india

img

ஹரியானா பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல்.. அதானி பலநூறு ஏக்கரில் வேளாண் குடோன்கள் அமைப்பது பற்றி செய்தி வெளியிட்டவர்...

புதுதில்லி:
ஹரியானா மாநிலம், கர்நாலைச் சேர்ந்த ஊடகவியலாளரும், ஐபிஎன்24 (IBN24) ஊடகத்தில் பணியாற்றி வருபவருமான அகர்ஷன் உப்பல், கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றால், அகர்ஷன் தாக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.ஆனால், அகர்ஷன் உப்பல் மீதான இந்த தாக்குதலின் பின்னணியில், வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

அகர்ஷன் உப்பல் சமீபகாலமாக, விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளை அதிகமாக கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக, அதானி உள்ளிட்ட பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே புதிய வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீதான தாக்குதலுக்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான செய்தி மட்டும் காரணமாக இருக்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். மூன்று புதிய வேளாண் சட்டங்களையும், விவசாயிகள் நலனுக்காகவே கொண்டுவந்துள்ளோம் என்று மோடி அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளோ, இது தங்கள் நலனுக்கானது அல்ல; கார்ப்பரேட்முதலாளிகளுக்கானது என்று குற்றம்சாட்டி வருகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலைக்குஅரசு உத்தரவாதம் அளிக்காது; மண்டிமுறை இருக்காது; விவசாயிகள் முன்கூட்டியேகார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்செய்துகொண்டு தங்களின் விளைபொருட் களை விற்பனை செய்துகொள்ள வேண்டும் என்பதெல்லாம் முதலாளிகள் சார்பு நடவடிக்கைகள் என்று தெரிவிக்கின்றனர். அந்தஅடிப்படையிலேயே தில்லியை முற்றுகையிட்டு 15 நாட்களுக்கும் மேலாக மாபெரும்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பெரும்பாலான ஊடகங்கள் விவசாயிகள் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், ‘ஐபிஎன்24’ செய்தியாளர் அகர்ஷன் உப்பல் போராட்டம் தொடர்பாக தொடர்ந்து விரிவான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார்.

நாட்டின் பெருமுதலாளியும், பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பருமான கவுதம் அதானி, ஹரியானா மாநிலத்தில், பல நூறு ஏக்கர்களை விலைக்கு வாங்கி, அவற்றில் வேளாண்  பொருட்களை சேமித்து வைக்கும்பிரம்மாண்ட குடோன்களை அமைத்து வருவதை கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி வீடியோ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார்.கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டு 3 மாதங்கள்தான் ஆகின்றன. ஆனால், அதற்குள்ளாகவே அதானி எவ்வாறு, பலநூறு ஏக்கர்களை கைப்பற்றி வேளாண் குடோன்களை அமைக்க ஆரம்பித்தார்? அல்லது அதானி போன்ற முதலாளிகள் சொல்லித்தான் மோடி அரசு புதிய வேளாண் சட்டங்களையே கொண்டு வந்ததா? என்று அகர்ஷன் உப்பலின் செய்திகள் கேள்விகளை எழுப்பின. அகர்ஷன் உப்பலின் செய்தி விவசாயிகள் போராட்டக் களத்திலும் முக்கிய விவாதமாக மாறியது. அம்பானி, அதானி தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்ற முழக்கங்களும் தீவிரமடைந்தன.இந்நிலையில்தான், அகர்ஷன் உப்பல் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு அவர் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், போதைப்பொருள் கடத்தல் கும்பல்தான் இதற்கு காரணம் என்பதை நம்ப முடியவில்லை என்றும் சமூகவலைதள ஆர்வலர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

;