india

img

நிபந்தனை விதித்த அமித்ஷா.... விவசாயிகள் பதிலடி...

புதுதில்லி:
தில்லியில் போராடும் விவசாயிகள்,  புராரி என்னுமிடத்தில் உள்ள நிரக்காரி மைதானத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், அந்த இடத்திற்கு விவசாயிகள் அனைவரும் சென்றபின் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் பேசத் தயார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விதித்த நிபந்தனையை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் நிராகரித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் நிகழ்ச்சியில், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் புதிய வாய்ப்புகளையும், புதிய உரிமைகளையும் அளித்திருப்பதாகக் கூறிய அடுத்த சில நிமிடங்களில்  விவசாயிகள் இவ்வாறு தீர்மானித்தனர்.
தில்லியை நோக்கி வந்துள்ள விவசாயிகள் தில்லியின் பல பகுதிகளில் முகாமிட்டு தங்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டதைப்போல் புராரி மைதானத்திற்குச் செல்வதற்கு விவசாயிகள் தயாராக இல்லை. தில்லியின் எல்லைப்பகுதிகளிலேயே தங்கியிருக்கின்றனர்.  நான்காவது நாளாக ஞாயிறன்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

“நாங்கள் தில்லியின் எல்லைகளிலேயே தங்கி இருக்க தீர்மானித்திருக்கிறோம். நாங்கள் புராரிக்குச் செல்ல மாட்டோம்,” என்று பாரதிய கிசான் சங்கம் தலைவர் பூட்டா சிங் பர்கில்  தெரிவித்தார்.பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஹர்மீத் சிங் கூறுகையில், வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாயிகள் திரும்ப மாட்டார்கள் என்று தெரிவித்தார்.  “விவசாயிகள் கிளர்ச்சி செய்திடும் இடங்களிலிருந்து நகரமாட்டார்கள். அரசாங்கம் எப்போது கூப்பிடுகிறதோ அப்போது பேச்சு வார்த்தை நடத்தத் தயார். ஒவ்வொரு நாளும் அடுத்த நடவடிக்கை குறித்து திட்டமிடப்படுகிறது,” என்று தெரிவித்தார்.

ஞாயிறன்று தில்லி – அரியானா எல்லையில் தில்லியில் நரேலா அருகில் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்களை விவசாயிகள் உடைத்தெறிந்தனர்.  ஆறு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை கொண்டுவந்திருப்பதாக போராடும் விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக அறைகூவல்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு பூமி அதிகார் அந்தோலன் தன் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வித்த்தில் டிசம்பர் 2-3 தேதிகளில் நாடு முழுவதும் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்திட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு நிகழ்ச்சிநிரல்களை நிராகரித்திட வேண்டும் என்றும், நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை அடித்துநொறுக்கிடும் மத்திய பாஜக அரசின் முயற்சிகளுக்கு எதிராக மாநில அரசாங்கங்களும் முன்வர வேண்டும் என்றும் பூமி அதிகார் அந்தோலன் அறைகூவல் விடுத்துள்ளது.

போராடும் விவசாய சங்கங்களின் தலைவர்களுக்கு எதிராகக் கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்கள் மூலமாக அவதூறுகளை அள்ளிவீசும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும், போராடும் விவசாயிகளுக்கு எதிராகக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காதிருந்திட நீதித்துறை சுறுசுறுப்பாக முன்வர வேண்டும் என்றும் பூமி அதிகார் அந்தோலன் கேட்டுக்கொண்டுள்ளது. (ந.நி.)

;