india

img

வடகிழக்கு தில்லியில் முஸ்லிம்கள் மீதான வன்முறைக்குப் பின்னே அரசியல் சூழ்ச்சி உண்டு... பிருந்தா காரத் குற்றச்சாட்டு...

புதுதில்லி:
வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களுக்குப் பின்னே ஓர் அரசியல் நிகழ்ச்சிநிரல் உண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிருந்தா காரத் கூறினார்.பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களில் பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினர் அழைக்கப்பட்டு, அவர்களின் இன்றைய நிலைமை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தில்லி மாநிலக்குழு சார்பில் ஒரு நிகழ்வு இணைய வழி மூலமாக புதன்கிழமையன்று  நடத்தப்பட்டது.

இந்நிகழ்வின்போது ராம் சுகார்க் என்பவர், பிப்ரவரி 26 அன்று வன்முறை வெறியாட்டம் நடைபெற்ற சமயத்தில் கொல்லப்பட்ட15 வயதுள்ள நிதின் பஸ்வான் என்னும் சிறுவனின் தந்தை, எப்படி தன் மகன் கொல்லப்பட்டான் என்ற விவரத்தை விவரித்தார்.“என் மகன், காவல்துறையினரால்தான் கொல்லப்பட்டான். எவ்விதமான கலவரமும் இல்லாத சமயத்தில் அவர்கள் ஏன் கண்ணீர்ப் புகை குண்டுகளால் சுட வேண்டும்? என் மகன் எப்படி இறந்தான் என்பது தொடர்பானஅறிக்கை, இதுவரை எனக்குக் கிடைக்க வில்லை. தில்லி அரசாங்கம் என் மகன் சாவிற்காக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிப்பதாகக் கூறியிருந்தது. ஆனால் 5 லட்சம் ரூபாய்தான் அளித்திருக்கிறது.  இதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது, என் மகன் மைனர் என்பதால் இவ்வாறு பத்து லட்சம் என்பது 5 லட்சமாகக் குறைக்கப்பட்டது என்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.

கொல்லப்பட்ட  எங்கள் குழந்தைகளுக்கு நீதி வேண்டும்
 சம்பவத்தின்போது கொல்லப்பட்ட 22 வயது அஸ்ஃபாக் உசேன் என்பவரின் தந்தை அகாஸ் உசேன் இந்நிகழ்வில் கூறியதாவது: “நாங்கள் இப்போது கோருவது எல்லாம் இறந்த எங்கள் குழந்தைகளுக்கு, நாட்டிலுள்ள சட்ட அமைப்புகளிடமிருந்து நீதியேயாகும். இது ஒன்றும் மதக் கலவரம் அல்ல. மாறாக நாட்டின் எதிரிகளால் இது தொடங்கப்பட்டது. நாங்கள் இங்கேபல ஆண்டுகளாக அனைத்து சமூகத்தினருட னும் நல்லிணக்கத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது தொடர வேண்டும் என்பதேயாகும்.”இந்த நிகழ்வின்போது பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. கோபால் கவுடா, கலவரம் தொடர்பாக புலனாய்வு அமைப்புகளின் தோல்வி மற்றும் மத்திய துணை ராணுவப் படையினர் மிகவும் தாமதமாக சம்பவ இடங்களுக்கு வந்தமை தொடர்பாக எண்ணற்ற கேள்விகளை எழுப்பினார்.

“நாட்டின் சட்டத்தை நிலைநாட்டவேண்டிய அமைப்புகள் இந்நிகழ்வின்போது படுமோசமான முறையில் தோல்வி அடைந்திருக்கின்றன. 54 பேர் கொல்லப்பட்டிருப்பதும், நூற்றுக்கணக்கான கடைகள் எரித்து நாசமாக்கப் பட்டிருப்பதும் வெட்கக் கேடாகும். துணை ராணுவப் படைகள் உரிய காலத்தில் ஏன் அனுப்பப்படவில்லை? மத்திய அரசாங்கம் என்ன செய்துகொண்டிருக்கிறது? ஏன் அவ்வாறு தாமதப்படுத்தியது? இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக முன்னாள் நீதிபதி ஒருவரை ஏன் அது நியமித்திடவில்லை?” என்று அவர் கேள்விகளை அடுக்கினார்.  

வெறுப்பை கட்டி எழுப்பிய அரசின் தலைவர்கள்
முன்னாள் இந்தியத் தலைமைத் தகவல் ஆணையர் வஜஹாத் ஹபிபுல்லா பேசுகையில், “நாம் நம் சமூகத்தில் சிலரைப் பெற்றிருக்கிறோம். அவர்கள், “பக்தி”யின் அடிப்படையில் மக்களுக்குள் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். இவர்களுக்கு எதிராக அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.  அரசாங்கம் இவ்வாறு செய்யாமல் தன் கடமையிலிருந்து தவறுமேயானால், பின் அரசாங்கத்திற்கு அதன் கடமையை நினைவூட்டவேண்டிய பொறுப்புநமக்கு ஏற்படுகிறது,” என்றார்.சமூகச் செயற்பாட்டாளர் ஹர்ஷ் மாந்தர்பேசுகையில், “கலவரத்திற்கு முன்பு நடைபெற்ற தில்லி தேர்தல் பிரச்சாரத்தின்போது,  மத்திய அரசாங்கத்தின் மூத்த தலைவர்கள் “வெறுப்பைக் கட்டி எழுப்பினார்கள்” என்று குற்றம்சாட்டினார். மேலும், உண்மையில் இந்தக் கலவரங்களின் பின்னே “சதி” இருந்திருக்கிறது என்றும், ஆனாலும் அது காவல்துறையினர் கூறுவது போன்ற “சதி” கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

பிருந்தா காரத்
இந்நிகழ்வில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றுகையில், “இன்றைய தினம் இந்தியாவில், மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தக் கலவரங்களுக்குப் பின்னே குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடுபவர்கள் வரவேற்கப்படக்கூடாது என்கிற ஓர்அரசியல் நிகழ்ச்சிநிரல் இருந்தது.  இவற்றுக்கு எதிராக நீங்கள் போராடினால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்கிற செய்தி இந்தக் கலவரத்தின்பின்னே இருக்கிறது,” என்றார்.பின்னர் இந்த நிகழ்வில், “வடகிழக்கு தில்லியில் மதவெறி வன்முறை” என்னும் தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. (ந.நி.)

;