india

img

கர்நாடகத்தில் 30% பள்ளி மாணவர்கள் வேலைக்குச் செல்லும் துயரம்.... கொரோனாவால் குடும்பங்களில் ஏற்பட்ட வறுமை....

பெங்களூரு:
கர்நாடகத்தில், கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட வறுமையைச் சமாளிக்க, 30 சதவிகித பள்ளி மாணவர்கள், குழந்தைத் தொழிலாளர்களாக மாறியிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கொரோனா அதிகரிப்பால், 2019 - 20 கல்வியாண்டு இறுதியிலிருந்து கர்நாடகாவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முதல் அலை குறைந்த பின், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றி, 2021 ஜனவரி முதல் எஸ்எஸ்எல்சி, மற்றும் பியூசி வகுப்புகள் அங்கு நடத்தப்பட்டன. 

எனினும், இரண்டாம் அலையின் தாக்கத்தால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டுள்ளதால், மாணவர்கள் பலரும் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிக் கொண்டிருப்பதுடன், குழந்தைத் திருமணங்களும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்திலுள்ள 32 கல்வி மாவட்டங்களில் ஆறு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில், 30 சதவிகித மாணவர்கள், தங்களின் குடும்பத்துக்கு உதவி செய்யும் வகையில், தொழிலாளர்களாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.மாணவர்களில், 30 சதவிகிதம் பேர், கல்வியை இரண்டாம் பட்சமாக்கி விட்டு, குடும்பத்துக்கு உதவி செய்ய பணியில் சேர்ந்துள்ளதாக கூறும் அதேநேரத்தில், 40 சதவிகித மாணவர்கள், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைச் சுட்டிக்காட்டும் கல்வியியல் நிறுவன பேராசிரியர்கள், “இதே நிலை தொடர்ந்து கொண்டிருந்தால், மாநிலத்தின் கல்வித்தரம் குறைவதுடன், பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடும்” என்று தெரிவித்துள்ளனர்.

;