india

img

வழிப்பறி கொள்ளைக்காரன் செய்வது போன்ற செயல்.....

 நீ முன்னாலேயே போனா நா பின்னாலே வாரேன் என்ற பாடல் தமிழ் சினிமாவில் பிரபலமான பாடல்.

பாஜக நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்களை நிறைவேற்றியது.  இதுபோலத்தான் தமிழ்நாடு எடப்பாடி அரசு விவசாயிகளையும் நகர்ப்புறநடுத்தர மக்களையும் பாதிக்கக்கூடிய நகர் ஊரமைப்புசட்டத்தை சட்டமன்றத்தில் விவாதம் இன்றி நிறைவேற்றியுள்ளது.

ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2015ல் கொண்டுவந்ததை 2019 செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம்அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது என்று சொல்லி ரத்து செய்துள்ளது. இதுபற்றி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விரிவாக செப்டம்பர் 29ஆம்தேதி எழுதியுள்ளார்.சரி உயர்நீதிமன்றம் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை ரத்து செய்ததை முன்னிட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் பாஜகவுக்கும் எஜமான விசுவாசத்தை காட்டிட எடப்பாடி அரசு இவருடைய எஜமானர்களாக இருக்கக்கூடிய பாஜகவை சேர்ந்த ஒருவர் சொன்னது போல் செப்டம்பர் 16-ஆம் தேதி21 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக நகர் ஊரமைப்பு சட்டத் திருத்தம்.பாஜக விவசாயிகளின் நலனை காவு கொடுக்க கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டம் வருவதற்கு முன் கூட்டியே எஜமான விசுவாசத்தை காட்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேற்கண்ட சட்டம் திமுக உறுப்பினர் ரகுபதி எதிர்ப்பை தவிர விவாதம் இன்றி நிறைவேற்றியுள்ளார்கள். 2015ல் சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கவில்லை என்று சொல்லி நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் ஆகியோர் ரத்து செய்தனர்.அதே போல் இப்போதும் விவாதம் இல்லை. 

நகர்புற ஊரமைப்பு சட்டப் பிரிவு 21 திருத்தம் செய்வதால் இனிமே ஒரு தொழிற்சாலை துவங்கும் முன் சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்து கேட்க வேண்டியதில்லை .முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டியதில்லை. தொழில் துவங்க இருக்கும் இடத்தில் இருக்கும் குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் பற்றி எதுவும் திட்ட அறிக்கையில் சொல்லவேண்டியதில்லை .அரசு அல்லது ஒரு கார்ப்பரேட் நிறுவனம் நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரு தொழில் தொடங்க வேண்டும்; அதற்கு இந்த இடம் வேண்டும் என்று கேட்டால் உடனடியாக திட்ட மதிப்பீட்டுஅறிக்கையை தயாரித்து அந்த இடத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள். ஆனால்  இதற்கு முன்பு அந்த இடத்தில்  இத்தனை வீடுகள்இருக்கின்றன. என்ன வகையான  நிலங்கள் இருக்கின்றன.இதை எடுத்தால் என்ன  பாதிப்பு வரும் நஷ்ட ஈடு எவ்வளவு தர வேண்டும் போன்ற விபரங்களுடன் அறிக்கையை தயாரிப்பு செய்வார்கள்  அல்லது இந்த இடத்தில் வேண்டியதில்லை; வேறு ஒரு இடத்தில் செய்யலாம் என்றும் மேலும்  அந்த பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு நடக்கும். ஆனால் இந்த சட்டத்தைப் பொறுத்தவரை ஒரு இடத்தில் அரசு அல்லது கார்ப்பரேட் நிறுவனம் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று சொன்னால் அந்த இடத்தில் எது இருந்தாலும் அரசு திட்ட மதிப்பீட்டு அறிக்கையை தயார் பண்ணி அந்த இடத்தை காலி செய்யச் சொல்லுவார்கள்.


