india

img

இந்தியா ஜனநாயக நாடு; கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு..... அரசியல் பிரச்சாரங்களை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது... ‘டூல்கிட்’ வழக்கில் டி.ஒய். சந்திரசூட் அமர்வு அதிரடி....

புதுதில்லி:
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக,காங்கிரஸ் ‘டூல்கிட்’ ஒன்றை உருவாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில் தேசியபுலனாய்வு முகமையின் (NIA) விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம்மறுத் துள்ளது. அரசியல் பிரச்சாரங்களை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது என்றும் அதிரடியாக கூறியுள்ளது.

“இந்தியாவில் கொரோனா 2-ஆவது அலை தீவிரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவின் மதிப்பைக் குறைக்கவும், பிரதமர் மோடியின் பிம்பத்தை சிதைக்கவும், சர்வதேச ஊடகங்களுடன் கூட்டுச்சேர்ந்து காங்கிரஸ் கட்சி சதியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக தனது கட்சியினருக்கு ‘டூல்கிட்’ (வழிகாட்டுதல்) ஒன்றை தயாரித்து வழங்கி இருக்கிறது என்று ஒன்றிய பாஜக அமைச்சர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். இதுதான் காங்கிரஸ் தயாரித்துள்ள ‘டூல்கிட்’ என்று, கைச்சின்னத்துடன் கூடிய ஆவணம் ஒன்றையும் பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா வெளியிட்டார். ஆனால், இந்த ‘டூல்கிட்’ பாஜக-வின்சதி என்று கூறிய காங்கிரஸ் கட்சி, போலீசிலும் புகார் அளித்தது. அதன்பேரில் ஜே.பி. நட்டா, ஸ்மிருதி இரானி, சம்பித் பத்ரா உள்ளிட்ட பலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.எனினும், காங்கிரஸ் உருவாக்கிய டூல்கிட் குறித்து தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு உத்தரவிட வேண் டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட்,எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சஷாங்க் சேகர் ஜா ஆஜராகி வாதாடினார். “காங்கிரஸ் டூல்கிட்டில் கூறப்பட்டுள் ளவை இந்தியாவுக்கு எதிராக உள்ளன.

‘இந்திய கொரோனா வகை’ என்ற வரி இந்துக்களுக்கும் எதிராக உள்ளது. எனவே, இதுதொடர்பாக ஐபிசி பிரிவு 13 மற்றும் கிரிமினல் சதித் திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். புகார்கள் நிரூபிக்கப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இதேபோல ஏனைய கட்சிகள், அமைப்புகள், பொது மக்கள் யாராக இருந்தாலும் அவர்களும் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “இந்தியா ஒரு ஜனநாயக நாடு, இது உங்களுக்குத் தெரியுமா?” என்று அதிரடியாக கேள்வி எழுப்பினார். “பல்வேறு வகையான அரசியல் பிரச்சாரங்களை ஒரு நீதிமன்றத்தால் எப்போதாவது கட்டுப்படுத்த முடியுமா?” என்றும்கேட்ட அவர், “இது போன்ற டூல் கிட்கள் எல்லாம் கருத்துரிமை தொடர்பானது. அரசியல் பிரச்சாரம், கொள்கை தொடர்பானது. இதில் எந்த தவறும் இல்லை. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதைப்படிக்க வேண்டாம். டூல்கிட் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினால் பார்க்க வேண்டாம்” என்றும் காட்டமாக கூறினார். மற்றொரு நீதிபதி எம்.ஆர். ஷா, “டூல்கிட் விவகாரத்தில் ஏற்கெனவே ஒருகுற்றவியல் விசாரணை நிலுவையில்உள்ளது. இது போன்ற விவகாரங்களுக்கு எல்லாம் சட்டப் பிரிவு 32-இன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது மனுதாரர் பிரிவு 32 ஐத் தவிர வேறு தீர்வுகளைப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். முடிவில், இதுபோன்ற அற்பமான காரணங்களுக்காக எல்லாம் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்ற நீதிபதிகள், இந்த வழக்கையும் விசாரிக்க முடியாது என்று நிராகரித்தனர்.

;