india

img

விவசாயிகளைப் பாதுகாப்போம்... இந்தியாவைப் பாதுகாப்போம்.... புத்தாண்டில் உறுதிமொழி ஏற்க அறைகூவல்....

புதுதில்லி:
‘விவசாயிகளைப் பாதுகாப்போம்’, ‘இந்தியாவைப் பாதுகாப்போம்’ என்று 2021 புத்தாண்டு தினமான ஜனவரி 1 அன்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், ஹன்னன்முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புத்தாண்டு தினமான 2021 ஜனவரி 1 அன்று, விவசாயிகள் சங்கங்களின் கிளர்ச்சிப் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், தலித்துகள், தலித்துகளுக்கான அமைப்புகள் மற்றும் அனைத்து மனித உரிமைகள் அடிப்படையிலான வெகுஜன அமைப்புகள் மற்றும் குடிமக்கள் அனைவரும் கீழ்க்கண்டவிதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறைகூல் விடுக்கிறோம்.

புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் கூட்டத்தில் குழுமியிருக்கும் அனைவரும், தங்கள் கைமுஷ்டியை உயர்த்திக்கொண்டு, அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் காணப்படும் வாசகங்களை, வரிக்கு வரி படித்திட வேண்டும். முகப்புரையை படித்தபின் உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து அமைப்புகளும் தேசியக் கொடியுடனும், தங்கள் அமைப்பின் கொடியுடனும் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ஒலிபெருக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படாத இடங்களில் கை ஒலிபெருக்கி (hand-mike)களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.மக்களை அணிதிரட்டப்படுவதை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை கிராம/நகர/ஒன்றிய/மாவட்ட மையங்களில் மேற்கொள்ளலாம்.

அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரை
இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஓர் இறையாண்மை வாய்ந்த, சோசலிச, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி பெற்றுத்தரவும், கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் வழிபாட்டு உரிமை ஆகியவற்றைப் பெற்றுத்தரவும், தகுதி நிலைமையிலும் வாய்ப்புகளிலும் சமத்துவத்தையும் உறுதியாகக் கிடைக்கச்செய்திடவும்,  தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் விதத்தில் சகோதரத்துவத்தை அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் மேம்படுத்திடவும், விழுமிய முறைமையுடன் உறுதி எடுத்துக்கொள்கிறோம்.

உறுதிமொழி
இந்திய அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள வாசகங்களை எதார்த்தமாக்கிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள நாங்கள் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.நம்முடைய சுதந்திரப் போராட்ட போராளிகள் மற்றும் தியாகிகள் ஏற்படுத்திய தியாகங்களிலிருந்தும், தற்போது நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்தில் உயிர்நீத்துள்ள தியாகிகளின் தியாகங்களிலிருந்தும், உத்வேகம் பெற்று, மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் வரை அதற்கு எதிராக விவசாயிகள் நடத்திடும் போராட்டங்களுக்கு ஆதரவை நாங்கள் தொடர்கிறோம் என்றும் உறுதி எடுத்துக்கொள்கிறோம்.  விவசாயிகளையும், விவசாயத்தையும், கிராமங்களையும் கார்ப்பரேட்டுகளின் கைகளிலிருந்து பாதுகாத்திடவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், சுயசார்பையும்  பாதுகாத்திடவும், எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம் என்று நாங்கள் உறுதி எடுத்துக் கொள்கிறோம்.  

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்காகவும், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெறுவதற்காகவும், அனைத்து விவசாய உற்பத்திப் பொருள்களையும் உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு விலை வைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து கொள்முதலை உத்தரவாதப்படுத்தக்கூடிய சட்டத்தை அமல்படுத்துவதற்கும் எவ்விதத் தியாகத்திற்கும் எப்போதும் நாங்கள் தயாராக இருக்கிறோம் . விவசாயிகள் உயிர்பிழைத்திருந்தால் மட்டும்தான், இந்தியா ஜீவித்திருக்கும் என்றும், வலுவான ஒன்றாக மாறும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். (ந.நி.)

 

;