india

img

வங்கத்தில் திரிணாமுல் வன்முறை.... விசாரணையை துவங்கியது சிபிஐ....

கொல்கத்தா:
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து  மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய  வன்முறை குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.  ஆகஸ்ட் 20 வெள்ளிக்கிழமையன்று விசாரணையை தொடங்கியது. மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியை தக்கவைத்தது.  தேர்தலுக்கு பின்னர் திரிணாமுல் குண்டர்கள் அவர்களது கட்சிக்கு வாக்களிக்காத மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட இடதுசாரிக்கட்சியினர் மீதும் அவர்களது வீடுகள் மீதும் கொடூரத் தாக்குதலை நடத்தினர். காங்கிரஸ்,பாஜக கட்சியினரையும் தாக்கினர். பெண்களிடம் அத்துமீறி அவர்களையும் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

திரிணாமுல்லின் வன்முறை தொடர்பான வழக்கினை  கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் பிந்தல் தலைமையிலான ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஆகஸ்ட் 19 அன்று விசாரணை மேற்கொண்டது. பின்னர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர்  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற  வன்முறைகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கொலை, பாலியல் வன்கொடுமை என அனைத்தையும் விசாரிக்க வேண்டும்.  அனைத்து விசாரணைகளும் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெறும் என்று தெரிவித்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ விசாரணையை துவங்கியுள்ளது.

;