திட்டத்திற்கு அரசு அனுமதி கொடுத்தால் சம்பந்தப்பட்ட இடம் விவசாய நிலமாக இருந்தாலும் சரி, குடியிருப்புவீடாக  இருந்தாலும் சரி காலி செய்துவிட வேண்டும். அப்படி என்றுசொன்னால் பல நகராட்சிகளில் இன்றும் குப்பை கொட்டுவதற்கு நிலம் இல்லாமல் இருக்கிறது. சாலைகளில் கொட்டுகிறார்கள். இனிமேல் நகராட்சிகளுக்கு குப்பை கொட்டுவதற்கு இடம் தேவைப்பட்டால் அது குடியிருப்புப் பகுதியாகஇருந்தாலும் சரி, இந்த இடம் நகராட்சி குப்பை கொட்டுவதற்கு  தேவை என்று சொல்லி நகராட்சி நிர்வாகம்  சம்பந்தப்பட்டவருடைய இடத்தை கையகப்படுத்த முடியும். மேலும்நிலத்தடி நீர் அதிகம் கிடைக்கக்கூடிய பகுதியிலோ அல்லது நீர்நிலைகளுக்கு அருகிலோ உள்ள நிலங்களை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தண்ணீர் கம்பெனி துவங்க நிலத்தை எடுக்க வேண்டும் என்று சொல்லி அரசிடம் நிலத்தைகையகப்படுத்திக் கொடுங்கள் என்று சொல்லிக் கேட்டால்சம்பந்தப்பட்ட இடத்தை உடனடியாக அரசு அவர்களுக்கு இடத்தை கொடுக்கும். இப்படி ஒரு மோசமான சட்டத்திருத்தம் தான் நகர ஊரமைப்பு 21வது சட்டத் திருத்தம்.

ஏன் இப்படி ஒரு சட்டத்திருத்தம் செய்கிறார் என்றால் பொதுமக்களிடமும்    அரசியல் கட்சியினரும் கருத்துச் சொல்லுங்கள் என்று கேட்டால் ஆட்சேபணை செய்வார்கள். எனவே ஆட்சேபணை வந்தால் அதற்கு மாற்று இடங்களை யோசிக்க வேண்டிய  நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்படும். அல்லது திட்டத்தை கைவிட வேண்டிய நிர்பந்தம் உருவாகும்.எனவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தங்களுடைய விசுவாசத்தை காட்ட முடியாத ஒரு சூழ்நிலை எடப்பாடி அரசுக்கு ஏற்படும். இதனால்தான் கருத்துக் கேட்காமல் இருப்பதற்காகவே இப்படி ஒரு சட்ட திருத்தத்தை இந்த அரசு கொண்டு வந்துள்ளது.இந்த சட்ட திருத்தத்தில் நஷ்டஈடு பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. ஒருவர் வங்கியில் ரூ.25 லட்சம், ரூ .50 லட்சம் கடன் வாங்கி வீடு கட்டி இருப்பார். அரசு உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று சொன்னால் அவர் எங்கு போய் இன்றைய சந்தை மதிப்பீட்டில் நிலத்தை ஒரு நகரத்திற்கு அருகில் வாங்க முடியும். நகரத்திற்கு அருகில் உள்ள  வீட்டை காலி செய்துவிடுங்கள் என்று சொன்னால் அவர்  கிராமப்புறங்களை நோக்கித் தான்  செல்ல வேண்டும்.இனிமேல் ஒரு புதிய வீட்டைக் கட்ட முடியாத ஒரு சூழ்நிலை என்பது ஏற்படும்.சம்பந்தப்பட்ட மக்களிடம் கருத்துக் கேட்காமல் நிலத்தையும் குடியிருப்புகளையும் எடுப்பதாகச் சொல்வது ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன்  செய்வது போன்றது. அப்படித்தான் எடப்பாடிஅரசு வெளிப்படையாக நிலத்தையும் வீட்டையும் பிடுங்குகிறது.

பாஜக அரசு அதானிக்கும் அம்பானிக்கும் எப்படி விசுவாசமாக நடந்து கொள்கிறதோ, அதே போல்  கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கூடுதலாக நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு விவசாயிகள் நடுத்தர மக்களுடைய வாழ்க்கையும் அழிப்பதற்காகவே இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இனிமேல் ஒருவருக்கு தன்னுடைய வீடு,  நிலம் சொந்தம் என்றுகனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் தங்களுடைய நிலங்களும் வீடுகளும் பறிபோகும் என்ற  பயத்திலேயே தமிழக மக்கள் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை இந்த அரசு உருவாக்கியுள்ளதுஇந்த சட்டத் திருத்தம் ஜனநாயக நெறிமுறைகளை குழிதோண்டி புதைத்துள்ளது. பொதுவாக தூக்கு மேடையில் ஏறுபவரிடம் கூட உனது கடைசி ஆசை என்ன என்று கேட்பார்கள். ஆனால் இந்த சட்டத் திருத்தத்தில் எதுவும் கேட்கவும் மாட்டார்கள், சொல்லவும் மாட்டார்கள் .2019 நீதிமன்ற உத்தரவை மீறி, அந்தத் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் கொண்டு வந்துள்ள நகர் ஊரமைப்பு திருத்தச் சட்டத்துக்கு, மக்கள் நலன் கருதி ஆளுநர் கையெழுத்திடக் கூடாது. எனவே தமிழ்நாடு அரசின் இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய மக்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும் .

கட்டுரையாளர் : கே.கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பழனி நகரச் செயலாளர்

;