india

img

அகில இந்திய வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி... சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வாழ்த்து

புதுதில்லி:
மத்திய அரசாங்கத்தின் தேச விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும்,அதிலும் குறிப்பாக, நாட்டின் சொத்துக்களை சூறையாடுவதற்கு எதிராகவும், தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தியதற்கு எதிராகவும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் நவம்பர் 26 அன்று நடைபெற்றஅகில இந்திய வேலை நிறுத்தம் மகத்தானஅளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்காக தொழிலாளர் வர்க்கத்திற்கும், விவசாயி களுக்கும்,  விவசாயத் தொழிலாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நவம்பர் 26 அன்று மத்தியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடந்துள்ளது. 27ஆம் தேதியன்று விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தங்கள் மறியல் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.பாஜக ஆளும் மாநிலங்களில் கடும்ஒடுக்குமுறை, மிரட்டல் மற்றும் மிகப்பெரியஅளவில் கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கிளர்ச்சிப் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக நடந்துள்ளன. தில்லிப் பேரணிக்காக வந்துகொண்டி ருந்த விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் தடுத்திட வேண்டும் என்பதற்காக தில்லியை நோக்கி வரும் அனைத்து சாலைகளும் காவல்துறையினரால் தடுப்பு அரண்கள் அமைத்து விவசாயிகள் தில்லிக்குள் நுழையாதவாறு தடுக்கப்பட்டார்கள்.கண்ணீர்ப் புகைக்குண்டுகளாலும், வாட்டர்கேனன்கள் மூலம் இன்றைய கடுங்குளிர்கால நிலைமையிலும் விவசாயிகள் மீது குளிர்ந்தநீரைப் பாய்ச்சியபோதிலும், விவசாயிகளும் விவசாயத்தொழிலாளர்களும் அங்கேயே சாலைகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.

தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தபொது வேலைநிறுத்தத்திற்குத் தொழிலாளர்கள் நாடு முழுவதும் அபரிமிதமான ஆதரவை அளித்துள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களில் வேலைநிறுத்தம் முன்னெப்போதையும்விட வலுவாக அமைந்திருந்தது. அனைத்துப் பெரிய துறைமுகங்களும், எச்ஏஎல், பிஎச்இஎல், பிஇஎம்எல், பிஇஎல்,விசாகை, சேலம், பொகாரோ உருக்காலை கள், நிலக்கரி மற்றும் இரும்புச் சுரங்கங்கள், மின்சாரத்துறை, பொதுப் போக்குவரத்து, டிரக் போக்குவரத்து உட்பட சாலைப் போக்குவரத்து, கட்டுமானத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், அங்கன்வாடித் தொழிலாளர்கள்  உட்பட திட்டப்பணிகளில் பணியாற்றும் ‘ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்கள், மருத்துவ மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும்மத்திய மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.கேரளாவில் கிட்டத்தட்ட ‘பந்த்’ போன்றதொரு நிலைமை ஏற்பட்டதைப் பார்க்க முடிந்தது. அங்கே 1.6 கோடி தொழிலாளர்களும், விவசாயிகளும் இக்கிளர்ச்சிப் போராட்டங்களில் பங்கேற்றிருப்பதாக மதிப்பிடப் பட்டிருக்கிறது.

திரிணாமுல், பாஜகவின் தாக்குதலை மீறி வேலைநிறுத்தம்
மேற்குவங்கத்தில் போராடும் ஊழியர்கள்மீது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்களைத் தொடுத்தபோதும், வேலை நிறுத்தப்போராட்டம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளது. சணல் ஆலைகள், தனியார் பேருந்து போக்குவரத்து, உருக்குத் தொழிற்சாலைகள் மற்றும் சிமெண்ட், வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.  திரிபுராவில், ஆளும் பாஜக அரசாங்கத்தின் தாக்குதல்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் திறந்து வைத்திருக்கப்பட வேண்டும் என்று மிரட்டல்கள் விடுத்திருந்தபோதிலும் இவற்றைப் புறந்தள்ளிவிட்டு மாநிலம் முழுவதும் ‘பந்த்’ போன்று காட்சி அளித்தது.இதே போன்ற நிலைமை அசாம், கர்நாடகம், பீகார் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களிலும் பார்க்க முடிந்தது. இதர இடங்களிலும் போராட்டம் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது.மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசில் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு மிகவும் விரிவான அளவில்இந்தியாவின் உழைக்கும் மக்களும், விவசாயி களும், விவசாயத் தொழிலாளர்களும், முறைசாராத் தொழிலாளர்களும், மத்திய அரசின்தேச விரோத, தொழிலாளர் வர்க்க விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து தங்கள் கோபத்தைக் காட்டியிருக்கக்கூடிய நிலையில், இப்போதாவது மத்திய அரசும் பிரதமர் மோடியும், நாட்டின்கோடானு கோடி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, பெரிய அளவில் வறுமையையும் துன்ப துயரங்களையும் ஏற்படுத்தியுள்ள, தங்கள் மக்கள் விரோத கொள்கைகளை மறுபரிசீலனை செய்திட முன்வர வேண்டும்.மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் தில்லியை நோக்கிவந்து கொண்டுள்ள விவசாயிகள் மீது ஒடுக்கு முறையை ஏவுவதை நிறுத்திக்கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளின்கீழ், அமைதியான முறையில், நவம்பர் 27 அன்று கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட அவர்களை அனுமதித்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மிகவும் அழுத்தமாக வலியுறுத்திக் கோருகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (ந.நி.)

;