india

img

வேளாண் சட்டங்கள் முதலில் தாக்குவது எங்களின் சமையல் கூடத்தைத்தான்....தில்லி போராட்டத்தில் பெண்கள் ஆவேசம்...

புதுதில்லி:
வேளாண் சட்டங்கள் முதலில் தாக்குவது எங்களின் சமையல் கூடத்தைத்தான் என ஆவேசமாகக் கூறும் பெண்கள்,  மிகப்பெரிய எண்ணிக்கையில் போராடும் விவசாயிகளோடு தில்லி  சாலைகளில் குவிந்திருக்கின்றனர்.

ஆண்களோடு சாலையில் குளிரில் இருப்பதுகடினமாக இல்லையா? என்ற கேள்வியை முடிக்கும் முன்னரே,   “இது எங்களின் கடமை” என   40 வயது  ஜாஸ்பீரித் கவுரும், குர்லீன் கவுரும்கூறுகிறார்கள்.நவம்பர் 26 ல் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம்,மத்தியப் பிரதேசத்தை சார்ந்த விவசாயிகள் “தில்லி சலோ” என்ற முழக்கத்தோடு தில்லியை நோக்கி பேரணியாக புறப்பட்டார்கள். விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதே பேரணியின் நோக்கம்.

பேரணியாக வந்த விவசாயிகளை தில்லியின் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தியது மத்திய அரசு. தடைகளை தாண்டி நடந்தவர்களை தடியை கொண்டும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தாக்கியது காவல்துறை. ஆனால் ஆளும் வர்க்கத்தின் மிரட்டலுக்கு அஞ்சாமல் சாலையில் காத்திருக்கிறார்கள்.போராட்டம் 14 நாட்களை கடந்திருக்கிறது.போராட்டத்திற்கு நாடெங்கிலும் பல தரப்பட்ட மக்களிடமிருந்து ஆதரவு பெருகியுள்ளது. விவசாயிகளோடு, தொழிலாளர்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். நவம்பர் 8  “பாரத் பந்த்” வெற்றிகரமாக நடந்துள்ளது.போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. “வீட்டு வேலையையும் பார்த்துக்கொண்டே போராட்டத்திலும் கலந்து கொள்கிறோம்” என்கிறார் விவசாய சங்கத்தை சேர்ந்த 69 வயதான சுரிந்தர் கவுர். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் இருந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ள  பெண்கள்  “வேளாண் சட்டங்கள் முதலில் தாக்குவது எங்களின் சமையல் கூடத்தைத்தான்” என்கிறார்கள். “எங்களிடம் உள்ள துண்டு நிலத்தையும் பறித்து அம்பானிக்கும், அதானிக்கும் கொடுத்து விட்டால் நாங்கள் எப்படி சாப்பிடுவது” என கேட்கிறார் சுரிந்தர் கவுர்.

“ஏற்கனவே பெண்கள் சமூகத்தில், குடும்பத்தில் இரண்டாம் பட்சமாகவே நடத்தப்படுகின்றனர். உணவாக இருந்தாலும், கல்வி, சுகாதாரமாக இருந்தாலும் எதுவும்  பெண்களுக்கு முதலில்  கிடைக்காது. தற்போது வேளாண் சட்டங்கள் மூலம் விவசாய நிலங்களையும், வருமானத்தையும் பறித்துக்கொண்டால் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்து விடாதா?” என கேட்கிறார் அமனாதீப்.

“வயல்களில் இறங்கி வேலை செய்வதில் தொடங்கி அறுவடை முடித்து,மண்டிகளில் விற்பது வரை எங்கள் விவசாய சகோதரர்களின் தோளோடு தோள் நிற்கிறோம்” என்கிறார்கள். இங்கே போராட்டத்தில் கலந்து கொள்ள நிறைய பெண்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் வயல்களில் கோதுமையும், கால்நடை தீவனப் பயிர்களும் அறுவடைக்கு தயாராக இருப்பதால் பெண்களால் பங்கேற்க முடியவில்லை. வழக்கமாக ஆண்கள்தான் அறுவடைபணியை செய்வார்கள். இந்த தடவை  போராட்டத்தில் இங்கே இருப்பதால் அந்த வேலையை நாங்கள் செய்ய வேண்டிய நிலைக்கு மத்திய அரசு எங்களை தள்ளியுள்ளது.

