india

img

2 பெரு முதலாளிகளிடம் இந்தியாவை அடகு வைப்பதா? பொருளாதார ஆய்வறிக்கை பற்றி பிருந்தா காரத் சாடல்

புதுதில்லி:
கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தழிக்கும் பொருளாதாரக் கொள்கைகளையும் சட்டங்களையும் மோடி அரசு பின்பற்றுகிறது. அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கவலைகளும் கோரிக்கைகளும் மிகச்சரியானவை என்பதை உணர்த்தும் விதத்தில் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கை அமைந்திருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. ஜனவரி 29 அன்று குடியரசுத் தலைவர் உரையுடன் துவங்கிய இந்தக் கூட்டத்தில்முதல் நாளன்றே பொருளாதார ஆய்வறிக்கை 2020-21 சமர்ப்பிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் தொடர்ச்சியாக பிப்ரவரி 1 திங்களன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.மத்திய பட்ஜெட்டின் முன்னோட்டமாக உள்ள பொருளாதார ஆய்வறிக்கை, இந்திய மக்களின் துன்ப, துயரங்களை புறக்கணித்துவிட்டு, மோடி அரசின் இரண்டே இரண்டு கூட்டுக்களவாணிகளை மேலும் மேலும் செல்வந்தர்களாக மாற்றும் விதத்தில் அமைந்திருக்கிறது. இதுதொடர்பாக பிருந்தா காரத் எழுதியுள்ள கட்டுரையில், “மோடி அரசின் அரசியல் பாதுகாப்பு அறிக்கையாக முன்மொழி யப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையானது, கொடிய நோய்த் தொற்று பரவல் பாதிப்பால் துயரத்தின்பிடியில் சிக்கியுள்ள கோடிக்கணக் கான தொழிலாளர்கள் மற்றும் எளியமக்களுக்கு எந்தவிதமான நம்பிக்கை யையும் அளிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் மரணத்தின்பிடியில் சிக்கிய அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள்; பல நூற்றுக்கணக் கானோர் இறந்தே போனார்கள்; எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லா
மல் சில மணி நேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிராதராவாக தவித்து நின்றார்கள். இந்தக் கொடிய நிலைமை பற்றி பொருளாதார ஆய்வறிக்கை கள்ள மவுனம் சாதிக்கிறது; மாறாக மோடி அரசு தன்னைத்தானே பாராட்டி வாழ்த்திக் கொள்கிறது என பிருந்தா காரத் சாடியுள்ளார்.

நாட்டின் மக்கள் தொகையில் அடிமட்டத்தில் உள்ள 70 சதவீதமான  95.3கோடி மக்களின் சொத்துக்களை போல நான்கு மடங்கு அதிகமான சொத்துக்களை வெறும் ஒரு சதவீதபெருமுதலாளிகள் குவித்து வைத்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள பிருந்தா காரத், பெரும் பணக்காரர்கள் மீது எந்தவிதத்திலும் வரி விதிக்கப்போவதில்லை என்பதை உணர்த்தும்விதமாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு களை ஒழித்துவிட்டால் மட்டும் வறுமைஒழிந்துவிடாது என்று எகத்தாளம் பேசுகிறது பொருளாதார ஆய்வறிக்கை எனவும் கடுமையாக சாடி யுள்ளார். 

பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில் வருமானம் அதிகரித்தால்தான் நாடு முன்னேறும் என்று ஆய்வறிக்கையில் கூறியிருப்பது முற்றிலும் கார்ப்பரேட்டுகளின் நலன்களையும் வருமானத்தையும் அதிகரிப்பது என்றபொருளில்தான் என விவரித்துள்ள பிருந்தா காரத், ஏழை, எளிய மக்களிடமிருந்து பறித்து பெரும் செல்வந்தர்களை மேலும் பெரும் கோடீஸ்வரர் களாக மாற்றுவதே பட்ஜெட்டின் இலக்காக இருக்கப்போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

;