india

img

மாணவத் தியாகிகள் சோமு- செம்பு நினைவு நாள்...

இந்தியாவை உலுக்கிய அவசர நிலை காலக் கொடுமைகளின் வீழ்ச்சிக்குப் பிறகு மாணவர்கள் மத்தியில் ஜனநாயகக் கோட்பாடுகள் கொந்தளிப்பாக வெளிப்பட்ட காலமது. தங்களது உரிமைகளை மீட்டெடுக்க மாணவர்கள் போராட்டப் பாதையில் அணிவகுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில்தான் தங்களது நேர்மையான, நியாயத்திற்கான செயல்பாடுகளில் முன்னணி வகித்ததன் காரணமாக மாணவர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றனர். சோமசுந்தரம்- செம்புலிங்கம் எனும் இளம் தலைவர்கள். கல்லூரியோடு அவர்களது நடவடிக்கைகள் நின்றுவிடவில்லை. 

தூத்துக்குடி மாவட்டம் துரைச்சாமியாபுரம் ஒற்றையடிப் பாதையைத் தார்ச்சாலையாக மாற்றுவதற்கு நடந்த போராட்டத்தின் போது மக்களைத் திரட்டுவதில் சோமுவின் பங்கு முக்கியமானது. தூத்துக்குடி போல்டன்புரத்தில் ஒரு இடதுசாரிக்கே உரிய கம்பீரத்துடன் செம்பு செயல்பட்டார்.தியாகராஜர் பொறியியல் கல்லூரி உணவு விடுதி சரியாகச் செயல்படுவதற்காகவும், உணவுவிடுதிக் கட்டணம் உயர்த்தப் படுவதைத் தடுப்பதற்காகவும் விடுதியில் பரிமாறப்படும் உணவுதரமானதாக இருப்பதற்காகவும், விடுதியில் மாணவர்களுக்கு உரிய வசதிகள் பெறுவதற்காகவும் நடந்த பல்வேறு போராட்டங்களில் முன்னணி வகித்து மாணவர்களை ஒன்று திரட்டியதில் சோமசுந்தரத்திற்கும் செம்புலிங்கத்திற்கும் முக்கியப் பங்குண்டு.

அதேபோல்கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உயர்த்தப்படும் போதெல்லாம் அதைஎதிர்த்து நடந்த போராட்டங்களிலும் அவர்கள் முன்னிலை வகித்தனர். இதனால் மாணவர்களின் அன்பையும் நன்மதிப்பையும் இருவரும் பெற்றிருந்தனர்.1980ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் செம்புலிங்கம் மாணவர் பேரவைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய மாணவர் சங்கத்தின்செயலாளராக சோமசுந்தரம் அவருக்கு வழிகாட்டினார். சாதி ஆதிக்க சக்தியினரால் பொறுத்துக்கொள்ள முடியாத அளவிற்கு அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்தது. இந்தியாவின் சாபக்கேடான சாதிவெறி அவர்கள் மீது பாய்ந்தது. மாணவர்களின் ஆதரவோடு செல்வாக்குப் பெற முடியாத சாதி வெறியர்கள் கூலிப் படையினருடன் இணைந்து சோமசுந்தரத்தையும் செம்புலிங்கத்தையும் தாக்கினர். 1981 மார்ச் 31 அன்று சோமுவும் செம்புவும் கொaல்லப்பட்டனர்.

“சாவைக் கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. ஏனெனில், இறப்பில் நாங்கள் இறப்பதில்லை” என்ற அறைகூவலே சோமு - செம்பு போன்ற தியாகிகள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம்.சோமுவும் செம்புவும் உயர்த்திப் பிடித்த “சுதந்திரம் ஜனநாயகம் சோஷலிசம்” என்று பொறிக்கப்பட்ட வெண்கொடியை கம்பீரமாக உயர்த்திப் பிடித்து சாதி மத இன பாலின வேறுபாடற்ற சமுதாயத்தைப் படைக்க  அணிதிரள்வதே சோமு செம்புவிற்கு செலுத்தும் நினைவஞ்சலியாகும்.

;