india

img

விவசாயிகளின் முகநூல், இன்ஸ்டா. பக்கங்கள் திடீர் முடக்கம்.... போராட்டச் செய்திகள் பரவுவதை தடுக்க பல்வேறு வகையிலும் மோடி அரசு முயற்சி?

புதுதில்லி:
தில்லியில் 25 நாட்களாக போராடிவரும் விவசாயிகள், தங்களது செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக ‘இன்ஸ்டாகிராம்’ மற்றும் முகநூல் பக்கங்களை பயன்படுத்தி வந்த நிலையில், அவை சுமார் 3 மணிநேரம் முடக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்திய விவசாயத் துறையையும், விவசாயிகள் நலனையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடகுவைக்கும் வகையில், மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புவலுத்து வருகிறது. நவம்பர் 26-ஆம்தேதி முதல், விவசாயிகள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக, தலைநகர் தில்லிக்குச் செல்லும் சாலைகளை பல லட்சம் விவசாயிகள் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக முற்றுகையிட்டுள்ளனர். வெட்ட வெளியில், இரவும் பகலுமாக சுமார் 6 டிகிரி செல்சியஸ் என்ற கடுமையான குளிருக்கும் இடையே நடக்கும் இந்த வீரஞ்செறிந்த போராட் டத்தில், இதுவரை 33 விவசாயிகள் தங்களின் உயிரை இழந்துள்ளனர். உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்தப் போராட்டம் நடந்து வருகிறது.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களின்போராட்டச் செய்திகளை வெளியிடுவதற்காக நடத்தி வந்த ‘கிசான் ஏக்தா மோர்ச்சா’ (Kisan Ekta Morcha) என்றபெயரிலான முகநூல் (Face book) பக்கமும், இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கமும் ஞாயிறன்று திடீரென முடக் கப்பட்டுள்ளது.

இந்த முகநூல் பக்கத்தின் வழியாகவே, விவசாயிகளின் போராட்ட நிகழ்வுகளை, உலகம் முழுவதும் உள்ள மக்கள் உடனுக்குடன் தெரிந்துவந்தனர். சுமார் 7 லட்சம் பேர் இந்த முகநூல் பக்கத்தை பின்தொடர்ந்தனர்.போராட்டக் குழுவின் தலைவர் களில் ஒருவரான, யோகேந்திர யாதவ், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில்தான் போராட்ட நிகழ்வுகளைநேரலையாக ஒளிபரப்பி வந்தார். திங்கட்கிழமை முதல் விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டமும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று அவர் அறிவித்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே, ஞாயிறன்று திடீரென விவசாயிகளின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.இந்த முடக்கம் விவசாயிகளை பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. தங்களின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவை தடுக்கவே, இதுபோன்ற வேலைகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.முகநூல் நிறுவனம், ஆட்சியாளர் களுக்கு துணைபோகிறதா? என்ற கேள்விகளையும் எழுப்பினர். சமூக வலைதளவாசிகளும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, சுமார் 3 மணிநேரம் கழித்து, விவசாயிகளின் முகநூல் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.“கிசான் ஏக்தா மோர்ச்சாவின் முகநூல் பக்கத்தை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம், இதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று முகநூல் நிறுவனம் தெரிவித்தது. எனினும், விவசாயிகளின் முகநூல் பக்கம் எதற்காக முடக்கப்பட்டது? என்பதை தெரிவிக்கவில்லை.

;