india

img

கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்.... இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி....

திருவனந்தபுரம்:
கேரளத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்)  மகத்தான வெற்றியைபெற்றுள்ளது. எல்டிஎப் 5 மாநகராட்சிகள், 36 நக ராட்சிகள், 10 மாவட்டப்பஞ்சாயத்துகள், 108  ஒன்றிய பஞ்சாயத்துகள், 515 கிராம பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது. பொய்யான பிரச்சாரங்களையும் அவதூறான கதைகளையும் நிராகரித்து மக்கள் எல்டிஎப்உடன் உறுதியாக நின்று கேரளத்தை மேலும் சிவப்பாக்கியுள்ளனர்.   

கேரள உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), காங்கிரஸ்கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆகியவை போட்டியிட்டன. கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி 6 மாநகராட்சிகள், 14 மாவட்ட பஞ்சாயத்துகள், 86 நகராட்சிகள், 152 ஒன்றிய (ப்ளாக்) பஞ்சாயத்துகள், 941 கிராம பஞ்சாயத்துகளுக்கான உறுப்பினர்களை  தேர்வு செய்ய மக்கள் வாக்களித்தனர். இதில் மொத்தம் 76.17 சதவிகித வாக்குகள் பதிவாகின.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம்பதிவான வாக்குகள் டிசம்பர் 16 புதன்கிழமையன்று காலை 8 மணி முதல் 244 மையங்களில் எண்ணப்பட்டன. அரை மணி நேரத்திலிருந்தே முடிவுகள் வெளிவரத் தொடங்கின.

மாநகராட்சிகள்
திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 52 வார்டுகளில் எல்டிஎப் வெற்றி பெற்றது. என்டிஏ  33, யுடிஎப் 10,மற்றவர்கள் 3. கொல்லம் மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 39 வார்டுகளை எல்டிஎப் கைப்பற்றியது. யுடிஎப் 9, என்டிஏ 6. மற்றவர்கள் 1. எர்ணாகுளம் மாநகராட்சியின் 74 வார்டுகளில் 34 இடங்களில் எல்டிஎப் வெற்றி பெற்றுள்ளது. யுடிஎப் 31, என்டிஏ 5, மற்றவர்கள் 4. திருச்சூர் மாநகராட்சியின் 55 வார்டுகளில் 24 இல் எல்டிஎப் வெற்றி பெற்றது. யுடிஎப் 23,என்டிஏ 6, மற்றவர்கள் 1. கோழிக்கோடு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 75 வார்டுகளில் 48 இடங்களில் எல்டிஎப் வெற்றி பெற்றது. யுடிஎப் 14, என்டிஏ 7, மற்றவர்கள் 6, கண்ணூர் மாநகராட்சியின் 55 இடங்களில் 28 வார்டுகளை யுடிஎப் கைப்பற்றியது. எல்டிஎப் 14, என்டிஏ 1, மற்றவர்கள் 1. 86 நகராட்சிகளில் எல்டிஎப் 36, யுடிஎப் 33, பாஜக 1, மற்றவர்கள்  6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மாவட்டப் பஞ்சாயத்து
மொத்தம் உள்ள 14 மாவட்டப் பஞ்சாயத்துகளில்  10 மாவட்டங்களில் எல்டிஎப்பும், 3 மாவட்டங்களில் யுடிஎப்பும் பெரும்பான்மை பெற்றுள்ளன. ஒரு இடத்தில் சமநிலையில் எல்டிஎப்பும் யுடிஎப்பும் உள்ளன. 152 ஒன்றிய பஞ்சாயத்துகளில் எல்டிஎப் 111, யுடிஎப்  41 ஒன்றியங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளன. 941 கிராம பஞ்சாயத்துகளில் எல்டிஎப் 508, யுடிஎப் 374, பாஜக 24, மற்றவர்கள் 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்து
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றுள்ள இடது ஜனநாயக முன்னணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:

கேரள மாநிலத்தில் கடந்த நான்கரை ஆண்டு காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயகமுன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலத்தை இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் வளர்ச்சிப் பாதையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி எடுத்துச் செல்வதால் நாடு தழுவிய பாராட்டுதலைப் பெற்று வருகிறது. கோவிட் -19 பெரும் தொற்று காலத்தில் இடது ஜனநாயக முன்னணியின் செயல்பாடு சர்வதேச அளவிலும் பாராட்டுதலை பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் பொய்யான, அவதூறுகளுக்கு மத்தியில் மத்திய அரசு, மாநில இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த தனது கட்டுப்பாட்டிலுள்ள புலனாய்வுத்துறைகளைப் பயன்படுத்தி பல முயற்சிகளை செய்துள்ள நிலையில், ஊடகங்களும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக, தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில், தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சி தேர்தலில் கேரள மக்கள் பினராயி விஜயன் தலைமையில் உள்ள இடதுஜனநாயக முன்னணி அரசின் மீது நம்பிக்கை வைத்து, இடது ஜனநாயக முன்னணிக்கு மகத்தான வெற்றியை வாரி வழங்கியுள்ளனர்.எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோடியாக, உள்ளாட்சித் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி பெற்ற மகத்தான வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணிக்கும்,தலைமை தாங்கி சிறப்பான செயல்பாட்டின் மூலம் இவ்வெற்றியைப் பெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கும் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;