india

img

விவசாயிகளின் போராட்டம் நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.. பகத்சிங் சகோதரி மகள் குர்ஷித் கவுர்தத் பேச்சு....

புதுதில்லி;
விவசாயிகளின் போராட்டம் நிச்சயமாக நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று மாவீரன் பகத்சிங் சகோதரியின் மகள் குர்ஷித் கவுர்தத் கூறி னார்.விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி தலைநகர் தில்லியில் கடந்த8 மாத காலமாக பல்வேறு மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத் திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர். போராட்டத் தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு கரும்பு 
விவசாயிகள் சங்கம் சார்பில் சிங்கூ எல்லையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 8) பேரணி நடைபெற்றது.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுஇளம் வயதில் உயிர்நீத்த தியாகி மாவீரன் பகத்சிங்கின் சகோதரி மகள் குர்ஷித் கவுர் தத் இந்த பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில், வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீர சமர் புரிந்த தோழர் பகத்சிங் சகோதரியின் மகளாக நான் உங்களிடம் பேசுவதில் பெருமைப்படுகிறேன். இந்திய விவசாயத்தைகாப்பாற்ற துடிக்கும் தமிழக தேசபக்தர்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்த நேரத்தில் மாமா ஜி பகத்சிங்கூறிய சில வார்த்தைகளை நினைவு படுத்த விரும்புகிறேன். ‘‘நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் ரத்தம் இந்தமண்ணில் கலந்திருக்கும். அடுத்த தலைமுறைகளுக்கு அது வழிகாட்டும்’’ என்றார். அது நடந்து கொண்டிருக்கிறது.

அம்பானி, அதானிக்கே பலன்  
தமிழ்நாடு விவசாயிகளே மிக நீண்டதூரத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வருகை தில்லியில் போராடும் விவசாயிகளை உற்சாகப்படுத்தும். மோடியால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் சாதாரண விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இச்சட்டம் சாதாரண விவசாயிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, அரசியல் சட்டத்திற்கும், நீதித்துறைக்கும் எதிரானது. இந்த சட்டங்களால் பலன் அடையப் போவது அம்பானியும், அதானிகளும் தான். நேரடியாக விவசாயம் செய்யும்விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் கடுமையான இன்ன லுக்கு ஆளாவார்கள்.பிரிட்டிஷ் அரசால் கொண்டுவரப் பட்ட அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உணவுப் பொருட்களை பதுக்கி வைக்க முடியாது. ஆனால் தற்போது புதிய சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பதுக்கி வைத்து கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கிறது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியில் இந்திய விவசாயிகள் புகையிலை உற்பத்தி செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதுபோலவே இந்த சட்டத்தின் மூலம் தற்போது பெருமுதலாளிகள் நமது விவசாயிகளை அவர்களுக்குத் தேவையான பயிர்களை விவசாயம் செய்ய கட்டாயப் படுத்தும் அவலம் ஏற்படும்.

மோடியால் யாருக்கும் பாதுகாப்பு கிடையாது 
மோடி தன்னுடைய 56 இன்ச் மார்பளவு காட்டி, நான் இந்த நாட்டின் பாதுகாவலன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இந்தியாவில் கருப்புப் பணத்தையும், கள்ள பணத்தையும், ஊழலையும் ஒழித்துக் காட்டுவேன் என்று சொன்னார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக ஊழலும், லஞ்சமும் உச்சாணிக் கொம்பில் இருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் ஒப்பற்ற இந்த போராட்டத்தின் மூலம் திருப்புமுனை ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், பொது மக்கள் ஓரணியில் நிச்சயம் திரள்வார்கள். நமது மகத்தான போராட்டம் வெல்லும் என்றார்.

பேரணியில் பங்கேற்பு
கரும்பு விவசாயிகளின் பேரணியைகொடியசைத்து  துவக்கி வைத்த  குர்ஷித்கவுர்தத், வேளாண் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டபடி நடந்து வந்தார். கரும்பு விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் டி.ரவீந்திரன் பேரணிக்கு தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின்தலைவர் பி.டில்லிபாபு உள்ளிட்ட மாநிலநிர்வாகிகள் பேரணியில் கலந்து கொண்டனர். 

;