ஹிஜாப் அணிய விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
கா்நாடகத்தில் ஹிஜாப் அணிவது தொடா்பான சா்ச்சை எழுந்ததையடுத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர அறிவுறுத்தி பிப்.5 ஆம் தேதி கா்நாடக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதை எதிா்த்து உடுப்பி அரசு மகளிா் பி.யூ. கல்லூரி முஸ்லிம் மாணவிகள் உள்ளிட்ட பலரும் தாக்கல் செய்திருந்த மனுக்களை கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி காஜி ஜெய்புனிசா மொய்தீன் குறித்து கொண்ட அமா்வு, பிப்.10 ஆம் தேதி முதல் தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கில் இறுதித் தீா்ப்பு வரும் வரை ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட எதையும் அணிந்து வரை தடை விதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தேவதத் காமத், சஞ்சய் ஹெக்டே, ரவிவா்ம குமாா், யூசுப் முச்சலா உள்ளிட்ட பலா் வாதிட்டனா். ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிகளுக்கு வருகைதர முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். ஹிஜாப் அணிவது மத நம்பிக்கையின் ஒரு பகுதி என்பதால், அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(ஏ)இன்படி ஹிஜாப் அணிவது தனிப்பட்ட உரிமை. எனவே, ஹிஜாப் அணிவதற்கு சீருடை சட்டம் தடையாக இருக்க முடியாது என்று மனுதாரா்களின் வழக்கறிஞர்கள் வாதிட்டனா்.
இதனிடையே, அரசு தலைமை வழக்கறிஞர்கள் பிரபுலிங் கே.நவடகி வாதிடுகையில், ‘சீருடை தொடா்பாக அரசு புதிய ஆணை எதையும் பிறப்பிக்கவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஹிஜாப் அணிவது கட்டாய மத வழக்கம் கிடையாது’ என்று குறிப்பிட்டாா்.
பிப்.10 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் 11 நாள்களுக்கு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இறுதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். அதனைதொடர்ந்து இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணி விதித்த தடை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹிஜாப் அணி விதித்த தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் 6 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இன்று பெங்களூரு, மங்களூரு, கடலோர மாவட்டங்கள் உள்பட மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகர் முழுவதும் இன்று காலை முதல் வருகிற 21 ஆம் தேதி வரை ஒரு வாரம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.