india

img

தியாகி பகத்சிங் சொன்னதைச் செய்து கொண்டிருக்கிறோம்....

புதுதில்லி:
போராடும் விவசாயிகளுடன் தியாகிகள் தினமான மார்ச் 23 அன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து கொண்டு வீராவேசத்துடன் முழக்கமிட்டார்கள்.பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்பட்ட மார்ச் 23 தியாகிகள் தினமாக நாடுமுழுதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் தில்லி எல்லைகளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கும்விவசாயிகளுக்கு ஆதரவு  தெரிவித்துவட மாநிலங்களிலிருந்து குறிப்பாக மேற்குஉத்தரப்பிரதேசம், பஞ்சாப்,ஹரியானா மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கானவர்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் அணிதிரண்டு வந்தார்கள். அவர்கள்தாங்கள் வந்த டிராக்டர்களில்  பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் பெரிய அளவிலான படங்களைப் பொறித்த பதாகைகளைக் கட்டி இருந்தார்கள்.“இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் என்பது இளைஞர்களின் எதிர்காலத்திற்கானதாகும். எனவேதான் இதனை நன்கு உணர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு வந்திருக்கிறார்கள்,” என்று போராடும் விவசாயிகள் தெரிவித்தார்கள்.

மண் சேகரிப்பு
இளைஞர்களில் பலர் புரட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களிலிருந்து மண் எடுத்துக்கொண்டும் வந்திருந்தார்கள். புரட்சியாளர் கர்த்தார் சிங் சரபாவின் கிராமமான சரபா,பகத்சிங்கின் கிராமமான கத்கார் கலன், உத்தம்சிங்கின் கிராமமான சுனம், அமிர்தசரஸில் ஜாலியன் வாலா பாக் மற்றும் சுர்ஹிந்த் முதலானஇடங்களிலிருந்தும் மண் எடுத்து வந்தார்கள்.அணிதிரண்டு வந்தவர்களில் பெண்களும்அதிக அளவில் இருந்தார்கள். ஹரியானா மாநிலம் சோனிபேட்டிலிருந்து வந்த பிரீதி (23)என்பவர், போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழி இல்லை என்று கூறினார். 

மற்றொரு 22 வயது பெண் ஒருவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், தான் ஒரு மாதமாக இவர்களுடன் தங்கியிருப்பதாகவும், மனித உரிமைகள் குறித்து தான் சமீபத்தில்எழுதிய தேர்விற்காக  இங்கே தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். “இங்கே நான் மிகவும் ஆழமான முறையில் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறேன். இங்கே இருப்பவர்களில் பஞ்சாபியர்கள் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்வேறு தரப்பினரும் வந்திருக்கிறார்கள். போராட்டத்தின் கோரிக்கைகளில் மிகவும்
முக்கியமானவை என்று கருதுவதாலேயே அவர்கள் இவ்வாறு இங்கே வந்திருக்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.

2015ஆம் ஆண்டிலிருந்தே நடக்க முடியாமல்போய்விட்ட லக்விந்தர் சிங் என்பவர் தன்னுடைய இரு சக்கர நாற்காலியில் அமர்ந்து இந்தஇடத்திற்கு வந்திருந்தார். இவரைப்போன்றவர்கள் கணிசமானவர்கள் இங்கே இருந்தார்கள். தான் ஒரு தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும், விவசாயிகள் பிரச்சனை மீது அரசாங்கத்தின் மீதான கோபம் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர்கள் கூறினார்கள்.“என்ன வந்தாலும் சரி, நம் உரிமைகளுக்காகப் போராடுவதை விட்டுவிடக்கூடாது என்று தியாகி பகத்சிங் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார். அதைத்தான் இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்,” என்றுவயல்வெளியில் நடந்த ஒரு விபத்தில், கால்களை இழந்து,  கடந்த பத்தாண்டுகளாகத் தன்னுடைய இரு சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் இருந்துவரும் ராவ் வரிந்தர் சிங் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மக்களுக்காகவே போராடுகிறோம்
மக்களை ஈர்த்துக் கட்டிப்போடும் விதத்தில்பஞ்சாபி பாடகர் ரவீந்தர் கரேவால் சுமார் இரு மணி நேரம் பாடினார். “நாம் நம் சொந்த மக்களிடமே, பிரிட்டிஷாரிடம் போராடியதுபோன்று, சுதந்திரத்திற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என்று தியாகி பகத்சிங் நினைத்திருக்க மாட்டார். போராட்டக் களத்தில் மக்கள் திரள் அதிகமாகிக் கொண்டிருப்பது குறித்து மக்கள் என்னிடம் கேட்டார்கள்.நான் இங்கே மட்டுமயல்ல, ஒவ்வொருவர் வீடுகளிலும் வீட்டிற்குள்ளேயும் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது, என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்,” என்று அவர்கூறினார். (ந.நி.)

;