india

img

மருந்துகள் விநியோகம் விதிமுறைகள் குறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டோலோ 650 மாத்திரைகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு, ரு.1000 கோடி மதிப்பிற்கு பரிசுகளை மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் வழங்கியதாக நிலையில், மருந்துகள் விநியோகம் விதிமுறைகள் குறித்து 10 நாட்களுக்குள் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெரும் தொற்று காலத்தில், மைக்ரோலேப்ஸ் நிறுவனத்தின் ’டோலோ 650’ மாத்திரைகளை மருத்துவர்கள் அதிக அளவில் பரிந்துரை செய்தனர். இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது, 350 கோடி டோலோ 650 மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், டோலோ 650 மாத்திரைகளை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு, ரு.1000 கோடி மதிப்பிற்கு பரிசுகளை மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் வழங்கியதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தாங்கள் மருந்துகளை முறைகேடான வழிகளில் விநியோகம் செய்வதாகவும், மருந்துகள் விநியோகம் செய்வது குறித்து ஒன்றிய அரசு விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இது குறித்த விசாரணை, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரஷூட் மற்றும் எ.எஸ்.போபண்ணா ஆகியோர் முன்னிலை வந்த போது, 500 மில்லி கிராம் வரை உள்ள மருந்துகளுக்கு மட்டுமே ஒன்றிய அரசு விலை நிர்ணயம் செய்வதாகவும், அதற்கு மேல் உள்ள அளவுகளுக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்கிறதாகவும், இதை பயன்படுத்தி கொண்டு மருந்து நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இது குறித்து 10 நாட்களுக்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

;