india

img

யூசுப் தாரிகாமி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகாமி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான 370 பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை அடுத்து, அப்பகுதியில், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, அரசியல் தலைவர்களான  பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் நான்குமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்களும் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் முகமது யூசுப் தாரிகாமி மற்றும் அங்குள்ள மக்களை சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோர் நேரில் சென்றனர். ஆனால் அவர்கள் நகருக்குள் சென்றால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் என்று கூறி, விமான நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டனர். பின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சீத்தாராம் யெச்சூரி, திமுக சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகருக்குள் நுழைய முயன்றபோதும் இதே நிலைதான் ஏற்பட்டது.  இத்தகைய பின்னணியில், உடல்நலம் குன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் தாரிகாமியின் கைது செய்து, எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரியவில்லை என்றும், அவரை சக தோழர்  என்ற முறையில் சந்தித்து நலம் விசாரிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை சீத்தாராம் யெச்சூரி தாக்கல் செய்தார். இந்த மனுவை ஆகஸ்ட் 28-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், நண்பர் என்ற முறையில் தாரிகாமியை நேரில் சந்திக்க அனுமதிப்பதாகவும், அவரை சந்தித்துவிட்டு அதுபற்றிய விபரத்துடன் உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு அனுமதி அளித்தது. 

இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 29-ஆம் தேதி அன்று சீதாராம் யெச்சூரி ஸ்ரீநகருக்கு சென்று தாரிகாமியை சந்தித்து, அவரின் உடல்நலம் குறித்த கேட்டு அறிந்தார். பின்னர், இது குறித்த அறிக்கையை பிரமாணப் பத்திரமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில் தாரிகாமிக்கு ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இன்னும் சிறந்த சிகிச்சை தேவைப்படுகிறது, அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார். 

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம், டெல்லி எய்ஸ்ம் மருத்துவமனையில் தாரிகாமிக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்தது. இதையடுத்து, தாரிகாமி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன், அவரது உறவினர் ஒருவரும், மருத்துவர் ஒருவரும், அவருக்கு பாதுகாப்பு வழங்கி வரும் காவலர் ஒருவரும் மருத்துவமனையில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

;