தற்போது உள்ளூரில் நடக்கும் சிறிய அளவிலான போராட்டங்களில் மட்டுமே பெண்கள் பங்கேற்று வருகிறார்கள். சுங்கச்சாவடிகளில், ரிலையன்ஸ் மால்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் திரும்பிச் சென்றாலும் இந்த போராட்டங்களை நாங்கள் நிறுத்தப் போவதில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்கிறார்கள்.வீட்டு வேலைகளை, பொறுப்புகளை பார்த்துக்கொண்டே போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறோம். சிலரது வீட்டில்  வயதானவர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு குழந்தைகள், கால்நடைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். விடியும் முன்னரே எல்லா வேலைகளையும் செய்துவிட்டு போராட்டத்திற்கு கிளம்பி வந்து  பங்கேற்று விட்டு இரவே திரும்பிச்செல்பவர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லும் குர்லீன் கடந்த ஏழு நாட்களாக பஞ்சாபிலிருந்து வந்து போய்க் கொண்டிருக்கிறார்.

போராட்டங்களில் உள்ள சிரமங்களை பெண்கள் மிகத் திறமையாக கையாளுகின்றனர். போராட்ட வேலைகளை தங்களுக்குள் முறை வைத்து பிரித்துக் கொண்டுசெய்கிறார்கள்.வீட்டு வேலையும் பார்ப்பதால் ஒருவர் வந்தால் மற்றொருவர் செல்வர். “ஆனால் ஒன்றுமட்டும் உறுதி போராட்டத்தில் இருந்து பத்துபேர் திரும்பிச் சென்றால் வரும் போது இருநூறுபேராக கூட்டி வருகிறோம்” என்கிறார் அமனாதீப். “என்னுடைய மூன்று வயது மகளும் திக்ரி எல்லையில் என்னோடுதான் இருக்கிறாள்” என்று
சிரித்துக்கொண்டே சொல்லும் அமனாதீப், இப்போது போராட்டத்திற்கு அவள் பழகி விட்டாள் என்கிறார்.

திக்ரி எல்லையில் போராடுபவர்களில் பெரும்பாலானோர் பெண்களே. 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை பெண்கள் அங்கே நவம்பர் 27 முதல் இருக்கிறார்கள்.மால்வா, சல்டூர்,மன்சா, பர்னாலா, லூதியானா போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமானபெண்கள்  வந்துள்ளனர். அரசின் தவறான கொள்கையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை அதிகம் உள்ள பகுதி இது. கோதுமை,நெல், உருளைக்கிழங்கு பயிரிட்ட விவசாயிகள் வாங்கிய   கடன்களை திருப்பிச்செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்ப பெண்கள் பெருமளவுக்கு போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.அரசின் தவறான கொள்கை காரணமாக தங்களது குடும்ப ஆண்களை அவர்கள் இழந்துள்ளார்கள். பெண்களுக்கு இருக்கிற நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளப் பார்க்கும் அரசின் திட்டங்களை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள்.

முதலில் பசுமைப் புரட்சி என்ற பெயரில் எங்கள் நிலங்களை பாழாக்கியவர்கள், தற்போது வேளாண் சட்டங்கள் மூலம் எங்கள் வாழ்க்கையை பறிக்க நினைக்கிறார்கள். “எங்கள் உணவைப் பறிக்கும் கொள்கை இது” என சட்டங்கள்குறித்து  போராடும் பெண்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.பெண்கள் சுயமாக சிந்திக்க மாட்டார்கள். ஆண்கள் சொல்வதைக்கேட்டு நடப்பவர்கள் என்ற பிம்பத்தை ஆண்களுக்கு நிகராக களத்தில் நின்று போராடும் பெண்கள் இன்று தகர்த்து எறிந்திருக்கிறார்கள்.

===தொகுப்பு: ஆர்.தர்மலிங்கம்===

;