india

img

கூட்டம் கூடுவதால் மட்டுமே ஒன்றும் நடக்காதா? மக்கள் ஒன்று திரண்டால் உங்கள் ஆட்சியே மாறும்... நரேந்திர சிங் தோமருக்கு ராகேஷ் திகாயத் பதிலடி.....

சோனிபட்:
மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள நாசகர புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லியில் நடத்தி வரும் போராட்டம் 3 மாதங்களை நெருங்கியுள்ளது. 

விவசாயிகள் 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டும், மத்திய அரசு தீர்வை நோக்கி பேச்சுவார்த்தையை நகர்த்தவில்லை. இதனால் போராட்டம் 90 நாட்களைத் தொட்டுள்ளது. நாளுக்கு நாள் தீவிரமடைந்தும் வருகிறது.இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், புதிய சட்டங்களில் எந்த வழிமுறைகள் விவசாயிகளுக்கு எதிராக இருக்கின்றன என்பதை அரசுக்கு விவசாயிகள் தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறியதுடன், வெறும்கூட்டத்தை கூட்டுவது மட்டும் சட்டங்களை திரும்பப்பெற வழிவகுக்காது என்று விவசாயிகளை விமர்சித்திருந்தார்.

இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்நிலையில், நரேந்திர சிங் தோமருக்கு பதிலளிக்கும் வகையில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத், ஹரியானாவின் சோனிபட்டில் நடந்த மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பேசியுஉள்ளார். அதில், “பொதுமக்கள் ஒன்று கூடுவது மட்டும் சட்டங்களை ரத்து செய்ய வழிவகுக்காது என்று அமைச்சர் கூறுகிறார். அவர் என்ன நினைப்பில் பேசுகிறார் என தெரியவில்லை. மக்கள் ஒரே நோக்கத்திற்கு ஒன்று கூடும்போது, ஆட்சிகளே மாறியிருக்கின்றன” என்று பதிலடி கொடுத்துள்ளார். மக்களின் போராட்டங்களுக்கு முன்னால், ஆட்சியாளர்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல!” என்று விளாசியுள்ளார்.

“விவசாயிகள் தங்கள் சொந்த விளைபொருட்களையே அழிக்க தயாராக இருக்கும்போது, எதுவும் விவசாயிகளை தடுத்து விட முடியாது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் திகாயத் எச்சரித்துள்ளார்.“வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஏராளமான கேள்விகள் உள்ளன. வெறும் வேளாண் சட்டங்கள் மட்டுமல்ல, மின்சார திருத்த மசோதா, விதை மசோதா என அனைத்தைப் பற்றியும் கேள்விகள் உள்ளன. இந்தப் போராட்டம் விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டம் மட்டும் இல்லை. ஏழைகள், தினக்கூலிகளுக்கான போராட்டமும் ஆகும்.இந்தச் சட்டத்தை நாம் விட்டுவிட்டால், வரும் காலங்களில் இதுபோல இன்னும் பல சட்டங்கள் வரும். அவை ஏழைகளை முற்றிலுமாக அழித்துவிடும். குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யச்சட்டம் இயற்றப்பட்டால் அது விவசாயிகளைப் பாதுகாக்கும். இந்தப் போராட்டம் விவசாயிகளின் உரிமைகளுக்கான போராட்டம்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்வரை, விவசாயிகளின் போராட்டம் தொடரும். விவசாயிகளால் வயல்வெளிகளிலும், போராட்டக்களத்திலும் ஒரே நேரத்தில் பங்களிப்பு செய்ய முடியும். அது மட்டுமின்றி அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்களை தியாகம் செய்யவும் விவசாயிகளால் முடியும்.இவ்வாறு ராகேஷ் திகாயத் பேசியுள்ளார்.

;