india

img

உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வன்முறை.... முதியவர் அடித்துக் கொலை; பெண் வேட்பாளரின் சேலை கிழிப்பு...

லக்னோ:
உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஏப்ரல் 15 அன்று துவங்கி 4 கட்டங்களாக நடந்து முடிந்தது. வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது பஞ்சாயத் தலைவர்கள், மாவட்ட- மண்டல அளவிலான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் துவங்கியுள்ளது. 

கிராமப்புற உள்ளாட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 3050 உறுப்பினர்களில் பாஜகவிற்கு 768 உறுப்பினர்கள் மட்டுமே கிடைத்தனர். பாஜக-வைக் காட்டிலும் அதிகமாக சமாஜ்வாதி (759 உறுப்பினர்கள்), பகுஜன் சமாஜ் கட்சிக்கு (319 உறுப்பினர்கள்), காங்கிரஸ் (125 உறுப்பினர்கள்), ராஷ்ட்ரிய லோக் தளம் (69 உறுப்பினர்கள்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றன. இவர்கள் தவிர சுயேட்சைகள்  1,071 இடங்களைக் கைப்பற்றினர். பாஜக-வின் கோட்டைகளான அயோத்தி, வாரணாசி, மதுரா மற்றும் கோரக்பூர் ஆகிய மாவட்டங்களிலேயே பாஜக படுதோல்வி அடைந்தது. இது பாஜக தேசியத் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் தான்தான் முதல்வர் வேட்பாளர் என்ற கனவில் இருந்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கும் இது நெருக்கடியாக மாறியது.இதையடுத்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களில் எப்படியாவது வெற்றிபெற்று விட வேண்டும் என்று திட்டம் போட்ட உ.பி. பாஜக-வினர், பல்வேறு தில்லு-முல்லுகளை அரங்கேற்றி, மாவட்டப் பஞ்சாயத்து தேர்தலில்- 75-க்கு 67 இடங்களைக் கைப்பற்றினர். தற்போது மண்டல அளவிலான தேர்தலிலும்  பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.மண்டலப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தலில்  தொகுதி மேம்பாட்டுக் குழு உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தகுதி வாய்ந்தவர்கள் என்ற நிலையில், அவர்களை கடத்திச் செல்லும் வேலையிலும் பாஜக-வினர் இறங்கியுள்ளனர். அந்த வகையில், தினப்புர்வா கிராமத்தில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் சரிதா யாக்யாசைனிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு, யாதுரை தேவி என்ற தொகுதி மேம்பாட்டு குழுஉறுப்பினரை வீட்டுக்கே சென்று பாஜகவினர் மிரட்டியுள்ளனர். அவரைக் கடத்தவும் முயன்றுள்ளனர்.

இதனை யாதுரை தேவியின் உறவினர் மாயாராம் (60) என்பவர் தடுக்க முயன்றபோது ஆத்திரமடைந்த பாஜக-வினர் தங்களது கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் மாயாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேபோல லக்கிம்பூர் கேரியின் பாஸ்க்வான் கிராமத்தில்  சமாஜ்வாதி ஆதரவு பெற்ற பெண் வேட்பாளர் ரித்து சிங் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு சென்றுள்ளார். அவரை முன்மொழிவதற்கு அனிதா தேவி என்பவரும் உடன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜக-வின் மக்களவை எம்.பி. ரேகா வர்மாவும், அவரது ஆதரவாளர்களும் ரித்து சிங்கை மனுத் தாக்கல் செய்யவிடாமல் ஆவணங்களை பறித்துள்ளனர். ரித்து சிங் அவர்களுடன் போராடவே, அவரது மன உறுதியைக் குலைக்கும் வகையில் அவரது சேலையைக் கிழித்தெறிந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ரேகா வர்மாவிற்கு நெருக்கமான யாஷ் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி, 2 ஆய்வாளர்கள் மற்றும் 3 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 

;