india

img

கேரள மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தள்ளிவைப்பு.... அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான செயல்: தேர்தல் ஆணையத்திற்கு நிலோத்பல் பாசு கடிதம்...

புதுதில்லி:
கேரள மாநிலத்தில் காலியாகியுள்ள மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலைத் திடீரென்று தேர்தல் ஆணையம் தள்ளி வைத்திருப்பது, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கை என்றும் அதனைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும்  தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்நிலோத்பல் பாசு கடிதம் எழுதியுள்ளார். பின்னர் வெள்ளியன்று அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் முழு விபரம்:கேரளாவில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்துவதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் தற்காலிகமாகத் தள்ளி வைத்து, திடீரென்று அறிவித்திருப்பது கண்டுஅதிர்ச்சி அடைகிறோம். உண்மையில், இந்தத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை தேர்தல்அதிகாரி, எஸ்.வி. உன்னிகிருஷ்ணன் நாயரிடமிருந்து நாங்கள் பெற்றிருக்கிறோம்.

மத்திய அரசின் தலையீட்டின் பேரில்மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திலிருந்து வந்த கடிதத்தினை அடுத்து இவ்வாறு தேர்தலைத் தள்ளிவைத்திருப்பதாகத் தங்கள் பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது. எனினும்,
அதற்கான காரணம் எதையும் தேர்தல் ஆணையம் தெரிவித்திடவில்லை.தேர்தல் நடைமுறையில் நேரடியாகவே மத்திய அரசு தலையிட்டிருப்பதன் பின்னேயுள்ள உண்மையான காரணங்களைத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்.இவ்வாறு தேர்தல் ஆணையம் செயல்பட்டிருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் 324ஆவது பிரிவிற்கு முற்றிலும் எதிரான செயல் என்றும் இதன்மூலம் தேர்தல் ஆணையம் தன்னுடைய சுதந்திரமான தன்மையைக் கைவிட்டுவிட்டது என்றும் நாங்கள் அஞ்சுகிறோம்.
ஓய்வு பெறும் முன்பே தேர்தல் நடத்த வேண்டும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்கீழ், மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியான மூன்று மாதத்திற்குள் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். இதேபோன்றே மக்களவைக்கான தேர்தல் சம்பந்தமானசொற்றொடர்களும் காணப்படுகின்றன. மக்களவைக்கான தேர்தல்களும் அதற்கான காலம் முடிவடைவதற்கு முன்னே நடத்தப்பட வேண்டும்.காலியாகும் தொகுதிகளுக்கு  மட்டும், 151-ஏ பிரிவின்கீழ் ஆறு மாதகாலத்திற்குள் தேர்தல் நடத்தப்பட முடியும்.

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் அவர்கள் பதவிக்காலத்திலிருந்து ஓய்வுபெறுவதற்கு முன்பே நடத்தப்பட வேண்டும் என்றுசொற்கள் தெளிவாக இருக்கின்றன. எனவே, இதுதொடர்பான அறிவிக்கை பதவிக்காலம் முடிவதற்கு முன்பே பிறப்பிக்கப்பட வேண்டும்.“ஓய்வுபெறுதல்” என்னும் வார்த்தைஅதைத்தான் குறிக்கிறது.இப்போது அரசாங்கத்தின் உத்தவின்பேரில் தலைமைத் தேர்தல் ஆணையம் தேர்தலைத் தள்ளி வைத்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதன்மூலம் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாகச் செயல்படவில்லை. இவ்வாறு தள்ளிவைத்ததற்கான காரணங்களைப் பொது  வெளியில் அது வெளியிடவில்லை.

அவமானகரமான சமரசம்
மேலும் கேரளா உட்பட பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பணிகள் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அங்கே அமலில் இருந்து வருகிறது. எனவே, அதில்மத்திய அரசாங்கம் எந்தவிதத்திலும் தலையிட முடியாது. அதேபோன்றே தலைமைத் தேர்தல் ஆணையமும் அவ்வாறு தலையிடுவதற்காக அரசுத்தரப்பிலிருந்து வரும் வேண்டுகோள்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பது, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தை  அவமானகரமான முறையில் சமரசம் செய்துகொள்ள வைத்திருக்கிறது. இவ்வாறு சமரசம் செய்து கொள்வதற்கான காரணம் என்ன என்பதை ஆணையம் விளக்கிட வேண்டும்.  

சட்டமன்ற அதிகாரத்தை பறிப்பதாகும்
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே, அப்பணிகளுக்காக புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் கேரள சட்டமன்றத்திற்கு இருக்கிறது. இப்போது தலைமைத்தேர்தல் ஆணையம் இவ்வாறு தள்ளிவைத்திருப்பது, அரசமைப்புச்சட்டம் இது தொடர்பாக கேரள சட்டமன்றத்திற்கு அளித்துள்ள அதிகாரங்களைப் பறித்திடும் செயலாகும்.எனவே, தலைமைத் தேர்தல் ஆணையம் இவ்வாறு தேர்தலைத் தள்ளி வைத்து பிறப்பித்துள்ள முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இவ்வாறு நிலோத்பல் பாசு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.(ந.நி.)

;