india

img

காலத்தை வென்றவர்கள் : விவேகானந்தர் பிறந்த நாள்....

சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் நாள் பிறந்தார். கேத்திரியில் இருக்கும்போது தாழ்த்தப்பட்ட ஏழை ஒருவர் அவரை அணுகி “மூன்று தினங்களாய் உணவு எதுவும் சாப்பிடாமல், போதனை செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது தங்களுக்குப் பசியாயும் களைப்பாயும் இருக்குமே” என்று கேட்டார். “ஆம். பசிக்கிறது. உண்ண ஏதும் உன்னால் தர முடியுமா?”  என்று  கேட்டார் விவேகானந்தர். 

அதற்கு அந்த ஏழை, “சுவாமி! உங்களுக்கு உணவு அளிக்க எனது உள்ளம் தவிக்கிறது. ஆயினும், நான் தொட்டுச் சமைத்த உணவை நீங்கள் உண்பீர்களா? ‘முடியும் என்றால் சொல்லுங்கள். இப்போதே சென்று காய்கறிகளும் கோதுமை மாவும் கொண்டு வருகிறேன். தாங்களே உணவைத் தயார் செய்து பிறகு சாப்பிடலாம்” என்று சொன்னார்.

உடனே விவேகானந்தர் “நீ உமது இல்லத்தில் சமைத்து உணவு கொண்டு வா. நான் சாப்பிடுகிறேன்.” என்று தெரிவித்தார். “சுவாமிஜி உணவைச் சமைத்து எடுத்துவர எனக்கு விருப்பமே. இருப்பினும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ, கேத்திரி மகாராஜா என்ன செய்வாரோ என்று எனக்கு அச்சமாக உள்ளது. சக்கிலியனான நான் தங்களுக்குச் சப்பாத்தி தந்தது தெரிய வந்தால், என்னைக் கடுமையாய் தண்டிப்பதுடன் நாட்டை விட்டும் மகாராஜா என்னைத் துரத்தி விடுவார். அதுதான் எனக்கு அச்சமாய் இருக்கிறது” என்று தெரிவித்தார். போதிய அளவு தைரியம்  சொல்லி, உணவைச் சமைத்து எடுத்துவருமாறு  கூற அவரும் உணவைச் சமைத்து எடுத்துவந்தார். விருப்பமுடன் சாப்பிட்டார் விவேகானந்தர். தாழ்த்தப்பட்ட ஏழை காட்டிய அன்பு விவேகானந்தரின் உள்ளத்தை உருக்கிவிட்டது. “தாயைக் காட்டிலும் பரிவுடன் வந்து என் பசியை இந்த அன்பன் அல்லவா அகற்றினான்” என்று  விவேகானந்தரின் உள்ளம்புளகாங்கிதம் அடைந்தது. இத்தகவலைத் கேத்திரி மகாராஜாவிடம் தெரிவித்தார் விவேகானந்தர். அரசர் அவருக்குச் சன்மானம் வழங்கிப் பாராட்டி, அவரைக் கண்ணியப்படுத்தினார். இத்தகைய மனப்பாங்குக்குக் காரணமான  விவேகானந்தர் துறவிகளுள் தனித்துவமானவர் எனின் அது மிகையன்று.

===பெரணமல்லூர் சேகரன் ===

;