சிஏஜி-யால்) தணிக்கை செய்யப்படுவதாகும். ஆனால், “பிஎம் கேர்ஸ்” நிதியம், நான்கே நான்கு நபர்களால் மட்டம் – பிரதமர், உள்துறை அமைச்சர், ராணுவ அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் மட்டும் – உள்ள அறக்கட்டளை நிர்வகிக்குமாம். இதற்கான நிதி எவ்வாறு வசூலிக்கப்படுகிறது, பிரித்துக் கொடுக்கப்படுகிறது, இதன் கணக்கு என்ன என்கிற அனைத்தும் எவருக்கும் தெரியாது. இதற்காக கட்டாய வசூலி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மருத்துவ ஊழியர்கள் உட்பட அரசு ஊழியர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் ஒரு நாள் ஊதியம் அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே வசூலிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கார்ப்பரேட்டுகள், கலையுலகப் பிரபலங்கள், பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருக்கின்ற்ன.

நாட்டில் இதேபோன்று இதற்கு முன்பும் ஒருமுறை “பாரத் கே வீர்” (“Bharat Ke Veer) என்ற பெயரில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் ஒரு நிதியம் நிறுவப்பட்ட அனுபவம் உண்டு. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்காக என்று இது நிறுவப்பட்டது. ஆனால் இதுநாள்வரையிலும், அதன் விவரங்கள் எதுவும் பொது வெளியில் வெளியிடப்படவில்லை. இதுபோன்று வசூலிக்கப்படும் நிதி, வெளிப்படைத்தன்மை யின்றியோ அல்லது கணக்கு அளிக்காத நிலையில் இருப்பதையோ நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன். “உங்கள் அரசாங்கம்” இவ்வாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள நீங்கள் எப்படி அனுமதிக்க முடியும்?

உண்மையில் இதன் பெயர் இந்தியா கேர்ஸ் என்றிருக்க வேண்டும். அதுதான் பொருத்தம். இவ்வாறு இந்த நிதியத்தின் கீழ் வசூலிக்கப்படும் தொகையை பிரதமர் தேசிய நிவாரண நிதியத்துடன் இணைத்திட உங்கள் தலையீடு வேண்டும்.

மேலும், சுகாதாரம் குறித்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அடிப்படையில் மாநில அரசுகளின் பொறுப்பு. எனவே இதனைச் செய்வதற்காக மாநில அரசுகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

5.   மதவெறி

இறுதியாக, இது மிகவும் ஆழமான பிரச்சனை என்பதை நீங்கள் அறிவீர்கள். எனினும் இதற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் பொறுப்பு என்பது போல், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தப்லிகி சம்பவத்தினை நடத்தியவர்கள் பொறுப்பற்று இருந்திருக்கிறார்கள். எனினும் இதற்கு ஒட்டுமொத்தமாக முஸ்லீம் சமூகத்தினரைக் குறிவைத்துத் தாக்குவது சரியல்ல. இத்தகைய இழிமுயற்சிகளைத் தடுக்காவிட்டால், இந்நோய்க்கு எதிரான மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் சீர்குலையும்.

அரசாங்கத்தால் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னரும் நாட்டின் பல இடங்களில் மத ரீதியாகவும் மற்றும் பல விதங்களிலும் கூடியிருக்கின்றனர். நாடாளுமன்றம்கூட சமூக முடக்கம் அறிவிக்கப்படும் நாளைக்கு முன்தினம் வரை நடந்துள்ளது. இதன்பின்னர் மத்தியப் பிரதேச சட்டமன்றம் கூட்டப்பட்டு, கட்சித்தாவல்கள் ஊக்கப்படுத்தப்பட்டு, புதிய அரசாங்கம் பதவி யேற்றிருக்கிறது. இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனைவரும் உடனடியாக சோதித்துப் பார்க்கப்பட வேண்டும், அவர்கள் தனி வார்டுகளின் அடைக்கப்பட வேண்டும். இத்தொத்து மேலும் பரவாமல் பாரத்துக்கொள்ளப்பட வேண்டும்.  

அரசமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர் என்ற முறையில் நாட்டில் மதவெறித் தீயை விசிறி விட நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். இந்த நோய்க்கு எதிராக, இந்த சமயத்தில் நாட்டிற்குத் தேவை அனைத்து மக்களின் ஒன்றுபட்ட போராட்டம். இந்த நோயானது யாரையும் மதத்தின் பேரால், சாதியின் பேரால், வர்க்கத்தின் பேரால் பாகுபடுத்திப் பார்க்காது. இத்தருணத்தில் மனிதகுலத்தின் மீது பச்சாத்தாபம்தான் ஏற்பட வேண்டுமேயொழிய, கிரிமினல்தனமான நடவடிக்கை கூடாது என்று “உங்கள் அரசாங்கத்தை” நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.

நான் மேலே கூறியுள்ள அனைத்துப் பிரச்சனைகள் மீதும் அவற்றின்அவசரத்தன்மையைக் கருத்தில் கொண்டு  ஆழமான முறையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து “உங்கள் அரசாங்கத்தை” இப்பிரச்சனைகள் மீது உடனடியாகச் செயல்படுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். மீண்டும் கூறுகிறேன், ‘போர்க்கால அடிப்படையில்.”

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

(தமிழில்: ச. வீரமணி)  

;