india

img

கொரோனா : 50 சதவிகிதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இலக்கை எட்டியது கேரளா 

கேரளாவில் 50 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் தொடக்கம் முதலே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,  தடுப்பூசி செலுத்தத் தகுதியானவர்களில் 50 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், கேரளத்தில் தடுப்பூசி செலுத்தத் தகுதியான 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்தியுள்ளதை அடுத்து கேரள அரசு சாதனை படைத்துள்ளது.  18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94.58 சதவிகிதம் (2,52,62,175) பேர் முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அவர்களில் 50.02 சதவிகிதம் (1,33,59,562) பேர் இரண்டு தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.  அதே நேரத்தில் நாடு முழுவதும் 18 வயதுக்கு  மேற்பட்டவர்களில்  77.37 சதவிகிதம் பேர் மட்டுமே முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 33.39 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு டோஸையும் பெற்றுள்ளனர். 

திட்டமிடப்பட்ட சரியான முறையில் செயல்பட்டதால் மட்டுமே இந்த இலக்கை அடைய முடிந்தது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் 100 சதவிகிதம் பேரும் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர். சிலர் சரியான நேரத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவதில்லை. அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நினைவூட்டப்படுகிறது. சரியான நேரத்தில் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

;